Published:Updated:

லெட்டர் பேடு கட்சி தெரியும்... வாட்ஸ் அப் கட்சி தெரியுமா?

வாய்ஸ் மெசேஜில் உத்தரவிடும் தீபாம்மா!

பிரீமியம் ஸ்டோரி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ‘தமிழக மக்களையும் அ.தி.மு.க-வையும் காப்பாற்றியே தீருவேன்’ என அரசியலில் குதித்தார் ஜெ-வின் அண்ணன் மகள், தீபா. அவர்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கட்சியின் சீனியர் பலரும் அவரை ஆதரித்தனர். எல்லாம் சிலபல நாள்கள்தான். அரசியலில் அவருடைய சுறுசுறுப்பைக் கண்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பாதியிலேயே நொந்து கலைந்தனர். எஞ்சியிருந்தவர்களையும் துரோகிப் பட்டம் சூட்டி, அவரே வெளியேற்றினார்.

முதல் நாள் நண்பர் ராஜா நீக்கம், இரண்டாவது நாள் கணவர் மாதவன் நீக்கம், மூன்றாவது நாள் ராஜா சேர்ப்பு என, கடந்த மூன்று வருடங்களில் தீபாவின் அரசியல் ஆட்டம் குபீர் கிளப்பியது. போயஸ் கார்டனில் தன் தம்பி தீபக்கையே புரட்டி எடுத்ததில் தமிழகமே திக்குமுக்காடியது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘அ.தி.மு.க-வுக்கு ஆதரவு’ என வம்படியாக வண்டியேறினார் தீபா. தமிழகம் முழுவதும் பிரசாரம் செல்வதாகக் கூறியவர், தி.நகர் எல்லையைக்கூட தாண்டவில்லை.

லெட்டர் பேடு கட்சி தெரியும்...
வாட்ஸ் அப் கட்சி தெரியுமா?

இந்த நிலையில் இப்போது தீபா பேரவையில் வாட்ஸ் அப் அட்ராசிட்டி தொடங்கியுள்ளது. தீபா பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஆர்.சி.கோபி, ‘தீபாவை முதலமைச்சர் ஆக்குவோம் என்கிற முடிவுடன்தான் எல்லோரும் அவரை நாடினோம். இப்போது அதற்கான வழியே இல்லை. நமது நிர்வாகிகள் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை. தீபாவை நாங்கள்தான் அரசியலுக்கு அழைத்தோம். அப்போதே `வரவில்லை’ என்று சொல்லியிருந்தால், அவரவர் வேலையைப் பார்க்கப் போயிருப்போம். அரசியலில் இருப்பதாகக் கூறி, எங்கள் வாழ்வையும் பாழாக்கிவிட்டார். 20 தினங்களுக்குள் தீபாவோ, மாதவனோ எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்’ என்று தகவலை வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜாகக் கட்சி நிர்வாகிகளுக்கும் தீபாவுக்கும் அனுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் தீபா அனுப்பியுள்ள வாய்ஸ் மெசேஜில், ‘ஆர்.சி.கோபி என்கிற நபர், என்னால் நடத்தப்பட்டுவந்த(?) இயக்கத்திலிருந்து நீக்கப்படுகிறார்’ என்று அதிரடிக்க, இவர்களின் வாய்ஸ் மெசேஜ் தீபா பேரவையின் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாகப் பரவியது. `வாட்ஸ் அப் குழு மூலம் கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவதா?’ என்று கேள்விகள் கிளம்பிய பிறகே, கோபியை அதிகாரபூர்வமாக நீக்கினார் தீபா.

கோபியிடம் பேசினோம். ‘‘இப்பத்தான் நிம்மதியா இருக்கேங்க. மூணு வருஷமா கட்சி, பேரவைனு உழைச்சதுக்கு நல்ல வெகுமானத்தை தீபாம்மா கொடுத்துட்டாங்க. என்னோட அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை விரைவிலேயே அறிவிப்பேன்’’ என்றார்.

தீபாவைத் தொடர்புகொண்டோம். அவரின் இரு செல்போன்களும் அணைத்துவைக்கப்பட்டிருந்தன. அவரின் கணவர் மாதவனும், ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ இருந்தார். தீபா பேரவையின் தலைமை நிலையச் செயலாளர் சுப்பிரமணியனிடம் பேசியபோது, ‘‘பேரவைக்குள் முடிவு எடுப்பதெல்லாம் தீபாம்மாதான். எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்று மட்டும் சொன்னார். சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு