Published:Updated:

எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது சரியா?- நிபுணர்கள் பார்வையில் பட்ஜெட் 2020

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020

நல்ல நிலையில் இயங்கிவரும் எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதற்காக ஐ.பி.ஓ வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். வங்கிகளைப் போல, இன்ஷூரன்ஸ்துறை சார்ந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது சிக்கலான முடிவு

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலானவுடனேயே அது குறித்து நிபுணர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தோம். அந்தக் கலந்துரையாடலைத் தலைமையேற்று நடத்தினார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். அதில் நிபுணர்கள் பகிர்ந்துகொண்டவை இங்கே...

நிதி ஆலோசகரும் மை அஸெட் கன்சாலிடேஷன் நிறுவனத்தின் இயக்குநருமான சுரேஷ் பார்த்தசாரதி பேசும்போது, "தனிநபர் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வாய்ப்புகளைத் தந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த வருமான வரி வரம்புகளின்படி, அவற்றுக்கான வரிச் சலுகைகள், வரிக் கழிவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்தலாம். இரண்டாவது, தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி வரம்புகளின்படி வரி செலுத்தலாம். ஆனால், தற்போது குறைக்கப்பட்டிருக்கும் வருமான வரி வரம்புகளின்படி வரி செலுத்தினால், அதற்கு வரிச் சலுகை, வரிக் கழிவு எதுவும் கிடையாது. எனவே, இரண்டையும் கணக்கீடு செய்து பார்த்து, எது அதிக பயனுள்ளதாக இருக்கிறதோ அதைத் தேர்வுசெய்யலாம்" என்றார்.

எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது சரியா?- நிபுணர்கள் பார்வையில் பட்ஜெட் 2020

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃப்ராங்கோ "அனைத்தையும் தனியார்மயமாக்குவதை நோக்கியே இந்த அரசின் சிந்தனை இருக்கிறது. ஐ.டி.பி.ஐ வங்கி, தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்க உருவாக்கப்பட்டது. அதைச் சாதாரண வணிக வங்கியாக மாற்றியதே தவறு. அதன் மேல்மட்ட நிர்வாகக்குழு திறம்படச் செயல்படாததால்தான் அந்த வங்கி நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. தற்போது அதை முழுமையாகவே தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது தவறான முடிவு.

அதுமட்டுமல்ல, நல்ல நிலையில் இயங்கிவரும் எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதற்காக ஐ.பி.ஓ வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். வங்கிகளைப் போல, இன்ஷூரன்ஸ்துறை சார்ந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது சிக்கலான முடிவு. எல்.ஐ.சி-யின் க்ளெய்ம் விகிதம் தனியார் நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதத்தைவிட அதிகம். தனியாருக்கு மாற்றப்பட்டால் வாடிக்கையாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் தானாக முன்வந்து க்ளெய்ம் செட்டில்மென்ட் தந்தது. இது போன்ற சூழல்களில்தான் அரசு நிறுவனங்களின் தேவை புரியும். அதேபோல கல்வித் துறையிலும் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகள் வந்துள்ளன. கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற அனைத்தையும் இலவசமாகச் செய்து தர வேண்டும்" என்றார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2SasaJT

ஏற்றுமதியாளரும் புளூபாரத் எக்ஸிம் பி.லிட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான கே.எஸ்.கமாலுதீன் ''கிராமப்புறங்களிலுள்ள பெண்களின் வளர்ச்சிக்காக 'தான்யலட்சுமி' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். 'அவர்கள் விதைகளைச் சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் ஈருபடுவார்கள்' எனச் சொல்லியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. பால், பழங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லத் தனி ரயில்கள் இயக்கப்படும்; 'கிருஷி உடான்' என்ற புதிய திட்டத்தில் தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாயப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்; விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்; சோலார் பம்புசெட்டுகள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்குக் கடனுதவி போன்ற பல திட்டங்களை வரவேற்கலாம்" என்றார்.

பங்குச் சந்தை நிபுணரும், ஓரியன்டல் ஸ்டாக்ஸ் உரிமையாளருமான வ.நாகப்பன் கூறும்போது, "எல்.ஐ.சி நிறுவனத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான பங்குகளில் ஒரு பகுதி புதிய பங்கு வெளியீட்டின் மூலம் பங்குச் சந்தையில் விற்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் அனைவருக்கும் தெரிந்த நிறுவனம் என்பதால், இந்தப் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் வரவேற்பு இருக்கும். 'கடன் பத்திரங்கள் மூலம் அரசுக்கு நிதி திரட்டப்படும்' என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சங்களுள் ஒன்று" என்றார்.

எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது சரியா?- நிபுணர்கள் பார்வையில் பட்ஜெட் 2020

இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களைப் பேசிய 'நவீன்ஸ்' ஆர்.குமார், ''எதை நோக்கிப்போகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இந்த பட்ஜெட் இருப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டப்படி நகர்ப் பகுதிகளில் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் மானியம் போதுமானதாக இல்லை. சொந்த வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வருமான வரிச் சலுகையும் போதுமானதாக இல்லை. அவற்றை அதிகரிக்க வேண்டும். பொருளாதார மந்தநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. இதனால் 40% பேருக்குமேல் வேலையிழப்பைச் சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் ரியல் எஸ்டேட்துறை மீண்டெழுவது முக்கியம். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதற்கான முன்னெடுப்பு எதுவுமே தெரியவில்லை" என்றார்.

- மத்திய பட்ஜெட் தொடர்பான முழுமையான கலந்துரையாடலை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > பட்ஜெட் 2020 சாதகங்கள்... பாதகங்கள்! - நிபுணர்கள் பகிர்வு https://www.vikatan.com/government-and-politics/budget/discussion-about-union-budget-2020

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

பின் செல்ல