Published:Updated:

பிரதமர் மோடிக்கு `குளோபல் கோல்கீப்பர்' விருது - தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமானதா?

பிரதமர் நரேந்திர மோடி சொன்னதைப் போல, காந்தியின் 150-வது பிறந்த ஆண்டும் முடிந்துவிட்டது. இந்திய கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைந்து விட்டனவா, தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமானதா?

தூய்மை இந்தியா - மோடி
தூய்மை இந்தியா - மோடி

தூய்மை இந்தியா திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சர்வதேச சாதனையாளர் விருதான, 'குளோபல் கோல்கீப்பர்' விருது கடந்த சில நாள்களுக்கு முன்பாக அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடிக்கு, நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில், அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலகப் பணக்காரரான பில் கேட்ஸ் இந்த விருதை வழங்கிக் கவுரவித்தார்.

பில்கேட்ஸ் - மோடி
பில்கேட்ஸ் - மோடி

கடந்த 5 ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மையை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம்.

திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும்'' எனத் தெரிவித்திருந்தார். பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை பலர் இந்தத் திட்டத்துக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் பாராட்டுககளையும், விமர்சனங்களையும், கிண்டல், கேலிகளையும் ஒருங்கே பெற்றது.

மோடி
மோடி

இந்தாண்டு மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் நடந்த தூய்மை இந்தியா வெற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, ''இந்தியாவில் உள்ள கிராமங்கள் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை எட்டியுள்ளது. 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்காக 11 கோடிக்கும் மேலான கழிவறைகளை கட்டியுள்ளதைப் பார்த்து உலகமே ஆச்சர்யப்படுகிறது. கழிவறைகளைக் கட்டுவதோடு, நீர் சேமிப்பும் முக்கியம்'' என்று குறிப்பிட்டார். மேலும் நீர் சேமிப்புக்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட இருப்பதாகவும் கூறினார்.

அதே விழாவில் ஊரகப் பகுதிகளில் தூய்மையை பேணிக் காப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம்தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதைப் பெற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி சொன்னதைப் போல, காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டும் முடிந்துவிட்டது. இந்திய கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைந்து காந்தியின் கனவை நிறைவேற்றிவிட்டதாகவும் கூறுகிறார்.

`தூய்மை இந்தியா திட்டம் சரியாகச் செயல்படவில்லை!’- காமன்வெல்த் நாயகன் சதீஷ்குமார் சிவலிங்கம் வேதனை

ஆனால், ''உண்மை அதுவல்ல. திறந்தவெளி கழிப்பிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் நோக்கம் உயர்வானதாக இருந்தாலும் அது செயல்படுத்தப்பட்ட விதத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது'' என்கிறார் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன்.

''தூய்மை இந்தியா திட்டம் மிகச்சிறந்தத் திட்டம்தான். மோடி அரசுக்கு முன்பிருந்த அரசாங்கமும், கழிவறைகள் கட்டுவதற்கு அதிகமான முயற்சிகளை எடுத்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தானே நேரடியாக திட்டத்தைத் தொடங்கி வைத்து பல முன்னெடுப்புகளைச் செய்தார். அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். பிரபலங்களை தூதுவர்களாகவும் பரிந்துரைத்தார். ஆனால் இந்தத் திட்டம் முழுமையான வெற்றியடைந்துவிட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யாரும் முறையான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை. விளம்பரம் மட்டுமே செய்துகொண்டனர்.

கமல் - தூய்மை இந்தியா
கமல் - தூய்மை இந்தியா

அடுத்ததாக இந்தத் திட்டம், திட்டமிடுதலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முதன்மையாக இருப்பது அதிகாரிகளின் ஊழல். கோயம்புத்தூரில் ஒரே கழிப்பறைக்கு மூன்று நான்கு பயனாளிகளை வைத்து புகைப்படம் எடுத்து கையாடல் செய்ததாக செய்திகள் வெளியானது. அங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பல இடங்களில் இது மாதிரி நடந்துள்ளது.

அடுத்ததாக, சாதியம். மக்களிடம் நிலவுகின்ற சாதிய மனநிலையும் இந்தத் திட்டத்தின் தேக்க நிலைக்கு காரணமாக இருக்கிறது. பொதுக்கழிப்பிடத்தில், தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை. யார் போகலாம், போகக்கூடாது என்பதில் பல பாகுபாடுகள் நிலவுகின்றன. அதேசமயம், யார் பராமரிப்பது என்று வரும்போது அதில் தாழ்த்தப்பட்ட மக்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதனால், இந்தத் திட்டம் பல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுதாகப் போய்ச்சேரவில்லை.

கழிப்பறை - தூய்மை இந்தியா
கழிப்பறை - தூய்மை இந்தியா
Vikatan

மக்களின் மூட நம்பிக்கைகளும் இந்தத் திட்டத்தின் தோல்விக்குக் காரணமாக இருக்கிறது. அரசு மானியம் கொடுப்பதால், கழிப்பறை கட்டிக்கொள்கிறார்கள். ஆனால், காடுகளில்தான் இன்னும் மலம் கழிக்கிறார்கள். பல இடங்களில் தரமற்ற கழிப்பிடங்கள் கட்டுவதால் அது நிலையான நன்மையைத் தருவதில்லை.

அரசு கொடுக்கும் மானியத்தை வைத்து மட்டுமே கட்டவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். மற்ற விஷயங்களுக்குத் தாரளமான செலவு செய்யும் மக்கள் கழிப்பறை கட்டுவதை வீண் செலவாக நினைக்கிறார்கள். கடமைக்குக் கட்டுகிறார்கள். தரமற்ற கழிப்பிடங்கள் கட்டும்போது, அதை நிலைத்து பயன்படுத்த முடியாமல் போகிறது. அதுபோல, கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படவில்லை. அதன் காரணமாக அதிகாரிகள் தங்களின் இஷ்டத்துக்கு ஊழல் செய்திருக்கிறார்கள். முறையாக வேலைகள் நடக்கவில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பிலும் முறையான முன்னெடுப்புகள் இல்லை. பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள்

இந்தத் திட்டத்தால் சில மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் மக்களிடம் இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வு தேவை. அடுத்ததாக இதில் நடக்கின்ற ஊழல்கள் களையப்படவேண்டும். அரசு கொடுக்கின்ற புள்ளி விவரங்களை வைத்துகொண்டு பிரதமர் மோடி வெற்றி அடைந்ததாகச் சொல்கிறார். ஆனால், அது உண்மையான நிலை இல்லை.

பிளாஸ்டிக் ஒழிப்பு, கழிவுநீர் மேலாண்மை, சாக்கடைகளை முறையாகப் பயன்படுத்துதால், முறையாக கழிப்பறைகளைக் கட்டி பயன்படுத்தல் ஆகிய அனைத்தும் சரியாக நடைமுறைக்கு வந்தால் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றியடையும். அதற்கு இன்னும் இருபதாண்டுகளாகவது ஆகும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பும் தேவை. மக்கள் இயக்கமாக இந்தத் திட்டம் மாறுவது பிரபலங்களின் கைகளில்தான் இருக்கிறது.'' என்கிறார் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன்.

சதீஷ்குமார் சிவலிங்கம்
சதீஷ்குமார் சிவலிங்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம், கடந்த வாரம் ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்தார். அதில் ''என் வீடிருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும், தெருக்கள் சேறும் சகதியுமாக மாறியிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதையும் குறித்து ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கான மொபைல் செயலியில் புகார் செய்தேன். அதைச் சரி செய்யாமலேயே, சரி செய்துவிட்டதாக அதில் காண்பிக்கிறது. தூய்மை இந்தியா திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை'' என்று விமர்சனம் செய்திருந்தார். அதை பலரும் வரவேற்றிருந்தனர். இது சாம்பிள்தான். இது போன்ற பல குற்றச்சாட்டுகள் இந்தத் திட்டத்தின் மீது முன்வைக்கப்படுகிறது.

தூய்மை இந்தியா திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் குறித்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்,

''இந்தியா என்று சொன்னாலே, வெளி நாட்டினர் முகம் சுளிப்பது பொது சுகாதாரம் மற்றும் கழிவறை குறித்துதான். அதனால்தான் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதில் அதிகமாக முனைப்பு காட்னோம். அதன்படி கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க மானியங்கள் கொடுக்கப்பட்டு நிறைய கழிப்பறைகள் உருவாகியிருக்கின்றன.

மாணவர்கள்
மாணவர்கள்

ஊழல் குற்றச்சாட்டு இந்தத் திட்டத்தில் மட்டுமல்ல, எந்தத் திட்டத்தின் மீதும் இருக்கிறது. பொதுச் சமூகம்தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். மக்களிடத்திலும் சில மாற்றங்கள் வரவேண்டும். சுகாதாரத்துக்கு மட்டுமின்றி தேச கௌரவத்துக்காகவாவது திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவேண்டும். மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

Toilet
Toilet

சாதிய ரீதியான பாகுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இந்தத் திட்டம் செயல்படுவதற்கு சாதி தடையாக இருந்தால் உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். தூய்மை இந்தியா திட்டம் மிக அருமையான திட்டம்தான். முன்பிருந்த நிலையை விட சில மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக அமையும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் சிறப்பான இடத்தில்தான் இருக்கிறது. அரசு, மக்கள், அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பான நிலையை அடைய முடியும்'' என்கிறார் ஶ்ரீனிவாசன்.

`காந்தி உயிரோடு இருந்தால் கண்ணீர் விட்டிருப்பார்!' - பா.ஜ.க-வை விமர்சிக்கும் நாராயணசாமி

மொத்தத்தில், நாடும், நாட்டு மக்களும் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் சிறப்பான ஒரு திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது செயல்படும் விதத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள், கோளாறுகள், பல்வேறு தடைகள் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆரோக்கியமான இந்தத் திட்டம், கேலிக்குரிய விஷயமாக மாறாமல் இருக்க அந்தத் தடைகளை உடைத்து, முறையாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், காந்தி கனவு கண்ட ''தூய்மை இந்தியா''வை அவரின் பாதத்தில் சமர்ப்பிக்க முடியும்.

காந்தியின் 175 ஆவது பிறந்த நாளுக்குள் இது சாத்தியமாகும் என்று நம்புவோம்.