Published:Updated:

டெல்லி: அரசை விமர்சித்து செய்தி - பத்திரிகையாளர்களை வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய மாநில அரசு!

ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளை விமர்சித்து எழுதியதற்காக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் 7 நிருபர்களை அந்த மாநில அரசு, செய்திக் குறிப்புகள் மற்றும் அரசாங்க அறிவிப்புகளைப் பகிரும் பத்திரிகையாளர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கியுள்ளது.

டெல்லியில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரம் தேசியளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் தினமும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிரிழந்துக் கொண்டிருக்கின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆக்ஸிஜன் தேவையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பிற மாநிலங்களிலிருந்து ஒதுக்கீட்டின் அடிப்படையில் டெல்லிக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டு வரும் போதிலும், ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் டெல்லி அரசு திணறிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் திட்டமிடல் குறைபாடே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் சமீபமாக மேலோங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், மறுபுறம் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லியின் கொரோனா பாதிப்புகள் நிலை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளன.

டெல்லி அரசின் செயல்பாடுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களும், பத்திரிகைகளும் மாநில அரசின் செயல்பாடுகளைப் பகுப்பாய்வு செய்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகை டெல்லியில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மயானங்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்படியாக ஊடகங்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதால் பத்திரிகையாளர்கள் மீதான அணுகுமுறையை மாநில அரசு மாற்றியுள்ளதாக தெரிகிறது. செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வருவதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே நிறுத்திவிட்டதாக டெல்லி பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டெல்லி
டெல்லி
reutters

இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காகப் பிரபல ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிருபர்கள் 7 பேரை மாநில அரசின் மீடியா செல் பிரிவு, அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் செய்திக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வாட்ஸ்-அப் குரூப்பில் இருந்து நீக்கியிருக்கிறது. பத்திரிகையாளர்கள் மீதான அரசின் இந்த மோசமான அணுகுமுறை ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி இருப்பதாகக் கண்டன குரல்கள் ஒலித்த வண்ணமாக இருக்கின்றன.

கடந்த 6-ம் தேதி வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் தலைப்பு செய்தியில் ``Anatomy of Capital oxygen crisis: 5 things Delhi govt didn’t get right” என்ற தலைப்பின் கீழ் மாநில அரசின் மோசமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அந்த செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் சுவேதா கோஸ்வாமி எழுதியிருந்தார்.

டெல்லி: 24 மணி நேரமும் எரியும் உடல்கள்... இறந்தவர்களைத் தகனம் செய்ய இடமின்றித் தவிக்கும் தலைநகரம்!

சுவேதா அதில், ``டெல்லி அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் திறம்படச் செயல்படத் தவறி விட்டது. மாநிலத்தில் மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் விநியோக திட்டமிடல் முறையாக இல்லை. நிலைமை இவ்வளவு மோசமாகியும் கொரோனா கட்டுப்பாட்டு அறையினை கூட மாநில அரசு இன்னும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்வதில், ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதில், மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தத்தை அளித்து அதிகளவு ஆக்ஸிஜன் பெறுவது என அனைத்திலும் மாநில அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை" என்று எழுதியிருந்தார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கையாண்ட விதத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கேள்வி எழுப்பியிருந்த பத்திரிகையாளர் சுவேதாவின் செய்தி மாநிலத்தில் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. ஏற்கனவே நெருக்கடியில் திணறிக் கொண்டிருக்கும் டெல்லி அரசுக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

ஹிந்துஸ்தான் பத்திரிகை வெளியிட்ட செய்தி
ஹிந்துஸ்தான் பத்திரிகை வெளியிட்ட செய்தி

இந்நிலையில், மாநில அரசின் ஊடக பிரிவு அதிகாரிகள் செய்தி வெளியிட்ட சுவேதா உட்பட ஊடக செய்திக் குறிப்பு வாட்ஸ்-குரூப்பில் இருந்த 7 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர்களை குரூப்பில் இருந்து நீக்கியிருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ள வாட்ஸ்சப் குரூப்பில் இருந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மாநில அரசின் வாட்ஸ அப் குரூப்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் சுவேதா மற்றும் இதர ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசிடம் காரணம் கேட்டு வருகின்றனர். ஆனால், அரசு தரப்பிலிருந்து இது வரையிலும் எந்தவித பதிலும் கூறப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், "சமீப காலமாகவே டெல்லி அரசு பத்திரிகையாளர்கள் உடனான இணக்கத்தைக் குறைத்து வருகிறது. கொரோனா லாக்டௌன் போடப்பட்டதிலிருந்து மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது வரையிலும் ஒரு நாள் கூட நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால், அவர் இன்றளவும் தினமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்ற பெயரில் எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் அவர் மட்டும் ஏதோ பேசிவிட்டுச் செல்கிறார். அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடு பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது நல்லதல்ல. நாங்கள் இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிடப் போவதில்லை. மாநில அரசு பத்திரிகையாளர்களை மிரட்டப் பார்க்கிறது. எங்களுடைய கேள்விகளை முதல்வரிடம் எங்களால் நேரடியாக முன்வைக்க முடிவதில்லை. அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஊடக சுதந்திரம்
ஊடக சுதந்திரம்

இன்னும் பல பத்திரிகையாளர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க அச்சப்படுகின்றனர். நீக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினால் தங்களையும் குரூப்பில் இருந்து வெளியேற்றி விடுவார்களோ என்று பயப்படுகின்றனர். அரசின் செய்திக் குறிப்புகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் அந்த குரூப் வழியாகத் தான் செய்தி நிறுவனங்களைச் சென்றடையும். கொரோனா பாதிப்பு நிலவரம் முதல் அனைத்தும் அதில் தான் எங்களுக்குத் தெரிய வரும். அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பகுப்பாய்ந்து தான் செய்திகளை வெளியிட்டு வருகிறோம். கள நிலவரத்தை ஆராய்ந்து தான் நாங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாநில அரசு எங்களை முடக்கப் பார்க்கிறது. அது ஒருபோதும் முடியாது. நாங்கள் தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே ஊடக அறத்துடன் செயல்பட விரும்புகிறோம்" என்று கண்டனம் தெரிவித்தனர்.

அரசின் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திர்கையார்கள் வெளியேற்றப்பட்டுள்ளது தொடர்பாக ஆம் ஆதமி கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் விளக்கம் கேட்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு