Published:Updated:

`இனியும் தாமதம் வேண்டாம்!'- ஆழ்துளை மீட்புக் கருவிக்கான ஹேக்கத்தான் போட்டி

ஆழ்துளை மீட்புக் கருவிகளை உருவாக்க மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டியை அறிவித்துள்ளார் ஐ.டி துறையின் செயலர் சந்தோஷ் பாபு.

ஆழ்துளை மீட்பு
ஆழ்துளை மீட்பு

நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித், நான்கு நாள் தொடர் மீட்புப் போராட்டம் தோல்வியடைந்ததால் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை இறப்புக்குப் பெரும் காரணமாகக் கூறப்படுவது, அவனைக் காப்பாற்றத் தகுந்த இயந்திரம் அரசிடம் இல்லை என்பதுதான்.

சுர்ஜித்
சுர்ஜித்

பல்வேறு தனி நபர் குழுக்கள் தங்களால் முடிந்த சில இயந்திரங்களைக் கண்டுபிடித்திருந்தாலும், சுஜித் விவகாரத்தில் அது எதுவுமே கைகொடுக்கவில்லை. `சுஜித் எப்படியேனும் உயிருடன் மீட்கப்பட்டுவிடுவான்’ என மொத்த தமிழகமும் தீபாவளியை மறந்து, கடந்த நான்கு நாள்களாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது. ஆனால் அனைத்தும் வீணாகிப் போனது.

இனிமேலாவது இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது, இதற்காக அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க இயந்திரம் கண்டுபிடிப்பவர்களுக்கான போட்டியை அறிவித்துள்ளார் தமிழகத் தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு.

ஆழ்துளை மீட்பு
ஆழ்துளை மீட்பு

பொறியியல் மாணவர்களுக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் 'ஹேக்கத்தான்' போட்டிகள் நடப்பது வழக்கம். அதில் அனைத்துத் துறைகளிலும் இருக்கும் முக்கியப் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். அதில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதைக் கண்டுபிடித்த மாணவருக்குப் பரிசு வழங்கப்படும்.

ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்... சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?

இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தோஷ் பாபு, “அன்புள்ள நண்பர்களே, இந்த தீபாவளி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகவும் கடினமானதாக அமைந்துவிட்டது. குறிப்பாகத் தமிழக மக்களுக்கு. அலட்சியத்தால் மற்றொரு உயிர் பலியாகிவிட்டது. அலட்சியத்தால் இந்தியாவில் இறக்கும் கடைசி உயிராக இதுதான் இருக்க வேண்டும். இதற்கு நமக்கு உடனடி தீர்வு தேவைப்படுகிறது.

Dear friends, It’s been a heartbreaking Deepavali for all of India, especially Tamil Nadu....another precious life has...

Posted by Santhosh Babu on Monday, October 28, 2019

இதற்கு ஒரு தீர்வுகாண ஹேக்கத்தான் போட்டி நடத்த ஐ.டி துறை முடிவுசெய்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க ஒரு கருவி இல்லை என்பது மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. இனிமேலும் தாமதம் கூடாது. இந்த ஹேக்கத்தான் போட்டியில் தனி நபர்கள், மாணவர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் கருவியைச் சமர்ப்பிக்கலாம். சிறந்த மற்றும் வெற்றிபெறும் படைப்பாளிக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.