Published:Updated:

மாதத்திற்கு 2.8 லட்சம் வழக்குகள்... சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்! #VikatanRTI

#VikatanRTI
#VikatanRTI

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 செப்டம்பர் 1-ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்பின் சென்னையில் போக்குவரத்து வீதிமீறல்கள் குறைந்ததா, அதிகரித்தா?

அதிகரித்துவரும் போக்குவரத்து விதி மீறல்களால் விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் எனப் பலதரப்பட்ட மக்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறைவாக இருப்பதால், அதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனக் குற்றசாட்டுகள் எழுந்துவந்தன. இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா-2019 நிறைவேற்றப்பட்டது.

போக்குவரத்து விதி மீறல்கள்
போக்குவரத்து விதி மீறல்கள்
கோவை: போக்குவரத்து விதி மீறல் வழக்கு பதிவுகளும் வசூலிக்கப்பட்ட தொகையும்! ஆர்.டி.ஐ தகவல் #VikatanRTI

திருத்தப்பட்ட புதிய சட்டமும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 63 திருத்தங்கள் கடந்த ஆண்டு நாடு முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. இதன்பின்னாவது போக்குவரத்து வீதிமீறல்கள் குறைந்ததா... போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விகடன் ஆர்.டி.ஐ மூலம் சென்னைக்கான தரவுகளை பெற்றோம்.

சென்னையில் பதிவான மொத்த போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்!

RTI தகவலின்படி 2019 ஜூலை முதல் அக்டோபர் வரை, சென்னையில் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 10,19,283 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10,00,46,073 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)

இதில் புதிய சட்டதிருத்தங்கள் வரும் முன், ஜூலை மாதம் மட்டும் 2,86,515 வழக்குகள், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு, இதன்மூலமாக 2,87,66,309 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஹெல்மெட் அபராதம்!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 60,000 முதல் 75,000 வரை சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 2018-ல் மட்டும் பல்வேறு விதமான சாலை விபத்துகளில் 12,216 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு ஹெல்மெட் அணியாததும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஹெல்மெட் அணியவேண்டியது என்ற சட்டம் வெகுநாட்களாகவே அமலில் இருக்கிறது. இதில் கூடுதலாக இரு சக்கர வாகனங்களின் பின் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையும் அமலுக்கு வந்தது. ஆகஸ்ட் வரை இதற்கான அபராதமாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் முதல் அந்தத் தொகை ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)

ஆர்.டி.ஐ தகவலின்படி, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது மட்டும் ஜூலை-ஆகஸ்ட் வரையிலான 4 மாதங்களில் 7,37,669 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத்தொகையின் மதிப்பு 6,97,68,100 ரூபாய்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியவர்கள்!

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதத் தொகை ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆகஸ்ட் மாதம் 1,808 வழக்குகள் பதிவாகிய நிலையில், புதிய சட்டத் திருத்தத்துக்குப் பிறகு, செப்டம்பரில் 327 வழக்குகள் மட்டுமே பதிவாகின. ஆனால், நாளடைவில் மீண்டும் விதிமீறல்கள் அதிகரித்து அக்டோபரில் 928 வழக்குகள் பதிவாகியுள்ளன.

காப்பீடு (Insurance) இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள்!

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)

புதிய சட்டத் திருத்தத்துக்குப் பிறகு, காப்பீடு (Insurance) இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது பதிவான வழக்குகளும் குறைந்துள்ளன. காப்பீடு இல்லாத வாகனங்களுக்கான அபராதத் தொகை ரூ.1,000-த்திலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. ஆகஸ்ட்டில் 2,156 ஆக இருந்த வழக்குகள் அக்டோபர் மாதத்தில் 580 ஆகக் குறைந்துள்ளன.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்!

சாலையில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே காரணம். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவோருக்குப் புதிய சட்டத் திருத்தத்துக்கு முன் ரூ.2,000 மாக இருந்த அபராதம் புதிய சட்டத் திருத்தத்துக்குப் பின் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த காரணத்திற்காக ஜூலை முதல் அக்டோபர் வரையில் 17,007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய சட்டம் அமலுக்கு வந்தவுடன் செப்டம்பரில் 996 ஆகக் குறைந்தது இந்த வழக்குகளின் வழக்குகள். `பரவாயில்லையே, மக்கள் திருந்திட்டாய்ங்களே' என நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. மீண்டும் அக்டோபரில் இந்த எண்ணிக்கை அதிகரித்தது. 3,037 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஒட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியதால், வசூல் செய்யப்பட்ட அபராதத் தொகையின் மதிப்பு ஆர்.டி.ஐ-யில் கொடுக்கப்படவில்லை.

சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள்!

சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்காக அபராதத் தொகை ரூ.500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளன. சென்னையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 31 பேர் சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டதாக ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)

இதன்மூலம் 15,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவோருக்கான அபராதம் ரூ.500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனம் ஓட்டும் சிறார்கள்!

உரிய வயதை அடையாத சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அவர்களின் காப்பாளர் அல்லது வாகன உரிமையாளர் குற்றவாளியாகக் கருதப்படுவர். அவர்களிடம் ரூ.25,000 வரை அபராதம் வசூலிக்கப்படுவதுடன் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை இருக்கிறது. மேலும், வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். போதிய மன முதிரிச்சி இல்லாததால் சிக்னலில் நிற்காமல் செல்வது, வேகமாகச் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது எனப் பல்வேறு விதமான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் சிறார்கள்.

போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)
போக்குவரத்து விதிமீறல்கள்! (சென்னை)

இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதத்தில் 5,941 வழக்குகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 18-வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் சாலை விபத்துகளைக் குறைக்கவும், உயிரிழப்பைத் தடுக்கவும், மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு விதமான கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், சட்டம் கொண்டுவரப்பட்ட கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே அவற்றை ஒரு பொருட்டாக மதிக்கின்றனர். சில நாள்களிலேயே மீண்டும் விதிமீறல்களும் விபத்துகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அரசும் சில நாட்களில் இந்த பிடியை தளர்த்திவிடுவதும் இதற்கு காரணம்தான்.

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல், கடந்த ஆண்டு வெளியிட்ட போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதத் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
download
அடுத்த கட்டுரைக்கு