Published:Updated:

கழுகார் பதில்கள்

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி

சாமானியர்கள் இதைக் கொண்டாடிய அளவுக்குத் தமிழக காங்கிரஸின் சில தலைவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை... இதைப் பற்றிப் பேசவில்லை

அ.குணசேகரன், புவனகிரி.

கொரோனா, எப்படி அத்தனை பாதுகாப்புள்ள சசிகலா இருக்கும் சிறைக்குள்ளே சென்றதாம்?

இதே சந்தேகத்தைத்தான் சசிகலாவின் குடும்பத்தினரும் கேட்கிறார்கள். ஆள்வோர் எண்ணம் வைத்தால் ‘புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும்’ என்பார்கள். போலீஸே நுழைய முடியும் இடத்தில் கொரோனா நுழையாதா?

வண்ணை கணேசன், சென்னை.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, குஷ்பு, கனிமொழி, எல்.முருகன் இவர்களையெல்லாம் வைத்து ஒரு `பிக் பாஸ்’ நடத்தினால் எப்படியிருக்கும்?

ஒரே வீட்டுக்குள் அடைந்து கிடப்பது இல்லையே தவிர, இப்போது மட்டும் என்ன நடக்கிறது..?

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

``தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மக்கள் தெருவில் நடமாட முடியாது’’ என்று முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறாரே?

ஏன்... தி.மு.க ஆட்சிக்கு வந்தா, நடந்து போறவங்களுக்கு இலவச டூ வீலர் தரப்போறாங்களா?

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ராகுல் காந்தி வில்லேஜ் குக்கிங்கில் கலந்துகொண்டு காளான் பிரியாணி சாப்பிட்ட வீடியோ வைரலாகிவிட்டது பார்த்தீர்களா..?

ராகுல் காந்தி கலந்துகொண்ட அந்த வில்லேஜ் குக்கிங் சேனல் வைரல் வீடியோவையும் பார்த்தோம். “சாமானியர்கள் இதைக் கொண்டாடிய அளவுக்குத் தமிழக காங்கிரஸின் சில தலைவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை... இதைப் பற்றிப் பேசவில்லை” என்ற அக்கட்சித் தொண்டர்களின் புலம்பலையும் கேட்டோம்!

கழுகார் பதில்கள்

இரா.ரெங்கசாமி, வடுகபட்டி.

தற்போதுள்ள அரசியல்வாதிகளில் வேகமும், விவேகமும், விவரமும், திறமையும் உள்ளவர் யார்?

கடல்லயே இல்லையாம்!

@PRH விநாயகம்.

ஓ.பி.எஸ் யாருக்காகப் பதுங்குகிறார்?

இவ்வளவு நாள் எதற்காக பயந்து பதுங்கினாரோ... அதே சொந்தக் காரணங்களுக்காகத்தான்!

சோம.தேவராசன், கும்பகோணம்.

ஸ்டாலினுக்கும் கூட்டம் கூடுகிறது; எடப்பாடிக்கும் கூட்டம் கூடுகிறது. மக்களின் தீர்ப்பும் ஆதரவும் யார் பக்கம் இருக்கும் என்பதை உங்களால் இப்போதே கணித்துச் சொல்ல முடியுமா?

கடைத் திறப்புவிழாவுக்கு வரும் செலிபிரிட்டிகளுக்கே பெருங்கூட்டமாகக் கூடுவது நம் மக்களின் வழக்கம். கூட்டம் கூடுவதையெல்லாம் வைத்துக் கணக்குபோட முடியாது! நம் மக்களின் மனநிலை, மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களில் சொல்வதுபோல ‘கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது’!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

திராவிடக் கழகங்கள் வேரூன்றிய பின்னர், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருக்கிறதா?

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஜா.அணி - ஜெ. அணி என அ.தி.மு.க பிளவுபட்டு, இரு அணிகளாக 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இன்னொரு பக்கம், தி.மு.க களத்தில் இருந்தது. காங்கிரஸ், ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்ற கோஷத்துடன் மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த, நான்கு முனைப்போட்டியாக அமைந்தது அந்தத் தேர்தல். பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, 14 முறை தமிழகத்துக்குப் பிரசாரத்துக்காக வந்து சென்றார். முடிவில் வெறும் 26 இடங்களில் காங்கிரஸ் வென்றது என்பது தேர்தல் வரலாறு.

குரு.சண்முக சுந்தரம், காரைக்கால்.

வாக்குப் பதிவின்போது, கட்சிக்காரர்கள் பணம் கொடுத்துவிட்டு, அம்மக்கள் தங்கள் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டார்களா என்பதை எப்படிச் சரிபார்ப்பார்கள்?

பால்மீது சத்தியம், தாலிமீது சத்தியம், பிள்ளைமீது சத்தியம் என்று பலதும் நடக்கின்றன! வடமாநிலங்களில் நடந்ததாக ஒன்றைச் சொல்வார்கள். பணப்பட்டுவாடா செய்த ஆளுங்கட்சிக்காரர்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்கள் சின்னத்தின் மீது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வாசனை திரவியத்தைப் பூசிவிடுவார்கள். வெளியே வரும் வாக்காளர்களின் விரலை நுகர்ந்து பார்த்து, அவர்கள் தங்கள் கட்சிக்குத்தான் ஓட்டுப்போட்டார்களா என்பதைத் தெரிந்துகொள்வார்களாம்.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77.

திராவிட இயக்கத்துக்குப் பிரச்னை என்று வந்தால், தி.மு.க., அ.தி.மு.க இரண்டும் ஒன்றாகும் வாய்ப்பு உள்ளதா?

பிரிந்த கட்சிகள் மீண்டும் சேர்வது உலக அதிசயம். சமீபத்தில் நாம் கேள்விப்பட்ட இணைப்பு, தன் காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி மக்கள் மன்றத்துடன் தமிழருவி மணியன் இணைத்ததுதான். அரசியலுக்கே வராதவர்கள் இணையலாம். அரசியல் செய்பவர்கள் இணைவது சிரமம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!