Published:Updated:

`ட்ரம்ப் இந்திய வருகை அமெரிக்காவுக்கே லாபம்!’ - எதிர்க்கட்சிகள் விமர்சனமும் பா.ஜ.க-வின் பதிலும்!

Namaste Trump
Namaste Trump ( AP/ Alex Brandon )

டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய வருகையால் அமெரிக்காவிடமிருந்து ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

இரண்டு நாள் பயணமாகப் பிப்ரவரி 24, 25 தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வருகிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்தே அது குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. `அகமதாபாத்தில் ஒரு கோடி பேர் உங்களை வரவேற்பார்கள்’ என்று மோடி தன்னிடம் சொன்னதாக ட்ரம்ப் கூறிய செய்தி ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற `ஹவுடி மோடி’ என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியைப் போல, அகமதாபாத்தில் `நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெற்ற உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களில் ஒன்றான மோடேராவுக்கு அருகே குடிசைப் பகுதிகள் ட்ரம்ப்பின் பார்வையில் படக்கூடாது என்பதற்காகச் சுவர் எழுப்பப்பட்டதும் குடிசைவாசிகள் அப்புறப்படுத்தப்பட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

Trump and Modi
Trump and Modi
AP / Alex Brandon

முதல் நாள் பயணமாக அகமதாபாத்துக்கு வந்த ட்ரம்ப்புக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு லட்சம் பேர் திரண்டிருந்த `நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் ட்ரம்ப் உரையாற்றினார். அன்று மாலை தாஜ்மகாலுக்குச் சென்றார். மறுநாள் தலைநகர் டெல்லியில் ட்ரம்ப்பும் மோடியும் நடத்திய பேச்சுவார்த்தையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ``இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் அற்புதமானது” என்றார் ட்ரம்ப். ``இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு 21-ம் நூற்றாண்டில் மிக முக்கியமான ஒன்று” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் குறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம்.

``குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அவருக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்தது. மோடி பிரதமரானவுடன் அவருக்கு விசா வழங்கி மிகப்பெரிய வரவேற்பு அளித்தது மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபரே இந்தியாவுக்கு வந்துள்ளார். இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியை பா.ஜ.க தலைவராகப் பார்த்து, காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் விமர்சனம் செய்கிற கலாசாரம் இருக்கிறது. எனவே, இந்த வெற்றியை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இந்தியக் குடிமகன் என்ற முறையில் நாம் இதைப் பார்க்கும்போது, விசா மறுத்த ஒரு நாட்டின் பிரதமரே இங்கு வருவது மிகவும் முக்கியமான ஒன்று.

பாகிஸ்தான் ஒரு பயங்ரவாத நாடு என்பதை இந்தியா மட்டுமே முன்பு சொல்லிக்கொண்டிருந்தது. சமீபத்தில் பல நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் கருத்தை வலியுறுத்த ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், `பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பயங்கரவாத முகாம்களை ஒழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்திய மண்ணில் இருந்துகொண்டு ட்ரம்ப் பேசியிருப்பது முக்கியமானது. இது நமக்கு மிகப்பெரிய வெற்றி. இது, பாகிஸ்தானுக்கு ராஜதந்திர ரீதியில் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி.

Modi and Trump
Modi and Trump
AP / Aijaz Rahi

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மிகத் தவறான பிரசாரம் நடக்கிறது. இந்தியாவில் ஏதோ தவறான விஷயம் நடப்பதுபோல கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பற்றிப் பேசிய ட்ரம்ப், இது உள்நாட்டு விவகாரம் என்றும், இது பற்றி கருத்துச் சொல்ல மாட்டேன் என்றும், இந்தியாவே இதைப் பார்த்துக்கொள்ளும் என்றும் பேசியிருக்கிறார். இதுவும் நமக்கு கிடைத்த வெற்றிதான். வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இரு நாட்டு அதிகாரிகளும் பேசிவருகிறார்கள். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். எனவே, ட்ரம்ப்பின் வருகை இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி” என்றார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசினோம். ``வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ட்ரம்ப் வருகை பெரிதும் மிகைப்படுத்தப்பட்டது. அதற்கு, அதிகமான விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், வழக்கத்துக்கு மாறாக ஏதோ நடக்கப்போகிறது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க வாழ் நபர் ஒருவர்தான் `ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். அது அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல. அதே போன்றதுதான் `நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியும்.

Trump
Trump
AP / Alex Brandon
`ட்ரம்ப் - மோடி சந்திப்பு!'- இரு நாட்டின் பொருளாதார எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு, மோடிக்கு விசா தர அமெரிக்கா மறுத்தது. இன்றைக்கு, மோடி தன் நெருங்கிய நண்பர் என்று ட்ரம்ப் சொல்கிறார். உண்மையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தக் காலத்தில் நட்புறவு வளர்ந்துள்ளதா என்ற கேள்வியைப் பரிசீலிப்பது முக்கியம். இந்தக் காலத்தில் மோடியும் ட்ரம்ப்பும் எட்டு முறை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் மூலமாக இந்தியாவுக்கு ஏதாவது நல்ல நடந்துள்ளதா, ஆதாயம் கிடைத்துள்ளதா என்பது முக்கியமான கேள்வி.

கடந்த 12 மாதங்களில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி வந்த எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் அளவு 46 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த இரு பொருள்களின் மீதும் அமெரிக்கா விதித்த வரிதான், ஏற்றுமதி குறைந்ததற்குக் காரணம். Most Favoured Nation என்ற பட்டியலிலிருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கிவிட்டது. இதனால், இந்தியப் பொருள்கள் அங்கு போட்டிபோடுவதற்கான வாய்ப்பு இல்லை.

மேலும், இந்தியாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஜவுளி, மின்சாதனங்கள் ஆவற்றின் மீது கடுமையாக வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா.

இதுபோக, இந்தியாவுக்கு எதிராக WTO நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை அமெரிக்கா தொடர்ந்துள்ளது.

இந்தியாவின் சூரியஒளி மின்தகடுகள் விலை மிகவும் குறைவு. அதனால், தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பிரச்னை உள்ளது என்று சொல்லி அமெரிக்கா வழக்கு போட்டுள்ளது. அதுபோல, இந்தியாவில் விவசாய விளைப்பொருள்களுக்குக் குறைந்த பட்ச ஆதாரம் கொடுக்கப்படுவதை எதிர்த்தும் ஒரு வழக்கு போட்டுள்ளது அமெரிக்கா. இந்தியாவில் அரிசிக்கும் கோதுமைக்கும் கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுகிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா சொல்கிறது.

இப்படியாக, வர்த்தகத்தில் இந்தியாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவிடமிருந்து இந்தியா ராணுவ ஆயுதத் தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் மட்டும் ட்ரம்ப்பின் பயணத்தின்போது போடப்பட்டுள்ளன. ட்ரம்ப் வருகையால் அமெரிக்காவுக்குத்தான் லாபமே ஒழிய, இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லை” என்றார்.

Namaste Trump
Namaste Trump
AP / Alex Brandon

சர்வதேச அரசியலை உற்றுநோக்கிவரும் பேராசிரியர் பெர்னார்டு டி சாமி, இது குறித்து நம்மிடம் பேசுகையில், ``இதற்கு முன் எந்தவொரு அமெரிக்க அதிபருக்கும் இல்லாத வகையில், மிகப்பெரிய அளவுக்கு மக்களைத் திரட்டி ட்ரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை `Popular Diplomacy' என்று சொல்கிறார்கள். அமெரிக்காவிடமிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் மட்டும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இரு நாட்டு வர்த்தக உறவுகள் மேம்படவில்லை. காரணம், நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கிறோம். நம் பொருள்களுக்கு அவர்கள் அதிகமான இறக்குமதி வரியை விதிக்கிறார்கள்.

உலகிலேயே அதிகமாக வரி விதிக்கக்கூடிய நாடாக இந்தியா உள்ளது என்று ட்ரம்ப் இங்கு பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் 25 லட்சம் வாக்குகளைக் கருத்தில் கொண்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு