Published:Updated:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை.... சண்டை மூட்டக் காத்திருக்கும் தெலங்கானா பா.ஜ.க.!

தென்னிந்திய தலைவர்களுக்கும் தேசியத் தலைவர்கள் உரிய மரியாதை அளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில், பாரதிய ஜனதா கட்சி இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழிசை
தமிழிசை

தெலங்கானா மாநில கவர்னராகத் தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தமிழிசைக்கு, ஆளுநர் பதவி கிடைத்திருப்பது மிகப் பெரிய கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 8-ம் தேதி, தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநகராகப் பதவியேற்றுக்கொள்கிறார்.

Tamilisai
Tamilisai

தென்னிந்தியாவில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர், தமிழிசை. ஏற்கெனவே, கேரள மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்த குமணம் ராஜசேகரன், இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த குமணம் ராஜசேகரன், திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியால் சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. தோல்விக்கு மாநிலத் தலைமையை மட்டுமே குறை கூறிவிட முடியாது என்பதும் தேசியத் தலைவர்களுக்குத் தெரியும். எனவே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மீது பாசிட்டிவான எண்ணத்தை உருவாக்கும் வகையிலேயே, தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

``அப்பா வாழ்த்தியதுதான் ரொம்ப மகிழ்ச்சி!'' - நெகிழும் தமிழிசை

அதாவது, தென்னிந்திய தலைவர்களுக்கும் தேசிய தலைவர்கள் உரிய மரியாதை அளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனும் கேரளாவில் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்தான். இவர், 2010 முதல் 2015-ம் ஆண்டுவரை கேரள பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். முரளிதரன் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டு, இணையமைச்சராக்கப்பட்டார்.

இதே வழியில்தான் தமிழிசைக்கும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ ஆணையை வழங்குவதற்காக நேற்று தெலங்கானா பவன் ஆணையர் வேதாந்தம் கிரி, சென்னைக்கு வந்தார்.

விருகம்பாக்கம் வீட்டில், தமிழிசையைச் சந்தித்து ஆணையை வழங்கப்போகும் நேரத்தில் திடீரென்று, கரென்ட் கட் ஆகியுள்ளது. இதனால், சென்டிமென்டாக ஷாக்கான தமிழிசை, "சகுணம் சரியில்லை..!'' என்றதோடு, கே.கே நகரில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து ஆணையை வழங்குமாறு கேட்டுள்ளார். பத்திரிகை போட்டோகிராபர்கள் , "ஆணையை வாங்குங்கள் மேடம்" என நச்சரிக்க, வேறு வழியில்லாமல் அருகிலிருந்த திருமண மண்டபத்தில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, மின்வெளிச்சம் வந்த பின்னரே தமிழிசை ஆணையை வாங்கியுள்ளார்.

Kummanam Rajasekharan
Kummanam Rajasekharan

ஆணையைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ''எனக்கு எல்லாவற்றிலும் வெற்றிபெற்றுத்தான் பழக்கம். ஆளுநர் பதவியிலும் திறமையுடன் செயல்பட்டு வெற்றிபெறுவேன்'' என்றார்.

இதுவரை தெலங்கானா ஆளுநராக இருந்த நரசிம்மனுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் எந்த மோதலும் ஏற்பட்டதில்லை. நரசிம்மன் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத இவரை, 2009-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு ஆந்திர ஆளுநராக நியமித்தது. ஆந்திராவைப் பிரிப்பதில், நரசிம்மனுக்கு உடன்பாடு இல்லை. தெலங்கானா மாநிலம் பிரிந்த பிறகு, சந்திரசேகர ராவின் நிர்வாகத் திறமையைக் கண்டுவியந்த நரசிம்மன், மாநில அரசுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருந்தார். தமிழிசை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஓரளவுக்குப் பலம்கொண்டது. தமிழிசைக்கும் சந்திரசேகர ராவுக்கும் மோதலை உருவாக்க அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி காத்துக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chandrashekar Rao
Chandrashekar Rao

தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ், முதல்வர் சந்திரசேகர ராவ் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

''தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். அதில், 12 பேர் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கடிதமளித்தனர். அதேபோல் தெலுங்கு தேச கட்சிக்கு 3 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். அதில், இருவர் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவளித்தனர். அதில், ஒருவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாத நிலையில், அவருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்து சந்திரசேகர ராவ் அழகு பார்த்தார். ஆளுநர் நரசிம்மன் அந்த எம்.எல்.ஏ-வுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளை நரசிம்மன் ரசித்தாரே தவிர, தடுக்க முயலவில்லை. இது போன்ற விதிமீறல்கள் தமிழிசையின் காலத்தில் நடக்காது'' என்றார் கிருஷ்ண ராவ்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் தமிழிசை மீது நல்ல அபிப்ராயம் இருக்கிறதாம். தமிழிசையை நியமிக்கும் முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சந்திரசேகர ராவிடம் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது. சந்திரசேகர ராவ் ஏற்றுக் கொண்ட பின்னரே, தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தெலங்கானா பாரதிய ஜனதா கட்சி, தமிழிசையைத் தூண்டிவிட்டாலும், தமிழிசை சந்திரசேகர ராவிடம் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால், தெலங்கானாவின் மிகப் பெரிய ஆளுமை சந்திரசேகர ராவ். அதனால், மாநில பாரதிய ஜனதா கட்சிக்கு காது கொடுக்காமல் தமிழிசை அவர் வேலையை அமைதியாகப் பார்த்துக்கொண்டுபோவதே நல்லது என்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வட்டராங்கள் கூறுகின்றன.