அலசல்
அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

மு.க.ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்குப் பின்னடைவுதானே?

@இ.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘நான் பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதி வளர வேண்டும்’ என்கிறார் மு.க.ஸ்டாலின். கருணாநிதி பொறாமைப்படும் அளவுக்கு ஸ்டாலின் வளர்ந்தாரா?

கருணாநிதி அப்படிக் கேட்டதாகத் தெரியவில்லையே. பிறகு எப்படி ஸ்டாலின் வளர்ந்தாரா... இல்லையா எனக் கண்டுபிடிப்பது?

@இளங்கோ.ஆர்.

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆட்சி செய்வதால்தான் பாலியல் வன்முறைகள் அதிகம் நடக்கின்றனவா?

இப்படியெல்லாம் கண்களை மூடிக்கொண்டு யோசிக்கக் கூடாது. உத்தரப்பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு 4,669 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே, மத்தியப்பிரதேசத்தில் 5,599 வழக்குகள்! 2017-ல் இரண்டுமே பா.ஜ.க வசம் இருந்த மாநிலங்கள் தான். ஆனால், அதே ஆண்டில் ‘சமூகப் போராளி’ அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி நடக்கும் டெல்லியில் 1,231 வழக்குகள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 16.51 சதவிகிதம் உத்தரப்பிரதேசத்தில் தான் இருக்கிறது. சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது, 6 சதவிகித மக்கள்தொகை கொண்ட மத்தியப்பிரதேசத்தின் நிலை மிக மோசமாக இருக்கிறது. இதைவிட மோசம், டெல்லி. 1.39 சதவிகித மக்கள்தொகை கொண்ட டெல்லியில் நடக்கும் பாலியல் வன்முறைகள் உச்சபட்சம். ஆக, ஆள்வது சாமியாராக இருந்தாலும் சமூகப் போராளியாக இருந்தாலும், சமூக மாற்றம் வராமல் எதுவும் மாறப் போவதில்லை.

ஸ்டாலின், கருணாநிதி, உதயநிதி
ஸ்டாலின், கருணாநிதி, உதயநிதி

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.

‘பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகள் 21 நாள்களுக்குள் விசாரித்து முடிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்குத் தண்டனை’ என்று ஆந்திராவில் சட்டம் இயற்றிவிட்டாரே முதலமைச்சர் ஜெகன்?

தெலங்கானா என்கவுன்டர் நோய்க்கு, ஆந்திரத்து மாமருந்து. இந்த விசாரணை நடைமுறை ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான மருந்தாக மாறவேண்டும்.

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

‘2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கோ, அவருடைய அரசுக்கோ தொடர்பில்லை’ என்று நானாவதி கமிஷன் கூறியிருப்பது பற்றி?

கமிஷன்களை நியமிப்பது ஆளும் அரசுகள்தான். அந்த வகையில், நானாவதி கமிஷனை நியமித்ததே நரேந்திர மோடிதான். அந்தக் கலவரத்தின்போது 2000-த்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆனாலும், ‘மாநில அரசும் காவல்துறையும் தம் கடமையைச் சிறப்பாகச் செய்தன’ என்று இறுதி அறிக்கையில் இந்த கமிஷன் சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இதுவே, அந்த கமிஷனுக்கான ‘நற்சான்றிதழ்!’

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

கிராமசபைக் கூட்டங்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திய மக்கள் நீதி மய்யம், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா?

ஓவர் ‘விழிப்பு உணர்வு’ வந்துவிட்டதால் கட்டுப்படியாகாது என ஒதுங்கி விட்டார் கமல். ஊராட்சித் தலைவர் பதவியே 50 லட்சம், 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய்க்கொண்டிருக்கிறதே!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

‘இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது’ என்று பா.ஜ.க-வின் இல.கணேசன் சொல்கிறாரே?

கழுகார் பதில்கள்

அவர் சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், பாரதி மட்டுமல்ல பெரியார், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், நேதாஜி போன்ற தலைவர்கள் தோன்றினால்கூட போதாது என்கிற அளவுக்குத்தான் நாட்டின் நிலைமை மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே, நியாயமான எண்ணம்கொண்ட ஒவ்வோர் இந்தியனுமே அத்தகைய போர்க்குணம் படைத்தவனாக மாறவேண்டும் என்பதுதான் இப்போதைய அவசரத் தேவை!

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘2000 ரூபாய் நோட்டு செல்லாது’ என்ற வதந்தி மீண்டும் பரவிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் பதில்தான் என்னவோ?

‘500, 1000 ரூபாய் செல்லாது. விரைவில் 2,000 ரூபாய் நோட்டு வரப்போகிறது’ என்ற செய்திகள் அக்டோபர் 2016-ல் பரபரப்பாகப் பரவின. ‘அத்தனையும் வதந்தி’ என மறுத்த மத்திய அரசு, அடுத்த ஒரே வாரத்தில் ஒட்டுமொத்த மக்களையும் ஏ.டி.எம்., வங்கி என வீதிவீதியாக அலையவைத்தது. இப்போதுகூட 2,000 ரூபாய் விஷயத்தை ‘வதந்தி’ என்றே மறுத்துள்ளது. அதேசமயம், ‘2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக வங்கிகளின் தனிச்சுற்றுக்காக சில அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன’ என்கிற தகவல்கள் (வதந்)தீயாகப் பரவிக்கொண்டிருக் கின்றன. அது எப்படியோ போகட்டும். எப்போதும் எதற்கும் தயாராக இருப்பதுதானே யாருக்கும் நல்லது!

எஸ்.பழனிவேல், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

‘உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்கிறது என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டை, இப்போது உண்மை என நாங்கள் உணர்கிறோம்’ - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொல்லியிருப்பது மு.க.ஸ்டாலினுக்குப் பின்னடைவுதானே?

ஜனநாயகத்துக்குப் பின்னடைவு, நீதிக்குப் பின்னடைவு. இடஒதுக்கீடு தொடங்கி பலவிதத் திலும் பட்டவர்த்தனமாக விதிமுறைகளை மீறியே தேர்தலை அறிவித்து, அதன்படியே செயல்படவும் ஆரம்பித்துவிட்டது மாநில தேர்தல் ஆணையம். இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்ன பிறகுதான் அங்கிருந்து ஆணையத்துக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அப்படியும் கூட நீதிமன்ற உத்தரவுகளை காலில் போட்டு மிதித்தபடிதான் தேர்தலை நடத்துகிறது ஆணையம். இத்தகைய சூழலில் நீதி கேட்டு மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்லாமல், கட்டப்பஞ்சாயத் துக்கா செல்ல முடியும்? ‘கருத்து சொல்கிறோம்’ என்ற பெயரில் தலைமை நீதிபதியே இப்படியெல் லாம் கேலியும் கிண்டலுமாகப் பேசுவது... ஆபத்தானது.

எஸ்.அன்பழகன், சென்னை-23.

மறுபடியும் கட்சி மாறத் தயாராகிவிட்டாரே பழ.கருப்பையா?

‘பழுத்த’ பழம்!

@பிஅசோகன், கொளப்பலூர், ஈரோடு மாவட்டம்.

மக்களவையில் தமிழ்மொழியின் மாண்பு பற்றி, தி.மு.க எம்.பி ஆ.ராசா மொழிந்தது அருமைதானே?

‘நாடாளுமன்றத்தில் முத்திரை பதித்தவர்கள்’ என்ற ஒரு பட்டியல் உண்டு. அதில் அறிஞர் அண்ணா, இரா.செழியன், நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன், வைகோ போன்றோரின் வரிசையில் இணைந்திருக்கிறார் ஆ.ராசா. எந்த மொழியையும் தாழ்த்தாமல், அதேசமயம் தமிழ் மொழியின் அருமையை ஆணி அடித்தாற்போல் அந்தச் சபையில் ஆதாரங்களுடன் அவர் அடுக்கியவிதம், ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்பதை உணர்த்துவதாக இருந்தது.

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

‘இஜிப்து (எகிப்து) வெங்காயம் இதயத்துக்கு நல்லது’ என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜு?

அதைக் கேட்டதும், ‘மலையூர் மம்பட்டியான்’ ரீமேக் படத்தில் ‘ஆட்டுக்கு நல்லது’ என்று வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வந்தது.

@ஜெயம் ராஜேந்திரன், பொறையார், நாகப்பட்டினம் மாவட்டம்.

‘ஆயுள் குறைவதற்கு சுற்றுச்சூழல் மாசு காரணமல்ல’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளாரே?

யாராவது அப்படிச் சொல்லச் சொல்லியிருப் பார்கள்... சொல்கிறார். மாநிலமோ மத்தியோ பெரும்பாலான அமைச்சர்கள் ‘கைப்பிள்ளை’ களாகவும் ‘கிளிப்பிள்ளை’களாகவும்தானே இருக்கிறார்கள்.

@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பற்றி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் ட்வீட்?

‘நம்மை அவர்கள் பிரிக்கிறார்கள். சிஸ்டம் மீதான நம்பிக்கை மெதுவாக வலுவிழக்கிறது. அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஆணவத் தின் மொழி இருக்கிறது. ஆனால், நம்முடைய மதச்சார்பற்ற மனநிலை, வலிமையுடன் உருவானது. அது வலிமையுடனே இருக்கும்’ - செம ஷார்ப் ஷாட்! ம்... கேமரவால் கவிதை பாடுபவராயிற்றே!

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர், திருநெல்வேலி மாவட்டம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் சிவசேனா நடந்துகொண்ட ஸ்டைலை ரசித்தீரா... நொந்தீரா?

டாக்டர் ராமதாஸ், வெகுவாக ரசித்ததாகக் கேள்வி!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!