Published:Updated:

ஆதார் எண்போல் தமிழகத்தில் ‘மக்கள் ஐடி’... அரசியல் உள்நோக்கம் கொண்டதா... பின்னணி என்ன?!

மக்கள் ஐடி

``சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக ஊழலால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய்களை மீட்டது பாஜக. இதற்கு அவசியமாக இருந்த ஆதாரைப் பயன்படுத்த மறுப்பது ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை உருவாக்க திமுக அரசு தயாராக இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது."

ஆதார் எண்போல் தமிழகத்தில் ‘மக்கள் ஐடி’... அரசியல் உள்நோக்கம் கொண்டதா... பின்னணி என்ன?!

``சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக ஊழலால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய்களை மீட்டது பாஜக. இதற்கு அவசியமாக இருந்த ஆதாரைப் பயன்படுத்த மறுப்பது ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை உருவாக்க திமுக அரசு தயாராக இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது."

Published:Updated:
மக்கள் ஐடி

தமிழக மக்களுக்கு 'மக்கள் ஐடி' என்னும் அடையாள அட்டையை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் நோக்கம் பல துறைகள் கீழ் இயங்கும் நலத்திட்டப் பயனாளர்களின் விவரங்களை ஒரே தரவு தளத்தின் கீழ் கொண்டுவருவதே என அரசுத் தரப்பில் கூறுகிறார்கள். இதைத் தகவல் தொழிநுட்பம்  மற்றும் டிஜிட்டல் சேவைத்துறையின் கீழ் இயங்கும் மின் ஆளுமை முகமை மேற்கொள்ளவிருக்கிறது. மத்திய அரசு உருவாக்கிய ஆதாரில் இருப்பதபோல், இதிலும் 10-12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் உறுதியான பிறகு பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஆதார் நகலா 'மக்கள் ஐடி'?!

2009-ம் ஆண்டு ஆதார் இந்தியாவில் அறிமுகமானது. இதில் கைரேகை, கருவிழி எனத் தனிமனிதத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இது  இந்தியாவில் வாழும் குடிமக்களின் ஒட்டுமொத்த அடையாளமாகக் கருதப்படுகிறது. தற்போது வரை 134 கோடி மக்கள் இந்த ஆதார் பதிவைச் செய்துள்ளனர்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

தொடக்கத்தில் ஆதாரை முற்றிலும் எதிர்த்த திமுக, படிப்படியாக பல திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கியது. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு வழங்கிய ஆதாரின் அதே சாயலில்  ‘மக்கள் ஐடி’ என தமிழக அரசு உருவாக்குவது மக்கள் மத்தியில்  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  குறிப்பாக, நலத்திட்டங்கள் வழங்கும்  ஏற்பாடு எனக் கூறப்பட்டாலும், இதில் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

பிரிவினை ஏற்படுத்தும் திட்டம்!

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``கடந்த 6 ஆண்டுகள் முன்பு வரை  மக்களின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொடுத்துவந்தார்கள். இதனால் அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், அதிகாரிகளால் மிக எளிதாக ஊழல் செய்யப்பட்டது. எனவே, மக்களின் கைகளுக்கு மிகக் குறைந்த பணமே போய் சேர்ந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு அமர்ந்த பிறகு நேரடியாகப் பணத்தை மக்கள் ஆதாருடன் இணைத்திருந்த வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. இதனால் நாடு முழுவதிலும் நடந்த கொள்ளை தடுக்கப்பட்டு, சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூயாய் சேமிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக ஊழலால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய்களை மீட்டது பாஜக. இதற்கு அவசியமாக இருந்த ஆதாரைப் பயன்படுத்த மறுப்பது ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை உருவாக்க திமுக அரசு தயாராக இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஏற்கனவே ஆதார் சிறப்பாகச் செயல்படும்போது, அதன் மதிப்பைக் குறைக்கச் செய்யும்படி தமிழக அரசு புதிதாக மக்கள் ஐடி என அறிமுகம் செய்திருக்கிறது. தனிமனிதத் தகவல்களில் சிக்கல் ஏற்படுவதுவதாக ஆதார் மீது குறை கூறுகிறார்கள். பின்பு எதற்காக அதை மின் இணைப்புடன் இணைப்பது கட்டாயம் என்றார்கள். இந்தியாவிலுள்ள அனைவருக்கும் ஆதார் பொதுவாக இருக்கிறது. இதை மத்திய அரசு கொண்டுவந்தது எனக் கூறி, மாநில அரசின் பயன்பாட்டுக்கு அதே போன்ற திட்டத்தைக் கொண்டுவர முயல்வது என்பது பிரித்துப் பார்க்கும் செயல்” என்றார்.

தனிமனித உரிமைகளை பாதிக்காது!

இது குறித்துப் பேசிய திமுக மாணவர் அணி தலைவர் இராஜீவ் காந்தி, ``ஆதாரில் பிரதானமான தகவல்களாக இருந்தவை கண் மற்றும் கை ரேகைகள். அது ஒட்டுமொத்தமாக தனிமனித சுதந்திரத்தைப் பாதித்தது. இதனால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் போராடினோம். அதன்  விளைவாக, தனிமனிதத் தரவுகளைத் தேவையில்லாமல் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே, நீதிமன்றத்தின் உத்தரவால்  நாங்கள் அதை ஏற்றோம். தமிழகத்திலும்  மத்திய அரசுடன் இணைந்து இயங்கும் திட்டங்களான கல்விக்கடன் மற்றும் உதவித்தொகை, வீடு கட்டும் திட்டம், மின்சார மானியம் போன்ற திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கினோம். அது தமிழக அரசின் தனிப்பட்ட முடிவல்ல, மத்திய அரசின் அறிவுறுத்தல் பெயரில் மட்டுமே அது நடந்தது. தற்போது வரை தமிழக அரசின் தனிப்பட்ட திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் மக்கள் ஐடி முற்றிலும் வேறானது. அரசின் நலத்திட்டங்களைப் பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிப்பதே இதன் நோக்கம். ஆதாரைப்போல் மக்களின் அந்தரங்கச் செய்திகளை உள்ளடக்கிய ஆவணமாக மக்கள் ஐடி இருக்காது’’ என்றார்

 இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

வெளி மாநிலத்தவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கமில்லை!

மேலும் தொடர்ந்த அவர், ``இந்திய அரசியல் அடிப்படை சட்டப் பிரிவு 19-ன்படி இந்தியாவில் வாழும் எல்லா குடிமக்களும் மாநிலத்திலுள்ள எந்த இடத்துக்கும் சென்று வேலை பார்க்கவும், வீடு கட்டுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும்  உரிமை இருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் தற்காலிகப் பணியாளர்களாக வரும் தொழிலாளர்களைக் கண்காணிக்கவும், அதை ஒழுங்குபடுத்தவும் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போன்று 'உள்நாட்டு நுழைவு அனுமதி சீட்டு'  கொண்டுவர வேண்டும் என வாதங்கள் எழுந்துள்ளன. இது தமிழகத்தால் பல ஆண்டுகளாக முன்வைக்கும் சுயாட்சி வாதம்தான்.

இடம் மாறிய 
தொழிலாளர்கள்
இடம் மாறிய தொழிலாளர்கள்

எனவே, வெளி மாநிலத்தில் வருபவர்களை வரக் கூடாது என்பது மனிதநேயத்துக்கு எதிரான வாதமாகிவிடும். ஆனால், அவர்கள் வருவதை நெறிமுறைப்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு நிச்சயம் உருவாக்கும். ஆனால், மக்கள் ஐடி வெளி மாநிலத்தவர்கள் அதிகம் வருவதைத் தடுக்கும் நடவடிக்கை அல்ல. அது முற்றிலும் தவறானது. இது, தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெற தகுதியுடையவர்களைக் கண்டடைவது மட்டுமே. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார்.