Published:Updated:

கழுகார் பதில்கள்

மு.கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
மு.கருணாநிதி

அரசியல்வாதிகள் நிஜத்தில் அவ்வளவு கொடூரமானவர்களா?

கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகள் நிஜத்தில் அவ்வளவு கொடூரமானவர்களா?

Published:Updated:
மு.கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
மு.கருணாநிதி

சு.பிரபாகர், தேவகோட்டை, சிவகங்கை.

தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கு சரியான மற்றும் எளிமையான வழிகளை உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் சொல்லும்போது, அந்த வழிகளிலேயே தீர்க்க அரசு முயற்சி செய்தால் என்ன?

பத்திரிகையாளர்களில் சிலரை, காலை 4 மணி, 5 மணிக்கெல்லாம் கரகரப்பான அந்தக் குரல் போனில் அழைக்கும். அது என்ன பிரச்னை, எந்த ஊர்ப் பிரச்னை என்றெல்லாம் கேட்டு மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்திக்கொண்டு, சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் கருத்துகளையும் அறிந்துகொண்டு அடுத்த ஓரிரு நாள்களில் முடிந்தவரை தீர்வும் கண்டுவிடும். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், மறைந்த முதல்வர் மு.கருணாநிதி.

பத்திரிகைகளில் முன்வைக்கப்படும் அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு காணாவிட்டாலும் கூடுமானவரை முயல்வார். குறைந்தபட்சம் அதன்மீது கவனத்தையாவது பதிப்பார். பல சமயங்களில் பத்திரிகைகளில் படித்துவிட்டு, தானாகவே நடவடிக்கையில் இறங்கிவிடுவார். ஆகஸ்ட் 7 - அவரின் முதல் நினைவு நாளில், இதை நினைத்துப்பார்க்க மட்டும்தான் முடிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@க.கடம்பவனம், ஈரோடு.

செல்வராகவன் இயக்கிய `என்.ஜி.கே’ படத்தில் வருவதுபோல், அரசியல்வாதிகள் நிஜத்தில் அவ்வளவு கொடூரமானவர்களா?

ஒருசிலர் அதைவிட!

@காட்டாவூர்.கு.இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.

ஜூனியர் விகடனின் செய்திகளுக்கு எதிராக தி.மு.க அவதூறு வழக்குகளைத் தொடர்வதால்தான், மீண்டும் மீண்டும் அந்தக் கட்சிக்கு எதிரான செய்திகள் ஜூ.வி-யில் மிகத் தீவிரமாக வெளியிடப்படுகின்றன என்று பேச்சிருக்கிறதே?

ஜூவி-யில் செய்திகள் வெளியாக வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சியில் ஏகப்பட்ட பிரச்னைகள் மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்றும் பேச்சிருக்கிறதே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.

`அ.ம.மு.க-வை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்வதற்கு, ஆட்சேபனை எதுவும் உண்டா?’ எனக் கேட்டு, விதிமுறைகளின்படி தின பத்திரிகையில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. அதில், டி.டி.வி-யின் பெயரோடு ‘எஸ்.அன்பழகன், கரூர்’ என்றொரு பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதே அது யார்?

நீங்கள் கேட்டதால் தேடித் தேடிக் கண்டுபிடித்தேன். அவர்தான் அந்தக் கட்சிக்கு அவைத்தலைவர். சந்தோஷமா?

@காந்தி, திருச்சி.

வேலூர் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஒதுக்கப்பட்டது ஏனோ?

‘உதய’த்துக்கு முன்பாகவே போயிருப்பாரோ!

@எ.ஜேம்ஸ் ராஜசேகரன், மதுரை.

அந்த 570 கோடி என்ன ஆனது?

‘அதெல்லாம் பிரிச்சு, அண்ணா மார்க்கெட்ல வித்தாச்சுனு வெச்சுக்கப்பு’. பெரிய இடத்துச் சமாசாரங்கள் எப்போதுமே ‘முடிந்தது’ என்றால் முடிந்ததுதான்.

@.பூவராகவன், படியூர், காங்கேயம்.

கேபிள் கட்டணத்தைக் குறைத்திருக்கிறாரே முதல்வர்?

‘டாஸ்மாக்’ மதுபானங்களின் விலையைத்தான் ஏற்கெனவே ஒரேயடியாக ஏற்றிவிட்டாரே!

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அக்டோபர் மாதம் வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. அதேசமயம், ‘உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார். ஆனால், வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படவில்லை’ என்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. ஏன் இந்தக் குழப்பம்?

‘அவன், நம்மகிட்ட மாட்டிக்கிட்டான்னு இவனுங்க நினைச்சுக்கிட்டிருக்கானுங்க. ஆனா, இவனுங்கதான் அவன்கிட்ட மாட்டிக்கிட்டிருக் கானுங்க’ என்று ஒரு படத்தில் டயலாக் வரும். அந்தக் கதையாக, நீதிமன்றங்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கின்றன என்பதுதான் நிதர்சனம். உண்மையிலேயே படா கில்லாடிகள்தான். இவர்களின் ஆட்சி சாமர்த்தி யத்தைப் பார்த்தால் கருணாநிதி, ஜெயலலிதா எல்லோரும்கூட எகிறி ஓடியே ஆகவேண்டும்.

கழுகார் பதில்கள்

ஜி.வி.மனோ, தூத்துக்குடி.

சமூக அக்கறை என்பது, நமது அரசியல் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்று. அப்படி யாருக்கும் அக்கறை இருக்கிறதா?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ஒவ்வொருவரும், தத்தமது குடும்பத்தினரையே ‘சமூக’மாக நினைத்து நன்றாக ‘கவனி’த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பார்களா? தேவையில்லாத கேள்விகளையெல்லாம் கேட்டு அவர்களுடைய மனம் கோணவைத்துவிடாதீர்கள் மனோ.

சம்பத்குமாரி, பொன்மலை.

‘டம்ளர் நிறைய தண்ணீர் கொடுத்தால், பாதியைக் குடித்துவிட்டு மீதியை வீணாக்குகிறார்கள். இதைத் தடுக்க, சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்கும்போது உறுப்பினர்களுக்கு ‘அரை டம்ளர்’ தண்ணீர் கொடுத்தால் போதும். தேவையானால் மேலும் கேட்டு வாங்கிக்கொள்ளட்டும்’ என்று உத்தரப்பிரதேச மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளாரே?

தவித்த வாய்க்குத்தான் தண்ணீர்; உணவு விடுதி, திருமணம் உள்ளிட்ட விருந்துகள், பெரும்பெரும் சந்திப்புகள், அரசாங்கக் கூட்டங்கள் என்று எல்லா இடங்களிலும் இருக்கும் மேசைகளுக்கு அல்ல. இதுபோன்ற இடங்களில் பரிமாறப்படும் தண்ணீர், பாதிக்கும் மேலாக பாட்டில்/டம்ளர்களில் அப்படி அப்படியே விட்டுச் செல்லப்படுவதும், அது அப்படியே குப்பைக்குச் செல்வதையும் பார்க்கப் பார்க்க, கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது. அதை சரியாகக் கவனித்து இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருக்கும் உ.பி சபாநாயகர் ஹிருதய் நாராயண் தீட்சித்துக்கு ஒரு சபாஷ்!

எல்.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

சென்னையில் வசிக்கிறீர்களே, தினமும் நீராடல் நடக்கிறதா?

நீராட்டல் நடக்கிறது!

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோயம்புத்தூர்.

தமிழருவி மணியன் எங்கே... அவர் அமைதியாய் இருப்பது ஏன்?

‘கொட்டும் மழைக்காலம்

உப்பு விற்கப் போனேன்.

காற்றடிக்கும் நேரம்

மாவு விற்கப் போனேன்.’

கழுகார் பதில்கள்

@ஆர். ஹரிகோபி, புதுடெல்லி.

‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைக் கலைத்ததால் யாருக்கு நஷ்டம்... யாருக்கு லாபம்?

மீடியாக்களுக்கும் மீம் மேக்கர்ஸுக்கும்தான் பலத்த நஷ்டம். பால்கனியில்கூட இனி வந்து நிற்கத் தேவையில்லை என்பதால், தீபாவுக்கு லாபம்!

‘காயல்’ எஸ்.எ.நெய்னா, காயல்பட்டினம்.

முத்தம் கொடுப்பதும் கட்டி அணைப்பதும் தமிழ்க் கலாசாரத்தைச் சீரழிக்கும் செயல்கள்தானே?

‘இதெல்லாம்’ இல்லை என்றால், தமிழ் மட்டுமல்ல இந்தி, மலையாளம், குஜராத்தி, சீனா என எந்தக் கலாசாரமுமே இல்லை. ஆனால், ‘பொதுவெளியில் வேண்டாம்’ என்று நாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம். அவ்வளவுதான்!

@உஷாதேவி, சென்னை.

‘இரண்டு பெண்கள், இரண்டு சாக்கு ஆற்றுமணல் அள்ளியதற்காகக் கைது’- சட்டம் தன் கடமையைச் செய்றத பார்த்தா, நமக்குச் சிப்பு சிப்பா வரல?

வண்டி வண்டியா வருது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism