Published:Updated:

` துரைமுருகனிடம் இருந்து ஒரு போன்கூட வரவில்லை!' - தலைமை புறக்கணிப்பால் கலங்கிய கனிமொழி

ஆ.விஜயானந்த்

கனிமொழி கொடுத்த தேதியை துரைமுருகன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஸ்டாலின் குடும்பத்தினரைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான்.

கனிமொழி
கனிமொழி

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பிரசாரத்துக்குக் கனிமொழி வராமல் இருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. `பிரசாரத்துக்குத் தேதி கொடுத்தும் அதைப் பற்றிய அறிவிப்பைக்கூட துரைமுருகன் வெளியிடவில்லை' எனக் கனிமொழி வேதனைப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர் உடன்பிறப்புகள்.

ஸ்டாலினுடன் துரைமுருகன், கதிர் ஆனந்த்
ஸ்டாலினுடன் துரைமுருகன், கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்காக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வேலூரில் முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்காகத் தொகுதி முழுக்க வலம் வருகின்றனர் அமைச்சர்கள். ` ஏ.சி.சண்முகத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும்' என்பதில் அ.தி.மு.க தலைமை முனைப்புடன் இருக்கிறது. தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்துக் கடந்த 2 நாள்களாக பிரசாரம் செய்துவருகிறார் தி.மு.க இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். பிரசாரம் முடியவடைய இன்னும் 3 நாள்கள் இருப்பதால், ` என் முகத்துக்காகப் பார்க்காமல் தி.மு.க தொண்டனாக கதிர் ஆனந்த்தை வெற்றி பெறச் செய்யுங்கள்' எனக் கலங்கிய கண்களோடு வாக்கு சேகரித்து வருகிறார் துரைமுருகன். என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தை ஆதரித்து தி.மு.க வாக்களித்ததால் சிறுபான்மையினர் மத்தியில் நிலவும் அதிருப்தி, ஏ.சி.சண்முகத்துக்காக பா.ம.க செய்யும் பிரசாரம் போன்றவற்றை எதிர்கொள்வதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது தி.மு.க.

உதயநிதிக்குத் தேதியை அறிவிக்கிறார்கள், தலைவரின் பிரசாரத்துக்கான தேதியை அறிவிக்கிறார்கள். என் பெயரை மட்டும் அறிவிக்கவில்லை.
கனிமொழி

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி தவிர்க்கப்பட்டிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் உடன்பிறப்புகள். இத்தனைக்கும், ` ஜூலை 30, 31 ஆகிய இரு தேதிகளில் பிரசாரம் செய்வார் கனிமொழி' என முரசொலி நாளேட்டில் தகவலும் வெளியாகியிருந்தது. இதன் பின்னணியில் நடந்த விவரங்களை நேற்று விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகிகள் சிலர், `` ஒவ்வொரு தேர்தலின்போதும் யார் யாரெல்லாம் பிரசாரத்துக்குச் செல்ல வேண்டும் என்பது குறித்த விவரங்களை தலைமை வெளியிடும். அதில், முக்கியமான 10, 15 பேரின் பெயர் விவரங்கள் வெளியாகும். வேலூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மாவட்டச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டது தலைமை. அதில், எந்த இடத்திலும் மகளிர் அணி நிர்வாகிகள் பெயர் இடம்பெறவில்லை. ` இந்தக் கட்சியில் மகளிர் அணி என்ற ஒன்று உயிரோடு இருக்கிறதா?' என்ற கேள்வியும் எழுந்தது. வேலூர் பிரசாரத்துக்குக் கனிமொழி வருவது குறித்த விவாதம் நடந்தபோதும், ` அவர் வந்தால் வரட்டும், வராவிட்டாலும் பரவாயில்லை. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என முக்கிய இடத்திலிருந்து தகவல் வந்தது. தலைமையும் இதைக் கண்டுகொள்ளவில்லை" என ஆதங்கத்தோடு விவரித்தவர்கள்,

கருணாநிதி வீட்டில் ஸ்டாலினுடன் துரைமுருகன், கதிர் ஆனந்த்
கருணாநிதி வீட்டில் ஸ்டாலினுடன் துரைமுருகன், கதிர் ஆனந்த்

`` பிரசாரப் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெறாததைக் கண்ட கனிமொழியும், தனிப்பட்ட முறையில் 2 தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். `பிரசாரத்துக்கு நாம் செல்லாமல் இருந்தால் தவறாகிவிடும்' என்பதும் முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட அந்த இரண்டு தேதிகளில் துரைமுருகன் நடத்துவாரா என்ற கேள்வியும் எழுந்தது. கனிமொழி பிரசாரம் குறித்த அறிக்கையையும் துரைமுருகன் முரசொலி நாளேட்டுக்குத் தெரிவிக்கவில்லை.

இதை எதிர்பார்க்காத கனிமொழி, முக்கிய நிர்வாகிகளிடம் பேசும்போது, ` பிரசாரத்துக்கு வருவதற்கான தேதிகளை துரைமுருகனிடம் கொடுத்தேன். உதயநிதிக்குத் தேதியை அறிவிக்கிறார்கள், தலைவரின் பிரசாரத்துக்கான தேதியை அறிவிக்கிறார்கள். என் பெயரை மட்டும் அறிவிக்கவில்லை. நான் கொடுத்த தேதியைக் கணக்கில் கொண்டு துரைமுருகனாவது அறிவித்திருக்க வேண்டும். அவரும் எனக்கு போன் செய்யவில்லை. நான் வராமல் இருந்தால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்' என வேதனைப்பட்டிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்தவர்கள், ` நாடாளுமன்றத்தில் நிறைய பணிகள் இருக்கின்றன. நீங்கள் பிரசாரத்துக்கு வர முடியாததைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என ஆறுதல் கூறியுள்ளனர். ` அப்படியானால், இதை நீங்களே சொல்லிவிடுங்கள்' எனக் கூறி அமைதியாகிவிட்டார்.

பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்
பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

கனிமொழியின் ஆதங்கத்தைக் கவனித்தவர்கள், ` கலைஞர் இருந்திருந்தால் கனிமொழியை விட்டுக் கொடுத்திருப்பாரா?' எனக் கலங்கியுள்ளனர். கனிமொழி கொடுத்த தேதியை துரைமுருகன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஸ்டாலின் குடும்பத்தினரைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான்.

தேர்தல் பிரசாரத்திலும் பலமுனைத் தாக்குதலில் அவதிப்படுகிறார் துரைமுருகன். இப்படிப்பட்ட சூழலில் கனிமொழிக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் என நினைக்கிறார். ` தேர்தலில் எம்.பி சீட் கொடுத்தோம், வெற்றிக்காகவும் உழைத்தோம். அத்துடன் எங்கள் கடமை முடிந்துவிட்டது. கட்சியில் எந்தவித உரிமையும் கொண்டாடக் கூடாது' என்பதைக் கனிமொழிக்கு மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவதாகவே இதை உணர முடிகிறது.

அண்ணா அறிவாலயம
அண்ணா அறிவாலயம

நாடாளுமன்றத் தேர்தலில் துரைமுருகன் மகன், ஆற்காடு வீராசாமி மகன், பொன்முடி மகன் ஆகியோருக்கு சீட் கொடுத்ததன் காரணமே, உதயநிதி வருகையின்போது சீனியர்கள் மத்தியில் சலசலப்பு வந்துவிடக் கூடாது என்பதால்தான். அதனால்தான் பெரியளவில் அதிருப்தி குரல்கள் எழும்பவில்லை. உதயநிதி வருகைக்குச் சீனியர்களும் தடையில்லா சான்று கொடுத்துவிட்டனர். இப்போது பேராசிரியர் அன்பழகன் படத்தையே போடாமல் போஸ்டர்களை அச்சடிக்கின்றனர். ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவர் படத்தை மட்டுமே பரவலாகக் காண முடிகிறது. இதையும் குமுறலோடு கவனித்துவருகின்றனர் உடன்பிறப்புகள்" என்கின்றனர் ஆதங்கத்துடன்.