முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் தொடங்கினார். ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைவான விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது 700 அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுகின்றன.
இந்த நிலையில், தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியதும் அம்மா உணவகம் மூடப்படும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார். இது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

மேலும், இந்தத் திட்டம் தேசிய அளவில் முன்மாதிரித் திட்டமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படவிருப்பதாகத் தமிழக உணவுத்துறை அமைச்சர் பேசினார். இது அம்மா உணவகத்தை மூடுவதற்கான முன்னேற்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, கண்டனம் தெரிவித்தன. மேலும், அம்மா உணவகத்தை இருட்டடிப்பு செய்வதற்கான திட்டம் என்றும் கூறின.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்படவிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.
