Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார்

குட்டையே குழம்பிக் கிடக்கிறதே!

கழுகார் பதில்கள்

குட்டையே குழம்பிக் கிடக்கிறதே!

Published:Updated:
கழுகார்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார்

@வெ.லக்ஷ்மிநரசிம்மன், ராஜகீழ்ப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

பாசிச கும்பலும் காவல் கும்பலும் ஒன்றிணைந்து தலைநகரில் அரங்கேற்றியுள்ள மதவெறியாட்டத்தைக் கண்டு, ஓர் இந்தியனாக வெட்கித் தலைகுனிகிறேன். இதுபற்றி தங்களின் கருத்து?

முதலில், நீங்கள் ஓர் இந்தியனா என்பதை சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான், தலைகுனிவதா அல்லது தலைமறைவதா என்பதை முடிவுசெய்ய முடியும்.

வன்முறை
வன்முறை

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.

‘இது, காந்தி பிறந்த மண். இங்கே வன்முறைக்கு இடம் இல்லை’ என்று சீறுகிறாரே சோனியா காந்தி?

உண்மைதான். ஆனால், இதைச் சொல்லும் அருகதை காங்கிரஸுக்கும் இல்லை. அதை இழந்து பல ஆண்டுகளாகின்றன. 1984-ம் ஆண்டில் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட காங்கிரஸ்காரர்களைக் கொண்டாட அல்லவா செய்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த முக்கியக் கொலைகாரர்களுக்கு, பின்னாளில் எம்.பி, அமைச்சர் என்றெல்லாம் பதவிகளைக் கொடுத்து அழகுவேறு பார்த்தார்களே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.

‘டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடும் நபர் பா.ஜ.க மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆவேசப்பட்டுள்ளாரே கவுதம் கம்பீர்?

பாவம்... அவர் புத்தம் புது அரசியல்வாதி. விளையாட்டு வீரராக இருந்தவரை சட்டென காவிக்கொடி ஏந்தவைத்துவிட்டார்கள். அரசியலின் நெளிவுசுளிவுகளை அவர் இன்னும் முழுமையாக அறிந்திருக்க மாட்டார். அதனால், வெள்ளந்தியாகப் பேசிவிட்டார். இந்நேரம் ‘தெளிய’வைத்திருப்பார்கள். இப்போது கேட்டுப் பாருங்கள்... மிகமிக நன்றாகவே ‘ஆவேச’ப் படுவார்!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்த வழக்கில் டிராஃபிக் ராமசாமிக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்குகளே தள்ளுபடியான நிலையில், இது எப்படி?

அவர் முதல்வராக இருந்தபோது விமர்சிக்கப் பட்டதால், தமிழக அரசு சார்பில் போடப்பட்ட மானநஷ்ட வழக்கு அது. பதவியில் இருந்தவர் இறந்தாலும், அந்தப் பதவிக்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்கு என்ற அடிப்படையில் வழக்கை தொடர்ந்து நடத்தி, முடிவு தேடுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. அதேசமயம், முதல்வரை எவ்வளவு கேவலமாக, வண்டிவண்டியாகப் பேசியிருந்தாலும், ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் வந்துவிட்டால், மானநஷ்டமெல்லாம் சுக்கு நூறாகிவிடும். இது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் வாடிக்கையாகவே இருக்கிறது. அந்த வரிசையில், விஜயகாந்த்மீது போடப்பட்ட பல அவதூறு வழக்குகள் தற்போது சட்சட்டென விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. என்ன மானமோ... என்ன நஷ்டமோ!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘காஷ்மீர் பிரச்னையில் சமரசம் செய்ய தயார்’ என்று சொல்கிறாரே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்?

அவருடைய கெழுதகை நண்பர் நரேந்திர மோடியே அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றால், அந்தச் சமரசம் எப்படியிருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

எம்.டி.உமாபார்வதி, சென்னை.

‘அ.தி.மு.க, தி.மு.க-வில் சரியான தலைமை இல்லை. அதனால், தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிக்கு வரவேண்டும்’ என்று காங்கிரஸ் ஆரணி தொகுதி எம்.பி-யான விஷ்ணு பிரசாத் கூறுகிறாரே?

இதே வாய்தான், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தொகுதி முழுக்க, ‘வருங்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழக்கூடிய அருமைத் தலைவர் தளபதியின் பேராதரவோடு போட்டியிடும் எனக்கு, கை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்று வீதிவீதியாக முழங்கியது!

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி, கடலூர் மாவட்டம்.

ரஜினி, குழம்பிப்போய் இருக்கிறாரா அல்லது எல்லோரையும் குழப்புகிறாரா?

குட்டையே குழம்பிக் கிடக்கிறதே!

@காந்தி, திருச்சி.

‘குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான், தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு கொடுத்தது’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறாரே?

‘தமிழ்நாட்டையே அடகுவைத்துதான் அமைச்சர் பதவிகளில் நீடிக்கிறார்கள்’ என்கிற விமர்சனத்துக்கும் எவ்வளவு அழகாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள். அதுதான், ‘திண்டுக்கல் வெள்ளந்தி!’

@‘கடல்’ நாகராஜன், கடலூர்-1.

சமீபத்தில் வெளிவந்த ‘திரெளபதி’ படம் பார்த்துவிட்டீரா... படம் எப்படி?

‘போலிப் பதிவுத் திருமணங்கள்’ என்கிற பகீர் செய்தியை வெளிப்படுத்திப் பதறவைக் கிறார்கள். குறிப்பாக, பெண்களும் பெண்ணைப் பெற்றவர்களும் தெரிந்து, தெளிய வேண்டிய விஷயமே! நல்லதோர் எச்சரிக்கையும்கூட. ஆனால், படம் எடுத்தவர்களின் நோக்கம் அதுவாக மட்டுமே இருப்பதுபோல் தோன்ற வில்லை. குறிப்பிட்ட சாதிக்கு எதிரான மறைமுக வசனங்கள், காட்சிகள் எல்லாம் ஓவர். அதிலும் சாதிப் பெருமையை நேரடியாகவே தூக்கிப்பிடிக்கும் காட்சிகள், பக்குவமின்மையைக் காட்டுகின்றன.

‘சாதிகள் உள்ளதடி பாப்பா: குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று படத் தலைப்பிலேயே சொல்வதன் மூலம், ‘நாங்கள் அப்படித்தான்’ என்பதை வெளிப்படையாகவே ‘வெறி’ப்படுத்துகிறார்கள்.

ராமதாஸ்
ராமதாஸ்

ஆனைக்கூத்தன், பெரம்பூர், சென்னை-11.

எல்லாவற்றிலும் முதல் குரல் கொடுக்கும் டாக்டர் ராமதாஸ், டி.என்.பி.எஸ்.சி ஊழல் விவகாரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்?

பங்காளியாக இருக்கும் பாட்டாளி, பகையாளி ஆகிவிடுவாரே!

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், திருப்பூர் மாவட்டம்.

‘சி.ஏ.ஏ. வேண்டாம்’ எனப் போராட உரிமை இருக்கும்போது, ‘வேண்டும்’ எனப் போராட உரிமை இல்லையா?

கண்டிப்பாகப் போராடலாம். அதற்கான உரிமை நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்டு. ஆனால், ‘பசிக்கு உணவு இல்லை’ எனப் போராடிக் கொண்டிருப்பவனுக்குப் பக்கத்திலேயே பிரியாணி அண்டாவைத் திறந்து வைத்துக் கொண்டு, ‘நாட்டில் பஞ்சமே இல்லை’ என உண்ணும்விரதப் போராட்டம் நடத்துவதுதான் தவறு.

@குடந்தை பரிபூரணன், கும்பகோணம் (வடகரை), தஞ்சாவூர் மாவட்டம்.

தமிழக பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ, ஆட்சியாளர் களைப் பதறவைத்திருக்கும்தானே?

ம்ஹூம். டாஸ்மாக் கடைகளுக்கெல்லாம் விளம்பரம் செய்யக் கூடாது என்பது சட்டம். ஆனால், ஓசியிலேயே விளம்பரம் கிடைத்துவிட்டது என உற்சாகமாகியிருப்பார்கள். யார் குடி மூழ்கினால் அவர் களுக்கென்ன... அவர்களின் பதற்றம், ‘கஜானா சீக்கிரம் சீக்கிரம் நிறைய வேண்டும்’ என்பது மட்டுமே!

லட்சுமிநாராயணன், சூளைமேடு, சென்னை-24.

நீதிபதிகள், அரசியல் தலைவர்களைப் புகழ்வது சரியா?

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவர் வீற்றிருந்த பொதுமேடையிலேயே ‘கழகத்தின் தலைவரே’ என்று விளித்தார் அந்நாளைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர். அதேபோல்தான் இப்போது மோடியை ‘மெய்யுருகி’ புகழ்ந்திருக்கிறார் அதே உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதி. நீதிக்கு மட்டுமே தலைவணங்க வேண்டியவர்கள், இப்படி அரசியல் தலைவர்களை எல்லாம் வணங்கி நிற்பது, நீதிதேவன்கள் மயக்கம் அடைந்திருப்பதைத்தான் காட்டுகிறது.இதுபோன்றோர் வழங்கும் தீர்ப்புகளில் நீதி எந்த அளவுக்கு இருக்கும் என்ற சந்தேகம் இயல்பாகவே எழத்தான் செய்யும். இவர் போன்றோரின் செயல்கள், நீதியின்மீது இறுதி நம்பிக்கை வைத்திருப்பவர்களின் நிம்மதியை காலத்துக்கும் கெடுக்கத்தான் செய்யும். ஆனால், அவர்கள் படுநிம்மதியாக ஓய்வுபெற்றுவிடுவார்கள்.

@வெங்கட் கே.

எனக்கு பொய் சொல்லத் தெரியாது. நான் ஒரு கவிஞனாகவோ, காதலனாகவோ, அரசியல்வாதி யாகவோ ஆக முடியுமா?

பொய் சொல்லத் தெரியா விட்டால், முதலில் இங்கே ‘மனிதனா’கவே இருக்க முடியாதே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!