Published:Updated:

இரண்டாகப் பிரிந்தது காஷ்மீர்...! இரு தரப்பு கருத்து என்ன?!

இதன் சாதகங்களையும் பாதகங்களையும் அவரவரின் அரசியல் அறிவுக்கு ஏற்றபடி முன்வைத்துத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

காஷ்மீர்
காஷ்மீர் ( விகடன் )

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்த மத்திய அரசின் சட்டரீதியான நகர்வுகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்தான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்த கணத்திலிருந்தே இதன் சாதகங்களையும் பாதகங்களையும் அவரவரின் அரசியல் அறிவுக்கு ஏற்றபடி முன்வைத்துத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் இதன் இரண்டு முனைகளையும் பற்றி தெரிந்துகொள்ள அரசியல்ரீதியாக இருவேறு எல்லைகளில் நின்று உரையாடும் இருவரிடம் பேசினேன்.

பானுகோம்ஸ்
பானுகோம்ஸ்
அரசியல் விமர்சகர்

அரசியல் விமர்சகர் பானுகோம்ஸிடம் பேசினேன்... ``அன்றைய சூழ்நிலையில் காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கியதுதான் 370 வது சட்டப்பிரிவு. அதை எழுபது ஆண்டுகளாக நீட்டிக்க வைத்ததற்குக் காரணம், அம்மக்களை வைத்து வாக்குவங்கி அரசியல் செய்வதற்குத்தான்.

இதனால், காஷ்மீர் மக்கள் சந்தித்த இயல்பான வாழ்க்கை இழப்பு, உயிரிழப்பு, இந்திய அரசு சந்தித்த பொருளாதார இழப்பு, ராணுவம் சந்தித்த உயிரிழப்பு, நம்முடைய இந்தப் பிரச்னையை வைத்து வெளிநாடுகள் செய்யும் அரசியல் தலையீடு இவையெல்லாம் மிகப்பெரியது. முதன்முறையாக இப்போதைய பா.ஜ.க அரசு அதைத் தகர்த்திருக்கிறது. அரசாங்கம் ஒரு சிறிய ஆணையிட்டு அதை ஜனாதிபதியின் ஒப்புதல் மூலமாகவே செய்ய முடியுமெனில் இவ்வளவு காலம் மற்ற கட்சிகள் செய்த அரசியல் விளையாட்டுகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

காஷ்மீர்
காஷ்மீர்

அதேபோல பா.ஜ.க அரசும் நேற்று நினைத்து இன்று இந்த முடிவை அறிவிக்கவில்லை. ஓர் ஆணை மூலமாகவே இச்சட்டத்தை நீக்க முடியுமென்றாலும் பா.ஜ.க அரசு இதுகுறித்து மிகப்பெரிய களஆய்வைச் செய்திருக்கிறது.

கடந்த முறை மோடி அரசு வெற்றிபெற்றபோது காஷ்மீரில் உள்ள முக்கியக் கட்சியான பி.டி.பி உடன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்ததே அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்குத்தான்.

மோடி காஷ்மீர்
மோடி காஷ்மீர்

வார்டு வாரியாக மக்களின் மனநிலையைச் சேகரித்தார்கள். 370-வது சட்டப்பிரிவை நீக்குவதை ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீர் மக்களும் எதிர்க்கிறார்களா அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் எதிர்க்கிறார்களா என ஆராய்ந்தார்கள். அதில் ஒரு நான்கு தொகுதி மக்கள்தான் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவர, அம்மக்களுக்கான தீர்வுகளுடன்தான் இந்த முடிவுக்கு பா.ஜ.க அரசு வந்திருக்கிறது. சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு சர்ஜரி போலத்தான் இதைப் பார்க்கிறேனே தவிர பிரச்னையாக இல்லை’’ என்றார் பானுகோம்ஸ்.

தி.மு.க பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் இதற்கு எதிரான கருத்துகளை முன் வைத்தார்... ``இந்த 370-வது சட்டப்பிரிவு தற்காலிகமாகக் கொடுக்கப்பட்ட ஒரு வழிமுறையெல்லாம் கிடையாது. அல்லது தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கொடுத்த வாக்குறுதியும் அல்ல. அரசியலைமைப்புச் சட்டத்தின் வாயிலாக இந்திய அரசு, கொடுத்த வாக்குறுதி இது.

மனுஷ்யப்புத்திரன்
மனுஷ்யப்புத்திரன்
விகடன்

அன்றைக்கு இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைகிறது என்கிற முடிவை எடுத்தோம். இது அரசியல் சட்டம் காஷ்மீரிகளுக்கு கொடுத்த வாக்குறுதி. 370-வது சட்டப்பிரிவினால் காஷ்மீரிகள் எந்த விதத்திலும் இந்தியர்களிடமிருந்து விலகியிருக்கவில்லை.

தீவிரவாத அச்சுறுத்தல் மிக மோசமாக இருந்த சூழலில்கூட மக்கள் வந்து ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்திய அரசியல் சாசனத்தை மதித்துச் செயல்பட்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் தேர்தல்
காஷ்மீர் தேர்தல்
விகடன்

அப்படியிருக்க அவர்களை இரண்டு மூன்றாகப் பிரிக்க வேண்டிய அவசியமென்ன... இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிளவு ஏற்படுத்தி, இஸ்லாமியர்களை ஒரு இன்செக்யூரிட்டிக்குள் தள்ள வேண்டுமென்பதுதான் பா.ஜ.க-வின் நோக்கம்.

இப்போது ஏற்பட்டிருக்கிற இந்த முடிவென்பது காஷ்மீர் பகுதிகளில் மிகப்பெரிய அளவுக்குக் கலவரத்தையும், மத மோதல்களையும், இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையையும் உருவாக்கக்கூடிய அபாயங்கள் இருக்கிறது. மத்திய அரசு காஷ்மீரில் தூண்டிவிட்டிருக்கிற ஒரு போராகத்தான் இதைப் பார்க்கிறேன்.

காஷ்மீர்
காஷ்மீர்
Vikatan

காஷ்மீருக்கு வெளியே இருப்பவர்கள் காஷ்மீருக்குச் சென்று சொத்துகள் வாங்க முடியாது. காஷ்மீரின் பொருளாதாரத்தைக் காஷ்மீரே கட்டுக்குள் வைத்திருக்கிறது. இப்போது அந்தச் சிறப்பு அந்தஸ்தை நீக்கியிருப்பதன் மூலம் கார்ப்பரேட் லாபி, முக்கியமாக குஜராத்திகளை மையமாகக் கொண்ட நார்த் இன்டியன் லாபி அங்கே காலூன்றும்.

காஷ்மீரைப் பொருளாதார ரீதியாக கையகப்படுத்த நினைக்கும். காஷ்மீரில் விளையக்கூடிய குங்குமப்பூவில் ஆரம்பித்து காஷ்மீருக்கே உரித்தான தனித்துவங்களை, வளங்களை மற்றும் இயற்கைச்சூழலை வியாபாரமாக்க தங்கள் அசுரக் கரங்களை விரிக்கத் தொடங்குவார்கள். அதற்கு வழிவகை செய்யும் ஒரு திட்டம்தான் இந்தச் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.

kashmir
kashmir

இதில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தற்போதைய சூழலில் இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச அறிக்கைகள் மிகத் தெளிவாக இதைச் சொல்லுகின்றன. சுதந்தர இந்தியாவில் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி இதுவரை நடந்ததே கிடையாது. இந்தச்செய்தி மக்களிடம் சென்று தங்களின் இயலாமை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அதுதான் மிக முக்கியமான காரணமே தவிர காஷ்மீர் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல" என்றார்.