Published:Updated:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப்பணத்தை ஒழித்ததா? #Demonetisation

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்லாது  அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்

கறுப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாகச் சொல்லி 2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்த நாள். அன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி, திடீரென வெளியிட்ட ஓர் அறிவிப்பே அதற்குக் காரணம். கறுப்புப்பணத்தை ஒழிப்பதாக சொல்லி, இனிமேல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். அதிர்ந்துபோன இந்திய மக்கள், தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கு அலைபாய்ந்தனர். ஒவ்வொரு நாளும் வங்கிகளின் வாசல்களில் லட்சோப லட்சம் மக்கள் காத்துக்கிடந்தனர். துயரம் மிகுந்த அந்த இரண்டு மாத காலத்தில், வங்கியில் பணம் எடுக்க நின்றே ஏராளமானோர் மரணமடைந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது...
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது...

இந்த நடவடிக்கையை பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. விவசாயம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளின் பொருளாதாரத்திலும் அது பாதிப்புகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நுகர்வுப் பொருள்களின் விற்பனை 40 சதவிகிதமாகச் சரிந்தது.

இனிமேல் அனைத்து பணப்பரிமாற்றமும் டிஜிட்டல் மூலமே நடைபெறும் என்று சொன்னார்கள். ரூபாய் நோட்டைச் சாராத இந்தியப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல இந்த நடவடிக்கை உதவும் என்றும் சொன்னார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தால் குறைக்க முடியவில்லை. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட 2016-2017 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் அது வெளிப்பட்டது.

வங்கியில் காத்திருக்கும் மக்கள்
வங்கியில் காத்திருக்கும் மக்கள்

`பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப்பணத்தை ஒழிக்கவில்லை' என்று விமர்சிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவின் பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம்ராஜன், ``2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. இந்நிலையில், 2016-ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவை, இந்தியப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகப் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. அதனால், உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். ஆனால், 2017-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வளர்ந்துவந்த நிலையில், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அந்தப் பாதிப்புக்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவையே காரணம்” என்று விமர்சித்தார்.

ரகுராம்ராஜன்
ரகுராம்ராஜன்
Vikatan

மேலும் அவர், ``இந்தியாவில் அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமாகக் குவிந்துள்ளது. ஒரு நாட்டின் நிர்வாகத்தைப் பொறுத்த அளவில் ஓர் அதிகார மையத்தில் இருந்தே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. பணிச்சுமையைப் பலரும் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே இந்திய சமூகம் இயங்கிவருகிறது. ஆனால், தற்போது இந்தியாவில் உள்ள மத்திய அரசில், அளவுக்கு அதிகமாக அதிகாரம் குவிந்துகிடக்கிறது. அதற்கு உதாரணமாக, சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறப்பைக் கூறலாம். அதுபோன்ற ஒரு திட்டத்துக்குக்கூட, ஒவ்வோர் அனுமதியையும் பிரதமர் அலுவலகத்திலிருந்து பெற வேண்டியிருந்தது” என்றார் ரகுராம்ராஜன்.

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மிக மோசமாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறிவருகிறார்கள். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலையிழப்புகள் ஏற்படுகின்றன. உலக அளவிலான பொருளாதார மந்தநிலையும் இதற்கு ஒரு காரணம் என்றாலும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் இந்தப் பாதிப்பின் தீவிரத்தை அதிகரித்துள்ளன என்று சொல்லப்படுகிறது.

பா.ஜ.க-வினரோ, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்று கூறிவந்தனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ``பா.ஜ.க அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு, ஒரு தைரியமான நடவடிக்கை. சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம் மற்றும் ஆதாரம் வெளியிடாமல் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியவற்றை வெளிக்கொணர இந்த நடவடிக்கை உதவியது" என்று பெருமையுடன் கூறினார். அப்படிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர், 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பணமதிப்பிழப்பு நடடிவக்கை குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அது ஏன்?

நம் நாட்டில் மிக சிக்கலான முடிவுகள் கூட எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் எப்படி எவ்வளவு அலட்சியமாக எடுக்கப்படுகின்றன; அவற்றைக் குறைகூறும்போதெல்லாம் அவை `அரசின் துணிச்சலான நடவடிக்கை' என எப்படியெல்லாம் முலாம் பூசப்படுகின்றன; இந்த உண்மைகள் எல்லாம் ஆட்சியாளர்களால் எப்படியெல்லாம் மூடி மறைக்கப்படுகின்றன எனப் பல்வேறு யதார்த்தங்களை இந்திய மக்களுக்கு உணர்த்திச்சென்ற நாள் இந்த நவம்பர் 8.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு