Published:Updated:

`சிக்கலில் சிதம்பரம்'- உருகிய கார்த்தி... டெல்லிக்கு உடனடி அழைப்பு!

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லி செல்ல டிக்கெட் புக் செய்துள்ளனர்.

 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

``உடல் எடையும் குறைந்துவிட்டது. அவருக்கு ஏற்கெனவே இருந்த வயிற்று வலியும் பிரச்னையாக மாறிவிட்டது. சிறையில் இப்போது சிரமத்துடன் இருக்கிறார் அப்பா” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

சிதம்பரம்
சிதம்பரம்

ஆக்ஸ்ட் 21-ம் தேதி சிதம்பரத்தை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து கைது செய்தது சி.பி.ஐ. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டிலிருந்து முதலீடு பெற்றதில் அனுமதித்ததை விட அதிகமாக பணம் வழங்க உத்தரவிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. இதே வழக்கில் அமலாக்கப் பிரிவும் அவரை கைது செய்துள்ளது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் சிறைவாசம் எழுபது நாள்களை கடந்துவிட்டது.

எழுபது வயதைக் கடந்தவர் சிதம்பரம். ஆரம்பத்தில் சிறையில் வழங்கப்படும் உணவே அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு, வீட்டு உணவும் அவருக்கு வழங்கலாம் என்ற சிறப்பு அனுமதி நீதிமன்றம் மூலம் பெறப்பட்டது.

இந்த நிலையில் சி.பி.ஐ கைது செய்யப்பட்ட வழக்கில் சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இப்போது அமலாக்கத் துறை கைது செய்த காரணத்தினால் சிறையில் இருந்துவருகிறார் சிதம்பரம். அமலாக்கத் துறை வழக்கிலிருந்தும் ஜாமீன் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் உபாதை காரணமாக சிதம்பரத்தை சிறையிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் தனி அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் .

சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்

“குடல் அலற்சி நோயால் பாதிக்கபட்ட அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. ஆனாலும் நோயின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை. எனவே, ஐதராபாத்தில் அவர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். அதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர் அவரின் வழக்கறிஞர்கள்.

இதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா “சிதம்பரத்திற்கு எய்ம்ஸ் குடல் அழற்சி நோய் சிகிச்சை நிபுணர் சிகிச்சை அளித்துவருகிறார். அவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கவும், அவருடைய மருத்துவரை அழைத்துவந்து சிகிச்சை அளிக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவர்களோடு சிதம்பரத்தின் மருத்துவரையும் இணைத்து ஒரு குழு அமைத்து சிதம்பரத்தின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து 'சிதம்பரம் உடல்நிலையில் சிக்கல் ஏதும் இல்லை' என்று அறிக்கை அளித்தது. நீதிமன்றம் சிதம்பரத்திற்குக் கொசுவலையும், மாஸ்க்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளிப்போவதும், அவர் உடல்நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே வருவதும், அவரது குடும்பத்தினருக்குப் பெரும் கவலையைக் கொடுத்துள்ளது.

மத்திய அரசு பழி வாங்கும் நோக்கத்தில் வயதைக் கூட பொருட்படுத்தாமல் சிறைக்கம்பிக்குள் வைத்துத் துன்புறுத்துகிறது என அவர் குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்கள். வரும் 4-ம் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அன்றும் ஜாமீன் மறுக்கபட்டால் உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீனாவது பெறும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம், தன் தொகுதியான சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “வரும் 4-ம் தேதி நிறைய நிர்வாகிகள் டெல்லி வருகை தாருங்கள். தலைவர் விடுதலையாகும் வரை டெல்லியில் தங்கிட முயற்சி செய்யுங்கள். இணைந்து போராடி நாம் தர்மத்தை வெற்றிபெறச் செய்வோம்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லி செல்ல டிக்கெட் புக் செய்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் மட்டுமே டெல்லியிலிருந்து சிதம்பரத்தின் விடுதலைக்கு ஏற்பாடு செய்துவந்தார். இப்போதுமுதல் முறையாக நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்திருப்பதன் காரணம் புரியவில்லை என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

சிவகங்கை நிர்வாகிகளுடன், கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நிர்வாகிகளுடன், கார்த்தி சிதம்பரம்

``அப்பாவின் உடல்நிலை சரியில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தும் ஜாமீன் வழங்க மறுக்கிறார்கள். அவர் எங்கும் தப்பிச் செல்லப் போவதில்லை. அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இல்லையென்றால் நோயின் தாக்கம் அதிகரித்துவிடும்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் கார்த்தி.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திகார் ஜெயிலில் உள்ள சிதம்பரத்தை வெள்ளிக்கிழமை காலை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரி்த்துள்ளார். அப்போது கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்துள்ளார்.