Published:Updated:

`அசுரன்’ படம் பேசும் `பஞ்சமி நிலம்...' யாருக்கு எதற்காகக் கொடுக்கப்பட்டது?

"பஞ்சமி நிலம் என்றால் என்ன, அது யாருக்கு, எதற்காகக் கொடுக்கப்பட்டது... அந்த நிலங்களின் தற்போதைய நிலை என்ன?''

`அசுரன்’ படம் பேசும் `பஞ்சமி நிலம்...' யாருக்கு எதற்காகக் கொடுக்கப்பட்டது?

"பஞ்சமி நிலம் என்றால் என்ன, அது யாருக்கு, எதற்காகக் கொடுக்கப்பட்டது... அந்த நிலங்களின் தற்போதைய நிலை என்ன?''

Published:Updated:

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கடந்த வாரம் வெளியான 'அசுரன்' திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் இயக்குநர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் வெற்றிமாறனுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் குறித்து இந்தத் திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பஞ்சமி நிலம் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.

Dhanush
Dhanush

பஞ்சமி நிலம் என்றால் என்ன, அது யாருக்கு எதற்காகக் கொடுக்கப்பட்டது... அந்த நிலங்களின் தற்போதைய நிலை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம்! பலமிழந்து போனால் இனமழிந்து போகும்'' என்கிறார், ஈழக்கவி புதுவை ரத்தினதுரை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு குறிப்பிட்ட சமூக மக்களையோ, இனத்தையோ, நாட்டையோ அடிமைப்படுத்த வேண்டுமெனில், முதலில் கைப்பற்றுவது அவர்களின் நிலத்தைத்தான். 'நிலம்'தான் சொத்துகளில் முதன்மையானது. உள்ளூரில் தொடங்கி உலகம் வரையிலும் பல யுத்தங்கள் நிகழ, நிலமே அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் 18-ம் நூற்றாண்டு வரை நிலவுடைமையாளர்களாக வாழ்ந்துவந்த பட்டியலின மக்களின் நிலங்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் அறிமுகமான மிராசி முறையின் மூலம்தான் அதிகளவில் பறிக்கப்பட்டன.

"தமிழ் சினிமாவில் நாவல்களைத் தழுவிப் படமெடுப்பது ஆரோக்கியமான விஷயமாகத்தான் பார்க்கிறேன். நான், நேற்று படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த எழுத்தாளருக்குமே தனது நாவல் திரைப்படமாகும்போது, அதைப் பார்க்க ஆவலாகத்தான் இருக்கும். எனது நாவலில் திருத்தம் செய்துதான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் நிகழ்வது, மகிழ்ச்சியளிக்கிறது.
எழுத்தாளர் பூமணி

அதென்ன மிராசி முறை?

கிராமத்துக்குப் பொதுவாக இருந்த நிலங்கள் எல்லாம், உயர் சாதியினருக்கும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் வசமும் ஒப்படைக்கப்பட்டதே மிராசி முறை. அதன்படி, கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு வரி கட்டும் பொறுப்பு மிராசுதாரர்களுடையது. அவர்கள் அந்த நிலங்களை குத்தகைக்குவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுக்கு வரியாகச் செலுத்துவார்கள். தவிர, தரிசு நிலங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளும் அவர்களிடமே இருந்தன. அவர்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு அந்த நிலங்களை விநியோகம் செய்துவந்தனர். ஆனால், இந்த முறையால் மிகவும் பாதிப்புக்குள்ளானது பட்டியலின மக்கள்தாம்.

Land
Land

ஏற்கெனவே சாதிரீதியாகப் பாதிக்கப்பட்டு வந்த மக்கள், இந்தப் புதிய முறை மூலம் அதிகமான பாதிப்புக்குள்ளாயினர். தரிசு நிலங்களில்கூட அவர்களுக்கு உரிமை பறிக்கப்பட்டது. அரசாங்கமே நிலங்கள் தர முன்வந்தாலும், நிலவுடைமையாளர்களாக இருந்த மிராசுதாரர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர். யாருக்கு நிலத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தாங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் எனவும் வாதாடினர். நிலம் தரிசாக வீணாய்ப் போனாலும் போகட்டும். ஆனால், பட்டியலின மக்களுக்கு நிலம் தரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். அவர்களிடம் நிலம் இல்லாத வரையில்தான், தங்கள் நிலங்களில் அவர்கள் வேலை செய்வார்கள், குறைவான கூலி கொடுக்கலாம். தங்களின் விருப்பப்படி அடிமையாக வைத்திருக்கலாம் என்பதே அவர்களின் திட்டம்.

பஞ்சமி நிலங்கள்
நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக 1892-ம் ஆண்டில் இந்திய பிரிட்டிஷ் அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள்.

சிறிதளவு நிலம் வைத்திருக்கும் பட்டியலின மக்களிடமும் அதிகமாக வரி வசூலிப்பது, நிலத்துக்குத் தண்ணீர் மறுப்பது, மீண்டும் மீண்டும் வரிகட்டச் சொல்வது என மிகக் கடுமையாக நடந்துகொண்டனர். பல நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் வெறுமனே தரிசாகக் கிடந்தன.

Land
Land

பஞ்சமி நிலம்:

1891-ம் ஆண்டு, அக்டோபர் 5-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் திரமென்ஹீர், 'பறையர்கள் பற்றிய குறிப்புகள்' என்ற பெயரில் பட்டியலின மக்கள் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார். அதில் பட்டியலின மக்கள் படும் துயரங்களையும் ஆதிக்கச் சாதியினர் எப்படியெல்லாம் அவர்களைச் சுரண்டுகின்றனர் என்பதையும் மிக விரிவாக எழுதியிருந்தார். பட்டியலினத்தவர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தையும் பதிவு செய்திருந்தார். அவரின் இந்த அறிக்கை, வருவாய்த் துறையினரிடம் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டது.

“அவர்கள் மிக மோசமான ஊட்டச்சத்து பற்றாக்குறையோடே எப்போதும் வாழ்கிறார்கள்; ஏதோ கந்தல் துணியையே உடுத்திக்கொண்டு இருக்கிறார்கள்; தொழுநோயோ, பிற மோசமான நோய்களோ அவர்களைத் திண்கிறது; அவர்கள் பன்றிகளைப்போல வேட்டையாடப்படுகிறார்கள்; கல்வி மறுக்கப்பட்டு, கவனிப்பாரற்று இருக்கிறார்கள். இந்த மக்கள் சமூகத்தைப் பரம்பரையாகத் தொடரும் அடிமை முறைகளில் இருந்தும் சட்டரீதியான தடைகளில் இருந்தும் ஆங்கிலேய அரசு மீட்டிருக்கிறது என்றாலும், இன்னமும் சமூகச் சீர்குலைவில் சிக்கி கடைமட்டத்தில் கிடக்கிறார்கள் இம்மக்கள்!”
- ஜேம்ஸ் திரமென்ஹீர், செயல் ஆட்சியர், செங்கல்பட்டு, 1891
J. H. A. Tremenheere
J. H. A. Tremenheere

அந்த அறிக்கையை, பரிசீலனை செய்த வருவாய்த்துறையினர், ''செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மற்ற தொழிலாளர்களைப் போலத்தான் பட்டியல் சமூகத்தவரும் உள்ளனர். எனவே, அவர்களுக்கென்று சிறப்பு உரிமை எதுவும் தருவது தேவையற்றது. அதனால், மிராசி உரிமைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ள பரிந்துரை ஏற்கத்தக்கதல்ல” எனப் பதிலளித்தது. ஆனால், வருவாய்த்துறையின் கருத்துகளை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. திரமென்ஹீர் அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16-ம் தேதி விவாதத்துக்கு வந்ததையொட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892-ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

பஞ்சமி நிலச் சட்டப்படி, இந்தியா முழுவதும் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டன. மேலும், மற்ற பிரிவினர் இந்த நிலங்களை அபகரித்துவிடக் கூடாது என்பதற்காகச் சில சட்டத்திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.

Protest
Protest

அதன்படி,

* இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர்செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.

* முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது.

* அதன்பிறகு விற்பதாக இருந்தால், பட்டியலின மக்களிடம்தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ முடியும்.

* வேறு வகுப்பினரிடம் விற்றால், அந்த விற்பனை செல்லாது.

* மீறி வாங்கினால், எந்தக் காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.

அரசு, இப்படிப் பல விதிமுறைகளை வகுத்தாலும்கூட, அது சரியாகச் செயல்படவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பல ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆதிக்கச் சாதியினரால் பறிமுதல் செய்யப்பட்டன. நேரடியாக அவர்களின் பெயரில் நிலம் இருந்தால் செல்லாது என்பதால், தங்களுக்கு அடங்கிப் போகக்கூடிய மற்றொரு பட்டியலின மக்கள் யாரின் பெயரிலாவது ரிஜிஸ்டர் செய்யும் முறையைப் பின்பற்றி பட்டியலின மக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றினர். நிலம் வைத்திருப்பவர்களை நிம்மதியாக விவசாயம் செய்யவும் அனுமதிக்கவில்லை. எந்தெந்த வழிகளில் எல்லாம் இடையூறு செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் இடையூறு செய்தனர். அந்த அடக்குமுறைக்குப் பயந்தே பலர் நிலங்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,398 ஏக்கர்; வட ஆற்காடு மாவட்டத்தில் 21,316 ஏக்கர், சேலம் மாவட்டத்தில் 13,601 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 11,102 ஏக்கர், தர்மபுரி மாவட்டத்தில் 9,004 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 950 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,892 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன.
பஞ்சமி நிலப் பாதுகாப்பு இயக்கம்

அதேவேளையில், பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான தொடர் போராட்டங்களும் பட்டியலின மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 1994-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதியன்று செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள காரணை என்னுமிடத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை எனும் இருவர் போலீஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

Protest
Protest

1996-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து பட்டியலின மக்களிடம் ஒப்படைப்பதற்கு என அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், பஞ்சமி நிலங்கள் தொடர்பாக விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.மருதமுத்து தலைமையில் நில நிர்வாக ஆணையர் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான மணிவண்ணன், வே.கருப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணையின்போது, ''தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் இருப்பதாக நில வருவாய் ஆணையர் தகவல் கொடுத்தார். தி.மு.க ஆட்சி முடிந்து 2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அந்த கமிஷனும் செயல்படவில்லை.

Jayalalithaa - Karunanidhi
Jayalalithaa - Karunanidhi

அரசு கைவிட்டாலும், பட்டியலின மக்கள் தொடர்ந்து பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். பலர் நீதிமன்றங்களுக்குச் சென்று தங்களின் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுவருகின்றனர். ஆனால், மக்களோ, சில தனி அமைப்புகளோ போராடுவதைவிட, அரசு நினைத்தால் நிச்சயமாக அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை எளிதாகக் கண்டறியலாம்... அதை உரியவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால், அவர்கள் நினைக்க வேண்டும்!