Published:Updated:

ரகுராம் ராஜன் டு ஜீன் ட்ரெஸ் - ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு... யார் இவர்கள்? பின்னணி என்ன?

ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு

இவர்களில் முதல் மூன்று பேர் உலகம் அறிந்த தமிழர்கள். மற்ற இருவரும் இந்தியர்கள் மீது அக்கறை கொண்ட வெளிநாட்டினர். யார் இவர்கள்? இந்த ஐந்து பேரின் ஸ்பெஷல் என்ன?

கொரோனா ஏற்படுத்திய பக்க விளைவுகளால் உலகமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நம்பகமான ஆலோசகர்கள் ஓர் அரசுக்குத் தேவை. மத்திய அரசு தவறவிட்ட பல ஆளுமைகளைத் தேடிப் பிடித்து தமிழகத்துக்குக் கூட்டி வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை விரைவில் எட்டுவதற்காக, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயண், நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் ஜீன் ட்ரெஸ் ஆகியோரே அவர்கள்.

இவர்களில் முதல் மூன்று பேர் உலகம் அறிந்த தமிழர்கள். மற்ற இருவரும் இந்தியர்கள் மீது அக்கறை கொண்ட வெளிநாட்டினர். யார் இவர்கள்? இந்த ஐந்து பேரின் ஸ்பெஷல் என்ன? எந்த வகையில் இவர்கள் தமிழகத்துக்கு உதவி செய்வார்கள்? இந்த ஐவர் படையின் பயோடேட்டா...

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ்
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ்

ரகுராம் ராஜன்

‘பொருளாதாரத்தின் ராக் ஸ்டார்’ என்று வர்ணிக்கப்படும் தமிழர் ரகுராம் ராஜன். அவர் அப்பா கோவிந்தராஜனும் அம்மா மைதிலியும் நீண்ட கால சென்னைவாசிகள். ஐ.பி.எஸ் அதிகாரியான கோவிந்தராஜன் இந்திய உளவுத்துறையில் இருந்தவர் என்பது பலருக்குத் தெரியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் இயக்குநர் பதவியை அடைய வேண்டியவர் கோவிந்தராஜன். ஆனால், ராஜீவ் காந்திக்கு அவரைப் பிடிக்காமல் போனதால் அந்தப் பதவி கிடைக்கவில்லை.

10 வயது வரை அப்பாவுடன் உலகம் சுற்றிய ரகுராம், அதன்பின் இந்தியாவில் படித்தார். டெல்லி ஐ.ஐ.டி-யில் படித்த இன்ஜினியரிங் பட்டதாரி, அதன்பின் அகமதாபாத் ஐ.ஐ.எம் சென்று நிர்வாகவியல் முடித்தார். உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி நிறுவனத்தின் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் படிப்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அங்கு வங்கிகள் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம்பெற்றார் ராஜன்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடியை முன்பே கணித்தவர் ராஜன். அப்போது அவரை எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், 2007ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பித்து உலகமே அந்த நெருக்கடியை எதிர்கொண்டபோது, ராஜன் சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் ராஜனுக்கு உலக அளவில் மரியாதை கிடைத்தது. ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ராஜனை 2008ம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக நியமித்தார், பிரதமர் மன்மோகன் சிங். 'அரசின் செலவுகளையும் மானியங்களையும் குறைக்க வேண்டும். இந்தியர்கள் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல், சேவை மற்றும் உற்பத்தித் துறைகளுக்குத் திரும்ப வேண்டும்' என்று அவர் கொடுத்த பரிந்துரை சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், சீனாவைப் போன்ற ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தாரக மந்திரமாக அது பார்க்கப்பட்டது.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

மன்மோகன் சிங்கால் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜன், மோடி காலத்திலும் அந்தப் பதவியில் தொடர்ந்தார். ஆனால், மோடி அரசுக்கும் அவருக்கும் உரசல் ஏற்பட்டதால், இரண்டாவது முறை அவருக்குப் பணி நீட்டிப்பு கிடைக்கவில்லை. அதன்பின் மோடி செய்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 'I do what I do' என்ற அவரது நூல், மோடி அரசின் பொருளாதாரத் தவறுகளை விமர்சனம் செய்தது.

'வளர்ச்சியும் முக்கியம், மக்கள் நலத் திட்டங்களும் அவசியம்' என்று சொல்லும் பொருளாதார நிபுணர் ராஜன். கொரோனா முதல் அலையின்போது, ‘பத்து கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்’ என்று ரகுராம் ராஜன் சொன்னார். எளிய மக்களின் நல்வாழ்வுக்கான, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கான வழிகளை அவர் சொல்வார்.

அரவிந்த் சுப்பிரமணியன்

62 வயதாகும் அரவிந்த் சுப்பிரமணியன், சென்னையில் பிறந்த தமிழர். தன்னைவிட இளையவரான ரகுராம் ராஜனுடன் இணைந்து பல பணிகள் செய்தவர். சென்னை டி.ஏ.வி பள்ளியில் படித்த அரவிந்த், அகமதாபாத் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மேலாண்மை படித்துவிட்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று பொருளாதார ஆராய்ச்சி செய்தவர். ஐ.எம்.எஃப் நிறுவனத்தில் ராஜனுடன் இணைந்து பணியாற்றியவர், கூடவே புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியராகவும் பொருளாதாரம் கற்றுத் தந்தார். இந்தியா மற்றும் சீனாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் அரவிந்த்.

அரவிந்த் சுப்பிரமணியன்
அரவிந்த் சுப்பிரமணியன்

2014ம் ஆண்டு இவரை மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக பிரதமர் நரேந்திர மோடி நியமித்தார். அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் இணைந்து பல பொருளாதார முடிவுகளை எடுத்தார். அரசின் நலத்திட்ட உதவிகளைத் தருவதற்காக மக்களின் வங்கிக்கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தியவர் இவர். இடைத்தரகர்களை இது ஒழித்தாலும், பலருக்கு அரசு உதவிகள் கிடைக்காமல் செய்தது. அரசு நலத்திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களுக்குக் கொண்டு செல்ல இவர் தமிழகத்துக்கு வழிகாட்டுவார்.

எஸ்.நாராயண்

எஸ்.நாராயண், தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இளம் வயதில் கொல்கத்தாவில் வளர்ந்த தமிழர், அதன்பின் சென்னை வந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி செய்தவர், 1965-ல் ஐ.ஏ.எஸ் ஆனார். 1997 வரை தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிவிட்டு மத்திய அரசுப் பணிக்குப் போனார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்தார். நான்கு ஆண்டுகள் பட்ஜெட் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். ஓய்வுபெற்றதும் இவரை தனது பொருளாதார ஆலோசகராக நியமித்தார் பிரதமர் வாஜ்பாய்.

அதன்பின் பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராகவும் ஆலோசகராகவும் இருக்கும் நாராயண், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் சிறப்புப் பேராசிரியராக பாடம் எடுக்கிறார்.

எஸ்.நாராயண்
எஸ்.நாராயண்

இவரது ‘The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu’ நூல் கவனிக்கத்தக்கது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் எப்படி தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவந்தன என்பதை, அரசின் ஓர் அங்கமாக இருந்த அதிகாரியின் கோணத்தில் இவர் எழுதியிருக்கிறார். கிராமப்புற கல்விக்கு முன்னுரிமை தந்தது, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கொடுத்தது, மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கியது ஆகியவையே ஒட்டுமொத்தமாக தமிழகத்தை தொழில் மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்தியது என்கிறார் இவர். என்றாலும், இலவசத் திட்டங்களை விமர்சனம் செய்கிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சி பற்றி தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர் நாராயண்.

எஸ்தர் டஃப்லோ

பிரான்ஸில் பிறந்த எஸ்தர் டஃப்லோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியர். வறுமை ஒழிப்புதான் அவர் போதிக்கும் பாடம். அதையே செயலிலும் காட்ட ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இவரது கணவர். உலகில் வறுமையை ஒழிக்க செய்த முயற்சிகளுக்காக இருவரும் 2019ம் ஆண்டு நோபல் பரிசு வென்றார்கள்.

இளம் வயதில் வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார் எஸ்தர். ஆனால், பொருளாதாரம் படிப்பது மட்டுமே செயலில் இறங்கி இந்த உலகை வளமாக்க உதவும் என்று விரைவிலேயே புரிந்துகொண்டார். அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்று, அங்கேயே பேராசிரியராக ஆனார். எம்.ஐ.டி வரலாற்றிலேயே மிக இளம் வயதில் பேராசிரியர் ஆனவர் இவர்தான். 'ஏழை நாடுகளின் மக்களுக்கு உயர்கல்வியே அதிக வருமானத்தைப் பெற்றுத் தருகிறது' என்பதுதான் அவரின் ஆராய்ச்சி. அங்குதான் அபிஜித் பானர்ஜியை சந்தித்து திருமணம் செய்துகொண்டார்.

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ
அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ

கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகிறார் எஸ்தர். 'பெண்களுக்கு தலைமைப் பொறுப்பு கொடுக்கும் சமூகங்களே முன்னேறும்' என்று அடிக்கடி சொல்வார்.

ரகுராம் ராஜன் முதல் நாராயண் வரை; ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் யார்? ஓர் அறிமுகம்

கடந்த 20 ஆண்டுகளாக அடிக்கடி அவர் தமிழகம் வந்திருக்கிறார். எம்.ஐ.டி நிறுவனத்தில் அவர் நிறுவிய 'பாவர்ட்டி லேப்' என்ற வறுமை ஒழிப்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்னையிலும் கிளை இருக்கிறது. இதன்மூலம் முதியோர்களின் சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்கிறார். ஆரம்பக் கல்வியை சிறப்பாகத் தருவது, வேலைவாய்ப்புகள் மூலம் இளைஞர்களின் நிலையை மேம்படுத்துவது ஆகியவை இவரின் விருப்பமான பணிகள். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு இவர் வழிகாட்டுவார்.

ஜீன் ட்ரெஸ்

ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணராகவே உலகெங்கும் அறியப்படுகிறார். பிரபல பெல்ஜிய பொருளாதார நிபுணரின் மகனாகப் பிறந்த ஜீன் ட்ரெஸ், தனது பிஹெச்.டி ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார். 1979 முதல் இந்தியாவில் வசிக்கிறார். 2002-ம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்றார். தன்னை இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

மிக எளிமையான வாழ்க்கையே இவரின் அடையாளம். தன் மனைவியுடன் ஒற்றை அறை வீட்டில்தான் வாழ்கிறார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இவர் சிறப்புப் பேராசிரியர். அங்கு கட்டாந்தரையில் சாதாரணமாகப் படுத்துத் தூங்குவார். நகர்ப்புறங்களில் வீடில்லாமல் சாலையோரங்களில் வாழும் மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்.

ஜீன் ட்ரெஸ்
ஜீன் ட்ரெஸ்

வட இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று வறுமை ஒழிப்பு மற்றி ஆய்வு செய்தவர். கிராமத்திலேயே பல மாதங்கள் வாழ்ந்து, அந்த வாழ்வின் துயரங்களை அறிந்தவர். பஞ்சம், வறுமை ஆகியவற்றை ஒழிக்க பல வழிகளைச் சொன்னவர் ஜீன் ட்ரெஸ். கல்வி உரிமை, பெண்களுக்கு சம உரிமை, குழந்தைகள் நலன், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என அவர் முன்வைத்த பல தீர்வுகள் பிற்காலத்தில் சட்டங்கள் ஆகின. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தேசிய ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினராக இருந்தவர். எளியவர்களின் கையில் ஆயுதமாக மாறிய தகவல் அறியும் உரிமை சட்டம், பட்டினிச் சாவுகளைத் தடுத்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற இவர் முக்கியமான காரணம்.

நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து நூல்கள் எழுதியுள்ளார் ஜீன் ட்ரெஸ். ‘‘உழைப்பு எல்லாம் அவருடையது. பெயர் மட்டும் எனக்குக் கிடைக்கிறது’’ என்று அமர்த்தியா சென் இவரைப் பாராட்டுவார்.

எங்கோ பெல்ஜியத்தில் பிறந்து, இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதையே தன் வாழ்நாள் கனவாகக் கொண்ட எளிய பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ். தமிழகத்தின் வறுமை ஒழிப்பு முயற்சிக்கு இவர் கைகொடுப்பார்.

அடுத்த கட்டுரைக்கு