Published:Updated:

அதானிக்கு விமான நிலைய ஒப்பந்தம்... தாரை வார்க்கும் மத்திய அரசு... தடுக்கும் கேரள அரசு!

அதானி - பினராயி விஜயன்
அதானி - பினராயி விஜயன்

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயப்படுத்தும் முடிவை கேரள அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி - பிரதமர் நரேந்திர மோடியின் நட்பு உலகறிந்தது. குஜராத்தில் அதானி குழுமத்தின் தொழில் வளர்ச்சியும், மோடியின் அரசியல் எழுச்சியும் ஒரு சேர நிகழ்ந்தது. 2014-ல் பா.ஜ.க வெற்றி பெற்று மோடி பிரதமரான பிறகு அதானி குழுமத்துக்கு நிலக்கரி, மின்சாரத் துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. அதானி குழுமத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்தது. அதைப்போலவே தற்போது திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை ஐம்பது ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் வளர்ச்சியை இனி அதானி குழுமமே மேற்கொள்ளும்.

 மோடி - அதானி
மோடி - அதானி

விமான நிலையங்களை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்திருந்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி 2019-ல் திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் 6 விமான நிலையங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்கள் தவிர்த்து மற்ற மூன்று விமான நிலையங்களும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்த மூன்று மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் இந்த மூன்று விமான நிலையங்களை ஒப்படைப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதற்கு ஆரம்பம் முதலே கேரள சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. விமான நிலைய டெண்டரிலும் கேரள அரசு பங்கெடுத்தது. ஆனால், கேரள அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் வழங்கியது மத்திய அரசின் நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India - ஏ.ஏ.ஐ). இதை எதிர்த்து கேரள அரசு, நீதிமன்றம் சென்றுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே கேரளாவில் உள்ள கொச்சின் மற்றும் கன்னூர் விமான நிலையங்களைப் பராமரித்து வருகிற நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தைப் பராமரிக்கும் பொறுப்பையும் தங்களிடமே வழங்க வேண்டும் எனக் கேரள அரசு கூறிவருகிறது. இதற்காக பொதுத்துறை நிறுவனம் ஒன்றையும் கேரள அரசு நிறுவியுள்ளது.

பிரஸ்மீட் முடிந்ததும் நிர்வாகிகளுக்கு டோஸ்... ரஜினி வீட்டில் நடந்தது என்ன?
அதானி
அதானி

அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தை நாடியது. `விமான நிலையங்களைக் கையாள்வதில் முன் அனுபவமே இல்லாத அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏ.ஏ.ஐ விதிகளுக்கே முரணானது’ எனக் கேரள அரசு வாதிட்டது. ஆனால், 2019-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று கேரள அரசின் மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்துவிட்டது உயர்நீதிமன்றம். அதைத் தொடர்ந்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை மீண்டும் கேரள உயர்நீதிமன்றத்துக்கே அனுப்பி மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி ராஜேஷ் நம்மிடம் பேசுகையில், ``திருவனந்தபுரம் விமான நிலையம் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த விமான நிலையத்தையும் தனியார் மயப்படுத்துவதை சி.பி.எம் எதிர்த்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும் என அரசு நினைத்தால் நிச்சயம் செய்ய முடியும். கேரளாவிலேயே அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்கிற முடிவில் ஒவ்வொரு துறையாக தன்னுடைய பங்குகளை தனியார்மயப்படுத்தி வருகிறது.

எம்.பி ராஜேஷ் - சுரேந்தர்
எம்.பி ராஜேஷ் - சுரேந்தர்

``தனியார் துறையின் செயல்பாடுகளுக்கு வங்கிகளே சிறந்த உதாரணம். கார்ப்பரேட்கள் வாங்கிய கடன்களால் தனியார் ஒவ்வொன்றாக சரிந்து வருவதை நாம் பார்க்கிறோம். அவற்றை மீட்கவும் மத்திய அரசு எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தான் பயன்படுத்துகிறது. இதே நிலை மற்ற துறைகளுக்கும் ஏற்பட வேண்டுமா. கேரள அரசு இதை சட்டபூர்வமாக எதிர்கொள்கிறது. ஊழியர் சங்கங்களும் விமான நிலையத்தை தனியார்மயப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மக்களையும் திரட்டி இதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்” என்றார்.

இது தொடர்பாக கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரனை தொடர்பு கொண்டு பேசுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு தான் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியும். தற்போது எதுவும் பேச முடியாது” என்று கூறிவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு