Published:Updated:

கழுகார் பதில்கள்

பிரியங்கா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா காந்தி

கழுகார்

கழுகார் பதில்கள்

கழுகார்

Published:Updated:
பிரியங்கா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா காந்தி

கே.செல்வராஜ், வ.பாளையம், விழுப்புரம் மாவட்டம்.

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்ததாமே... இந்தக் காலத்தில் ஏன் பொழிவதில்லை?

‘நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை’

-செந்தமிழ்க்கிழவி ஔவையார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொன்விழி, அன்னூர்.

ஜெ.தீபா எங்கே... சத்தத்தையே காணோம்?

வாயை அடைத்திருப்பார்களோ!

உ.குமரவேல் ஆசான், ஆலப்பாக்கம், சென்னை-116.

‘குழந்தைகளைக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை’, ‘குடும்பத்தோடு குழந்தைகளும் கொலை’ என்பதுபோன்ற சம்பவங்கள் மனித சமுதாயத்துக்கே ஆபத்தானவை. இதையெல்லாம் தடுக்க வழி காண்பது அவசரமான, அவசியமான ஒன்று. அரசாங்கத்தை நம்பி பிரயோஜன மில்லை. ஊடகம் இதை நோக்கிச் செயல்படுமா?

ஒரே வழி, எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைப்பதுதான். கட்டு மீறும்போது ஏற்படும் தோல்விதான், உயிர் பறித்தல், உயிர் துறத்தல் என்பது போன்ற கொடுமையான, கடுமையான முடிவுகளை நோக்கித் துரத்துகிறது. இதை நெறிப்படுத்தி, அனைவரையும் அன்போடு வாழவைக்கும் வேலையைத்தான் சங்ககாலம் தொடங்கியே ஊடகம் செய்துவருகிறது. திருக்குறள் தொடங்கி பற்பல நீதி நூல்களும் பேசுவது இதைப்பற்றித்தானே.

எதுவாக இருந்தாலும், ‘என் வாழ்க்கை என் கையில்’ என்பதுதான் நிதர்சனம்.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

கடவுளுக்குச் சமமாக மோடி புகழப்படுகிறாரே?

அன்னாருக்கு அபாய மணி!

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

குடிநீர் கேட்டு ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வே (தோப்பு வெங்கடாசலம் ) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார். இப்போதும்கூட தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்றுதான் சொல்வார்களா ஆளுங்கட்சியினர்?

இதை, அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டால், ‘அ.தி.மு.க எந்த அளவுக்கு ஜனநாயகமான கட்சி என்பதை இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு, அத்தனை மைக்குகளும் தன் வாய்க்குள் போகும் அளவுக்குச் சிரிப்பார்.

கே.கே.பாலசுப்பிரமணியன், கே.ஆர்.புரம், பெங்களூரு.

‘பி.எஸ்.என்.எல்?’

பரிதாபம்தான். ‘பி.எஸ்.என்.எல் மூடப்படும் நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதற்குக் காரணம் இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு காட்டும் பரிவுதான்’ என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அதுமட்டுமே உண்மையல்ல. ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, அதன் ஊழியர்களும் உயர் அலுவலர்களும் நினைத்தால், தொடர்ந்து உச்சத்திலேயே வைத்திருக்க முடியும். பல்வேறு நிறுவனங்களும் தொலைத்தொடர்பு சேவையில் குதித்த கால கட்டத்திலும்கூட, பி.எஸ்.என்.எல் உச்சத்தில்தான் இருந்தது. ஆனால், கடந்த காலங்களில் ஊழியர்கள் நடந்துகொண்ட விதம்தான், பிற நிறுவனங்களை நோக்கி மக்கள் மடை மாறியதற்குக் காரணம். வாடிக்கையாளர்களை, தங்களின் அடிமைகளாக வேதான் நடத்தினார்கள். தொலைபேசி இணைப்புக்காக லஞ்சம், இணைப்பு வந்த பின் அது உயிரோடு இருப்பதற்காக அடிக்கடி லஞ்சம், இடம் மாற்றுவதற்கு லஞ்சம், புதிய போன் வேண்டுமென்றால் லஞ்சம்... இப்படி ஊழியர் களில் பலரும் லஞ்சத்தில் மஞ்சம் குளித்த காலத்தை மறந்துவிட முடியாது. இதையெல்லாம் பிற நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டன. ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ தவிக்கிறது பி.எஸ்.என்.எல்.

சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்.

தமிழக சட்டமன்ற மேலவை இனி உயிர் பெறுவது இயலாததோ?

வேடிக்கை பார்ப்பதற்கு இருக்கிற சேனல் போதாதோ உமக்கு? இன்னும் ஒரு சேனல் தேவைப்படுகிறதோ!

@சி.கார்த்திகேயன், சாத்தூர்.

பிரியங்கா காந்திக்கு அடுத்த வாய்ப்பு தரப்படுமா?

ஓ... அதற்காகத்தான் இப்படி இழு இழுவென இழுக்கிறார்களோ!

கழுகார் பதில்கள்

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

‘சரவணபவன்’ ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத்துக்கு 10 ஆண்டுகள் தேவைப்படுமா?

‘ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால், ஒரேயொரு நிரபராதிகூட தண்டிக்கப் பட்டுவிடக் கூடாது’ என்பதுதான் நம்முடைய நீதி பரிபாலனத்தின் அடிநாதம். எனவே, கால வரையறை என்பது இங்கே இல்லை. ஜெயலலிதா சார்ந்த சில வழக்குகளில் அடுத்த சில நாள்களிலேயே தீர்ப்புகள் வந்தன. லாலு பிரசாத் யாதவ் வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்தது. இதெல்லாம் நீதிமன்றத்தின் உரிமை சார்ந்த விஷயங்கள். இத்தனை ஆண்டுகள் தேவைப்படுமா, அத்தனை ஆண்டுகள் தேவைப் படுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது. கேட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகூட பாயலாம்.

@பல்லவ மன்னன், திருநெல்வேலி.

மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், மாநிலங்களவைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவது நியாயமானதா?

நியாயமான கேள்வி!

‘காட்டாவூர்’ இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.

மக்களுக்காகப் போராடும் முகிலன் போன்ற போராளி களைக் கடத்திச்செல்வது, அவர்களை முடக்குவதற்காகப் பாலியல் புகார்கள் சுமத்துவது என்பதெல்லாம் பாசிசம்தானே?

‘இப்படியெல்லாம் தகிடுதத்தம் செய்வதற் காகவே ‘போராளி’ வேஷம் போடுகிறார்கள்’ என்று இன்னொரு பக்கமிருந்து குற்றச்சாட்டுகள் பாய்கின்றனவே. ‘முகிலன் கூடவே போராட்டக் களத்தில் நின்ற ஒரு பெண், தன் வாழ்க்கையையே பணயம் வைத்துப் புகார் கூறியுள்ளார். அதில் உண்மையில்லாமல் இருக்குமா? ஆதாரங்கள் இல்லையென்றால், வழக்கு தானாகவே காணாமல் போய்விடுமே. எதற்காக முகிலன் காணாமல் போகவேண்டும்? இவரைவிடக் களத்தில் தீவிரமாகச் சுழன்றதால் தேசத்துரோக வழக்கு வரை பாய்ச்சப்பட்ட பலரும், ஊருக்குள் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்’ என்கிற கேள்விகளுக்கெல்லாமும் பதில் தேடித்தானே ஆகவேண்டும்.

முகிலன்
முகிலன்

முகிலன் என்கிற தனிப்பட்ட நபரைவிட, போராளி, போராட்டம், போராட்டக்களம் இவையெல்லாம்தான் முக்கியம். போர்க்களத்தில் இருப்பவர்கள், துளிகூட கறைபடியாத அளவுக்குத் தூயவர்களாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். கறையில்லாதவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முகிலனுக்கு மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களுக்கும் இருக்கிறது. அதுதான் நாளைய போராளிகளுக்கானப் பாதுகாப்புக் கவசமாக இருக்கும். அதைவிடுத்து, அரசாங்கத்தின் அடக்குமுறை என்று மட்டுமே கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தால், சொல்வதற்கு ஏதுமில்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!