Published:Updated:

கழுகார் பதில்கள்

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

‘திரட்ட முடியும்’ என்று சொல்வதைவிட, ‘ஏற்பாடு செய்ய முடியும்’ என்பது பொருத்தமாக இருக்கும்.

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

வீட்டில் இருந்து பணிபுரியும் 67 சதவிகிதம் பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டுவருகிறார்களாமே?

கூடவே, வீட்டில் இருப்பவர்களும் அதே வியாதியால் அவதிப்பட்டுவருகிறார்களாமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

@சகுந்தலா.

கொரோனா பற்றிய செய்திகளையே தொடர்ந்து படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருப்பதால் மனநிலை பாதிப்பு ஏற்படும் எனத் தோன்றுகிறதே?

உண்மைதான். ஆனால், ‘எதையும் தாங்கும் இதயம்’ என்கிற மனோதிடத்தை வளர்த்துக் கொண்டால், இப்படிப்பட்ட பாதிப்புகளில் சிக்காமலிருக்க முடியும். சிக்கினால்கூட, எளிதாக வெளியே வந்துவிடவும் முடியும். ஆனால் எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி போன்றவற்றுக்குக்கூட பயப்படும் இதயங்களாக அல்லவா வளர்த்துவைத்திருக்கிறோம்... வளர்த்துக்கொண்டும் இருக்கிறோம்.

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

ஒருசில வழக்குகளை, ‘நான் விசாரிக்க விரும்பவில்லை’ என்று சில நீதிபதிகள் ஒதுங்கிக் கொள்கிறார்களே?

சம்பந்தப்பட்ட வழக்கை வழக்கறிஞராக இருந்தபோது அவரே நடத்தியிருப்பார்; வழக்கை நடத்தும் வழக்கறிஞர், நீதிபதியின் உறவினராக இருப்பார், கீழமை நீதிமன்றத்தில் அதே வழக்கை அவரே கையாண்டிருப்பார். இப்படி பல காரணங்களால் ஒதுங்குவது உண்டு. சட்டபூர்வமான இதை `இயற்கை நீதி’ (Natural justice) என்றே நீதித்துறையில் அழைக்கிறார்கள். அதேசமயம், ‘மிக மிக முக்கியமானவர்கள்’ என்கிற வகையிலானவர் களோடு தொடர்புடைய வழக்கிலிருந்து, ‘தேவையில்லாத வம்பு’ என்று சில நீதிபதிகள் விலகுவதும் உண்டு. நீதிபதிகளுக்கு சட்டப்படி உச்சபட்ச பாதுகாப்புகள் கொடுக்கப் பட்டிருந்தும், இப்படி நடந்துகொள்வது மகாகேவலமே! இதைவிட, இதுபோன்ற கோழைகள் பதவியைவிட்டே விலகிச் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது. நீதித்துறையில் பிரபலமான வாசகம் இது... ‘Not only must Justice be done; it must also be seen to be done’. நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அது நிலைநிறுத்தப்படுவதையும் கண்முன்னே உறுதிப்படுத்த வேண்டும்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

‘எதிர்க்கட்சியாக இருப்போம்... எதிரிக்கட்சியாக இருக்க மாட்டோம்’ என்று சொன்ன ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏன் இத்தனை அறிக்கைப்போர் நடத்துகிறார்?

கொரோனா டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் ‘அக்கப்போர்’ நடப்பதாக செய்திகள் வருபோது, ‘அறிக்கைப்போர்’ நடத்துவதில் தவறில்லை. அதிலும் அவர் எதிர்க்கட்சித் தலைவர். இந்தப் போரை நடத்தாமல் இருந்தால்தான் தவறு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@அந்திவேளை.

‘உங்கள் ராஜினாமா ஏற்கப்படவில்லை. பணியைத் தொடர வேண்டும்’ என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்காமல், ‘மக்கள் சேவையைத் தொடரப்போகிறேன்’ என்கிறாரே கண்ணன் கோபிநாத் ஐ.ஏ.எஸ். இது ஏற்கக்கூடியதுதானா?

அவர், சுதந்திரப் பறவையாக இருக்க நினைக்கிறார். அதிலென்ன தவறு! அதுமட்டுமல்ல, இவர் போன்றோரை வைத்துக்கொண்டிருந்தாலும் ஆட்சியாளர்களுக்குத்தான் தொல்லை. இதைவிட, ‘கைக்கு அடக்க’மாக எத்தனையோ பேர் இருக்கிறார்களே!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

@கரு.செந்தில்குமார், கோவை.

‘பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்தார்கள்’ என முதலமைச்சர் கூறுவது சரியா?

தானும் ஒரு பணக்காரர் என்பதை, அந்த நேரத்தில் மறந்துவிட்டார்போல. விட்டுத்தள்ளுங்கள்.

@மு.சுப.கருப்பையா, தஞ்சாவூர்.

‘ஒரே மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டித் தர முடியும்’ என்கிறாரே ப.சிதம்பரம். இது எப்படிச் சாத்தியம்?

‘பத்து லட்சம் கோடியைக்கூட திரட்ட முடியும்’ என்றும் சொல்லியிருக்கிறார். ‘திரட்ட முடியும்’ என்று சொல்வதைவிட, ‘ஏற்பாடு செய்ய முடியும்’ என்பது பொருத்தமாக இருக்கும். பொருளாதாரச் சிக்கலில் இருக்கும்போது, எந்த ஒரு நாடும் எடுக்கக்கூடிய நடவடிக்கையைத்தான் அவர் முன்வைக்கிறார். இது சாத்தியம் என்பது கடந்த காலங்களில் பல நாடுகளிலும் நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது. இது, இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தெரிந்த விஷயமே! அதனால்தான் ஏற்கெனவே அதற்கான ஏற்பாடுகளிலும் அவர் இறங்கிவிட்டார். அதாவது, பல நாடுகளைப்போல் இங்கும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்போகிறது அரசு.

@பொன்விழி, அன்னூர்.

இனிவரும் காலங்களில் மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும்... சாமானிய மக்கள் இதிலிருந்து எப்படி மீள்வது?

ஒவ்வொருவரும் தங்களை சாமானியர்களாக உணர ஆரம்பித்தால் மட்டும் போதாது... சாமானியர்களாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும். பேருந்துகள் இல்லை, ரயில்கள் இல்லை, விமானங்கள் இல்லை, திரையரங்குகள் இல்லை, ஹோட்டல்கள் இல்லை, மால்கள் இல்லை. ஆனால், நம்முடைய ‘வாழ்க்கை’ மட்டும் இருக்கத்தானே செய்கிறது. ‘தேவையில்லாமல் ஒரு நொடியையோ ஒரு பைசாவையோ செலவழிக்க வேண்டாம்’ என்பதைத்தான் இந்தக் கொரோனா நமக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்தாலே, எதையும்... எப்போதும்... யாராலும் சமாளிக்க முடியும்.

@பிரதீபா கணபதி.

இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள், சொந்த ஊரில் இருக்கும் ரேஷன் கடையில் பொருள்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். பக்கத்தில் இருக்கும் கடைகளிலேயே வாங்கிக்கொள்ள அரசு ஏற்பாடு செய்யுமா?

அப்போதே... ‘ஒரே நாடு... ஒரே கார்டு’ என்று சொன்னார்கள். பரிசோதனை முயற்சி ஆரம்பமான நிலையிலேயே ‘ஊரடங்க’ வேண்டியதாகிவிட்டதே! இப்போதும்கூட அரசு மனதுவைத்தால் இது சாத்தியம்தான். அனைவருமே இதை அரசுக்கு வலியுறுத்துவோம்.

திருமலை
திருமலை

@ஆனந்த் நரசிம்மலு, ராஸ் அல்-ஹைமா, யு.ஏ.இ.

திருமலையில் தற்போது நிம்மதியாக ஓய்வில் இருக்கும் ஸ்ரீவெங்கடாசலபதி யின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் என்று உங்கள் கற்பனையில் கூறுங்களேன்?

இந்து புராணங்களின் அடிப்படை யில் பக்தர்களைக் காக்கும் வேலையைச் செய்பவர்தான் ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள். கொரோனா பாதிப்பால் உலகமே துடித்துக்கொண்டிருக்கும்போது, அவரும் நிம்மதியின்றிதானே இருக்க முடியும்!

@நீலன், கோவை.

பிரதமர் நரேந்திர மோடி, கொரோனோ நிவாரண நிதிக்காக ஆரம்பித்திருக்கும் ‘Care fund’ என்பது, ஆர்.டி.ஐ சட்டத்துக்குள்ளும் வராது, சி.ஏ.ஜி ஆடிட்டுக்குள்ளும் வராது என்கிறார்கள். இது உண்மை என்றால், மிகப்பெரிய ஊழலுக்குத்தானே இது வழிவகுக்கும்?

இந்த நிதிக்கு வரம்புகளின்றி விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது புதிதாக ஆரம்பிக்க என்ன தேவை எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. ‘எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லை... பிரதமருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது’ என்று ஆட ஆரம்பித்தால், ‘ஊழலுக்கு வழிகோலுகிறார்கள்’ என்கிற சந்தேகங்கள் வரத்தான் செய்யும்.

@பி.நரசிம்மன், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

‘பத்தாம் வகுப்பில் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிடலாம். இது, கல்லூரியில் சேர்ப்பவர்களுக்கான தேர்வு இல்லையே’ என்று கூறியுள்ளீர்கள். ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் போன்றவற்றுக்கு பத்தாம் வகுப்புதான் அடிப்படை. அனைவருமே கல்லூரிகளில் சேர்வதில்லையே கழுகாரே?

அந்தப் பதிலின் அடிநாதம்... ‘கடுமை காட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை’ என்பதுதான். தேர்வுகளை உருவாக்கியவர்களே நாம்தானே. அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண்ணை கணக்கில் எடுக்கலாம் அல்லது கல்லூரிகள் திறக்கும் நேரத்தில் ஒரேயொரு தேர்வை மட்டும் நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையிலும் எடுக்கலாம். இப்படி, யோசிப்பதற்கு ஆயிரத்தெட்டு வழிமுறைகள் இருக்கின்றனவே!

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

‘தமிழகத்தில் கொரோனா முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

இவர்கள் அடிக்கும் கூத்துகளை, அந்தக் கொரோனாவால்கூட பொறுத்துக்கொள்ள முடியாது.

@வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

‘மக்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி காசோலைகளில் என் பெயரை அச்சிட வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருக்கிறாரே?

டொனால்டு ஜெயலலிதா!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!