Published:Updated:

நிதி ஒதுக்கப்படவில்லை... பராமரிப்பின்றி கிடக்கும் அரசுப் பள்ளிக் கழிவறைகள் - கண்டுகொள்ளுமா அரசு?

பள்ளிக் குழந்தைகள்
News
பள்ளிக் குழந்தைகள் ( Pandi.U )

தொடக்கப்பள்ளிகளில் கழிவறை வசதி, பாராமரிப்பு இல்லாமல் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாகிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கை எப்போதோ கடந்து முன்னணியில் நாம் இருக்கிறோம். ஆனால், அரசுப் பள்ளி பராமரிப்பில் தொடர்ந்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அதிலும், தொடக்கப்பள்ளிகளில் கழிவறை வசதி, பாராமரிப்பு இல்லாமல் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாகிக்கொண்டிருக்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்யவைப்பது, சுவர் இடிந்து விழுவது, மாணவர்கள் மரணம் என அவ்வப்போது மனதை கனக்கச் செய்யும் செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், மாற்றம் மட்டும் உண்டாகவில்லை.

அரசுப் பள்ளிக்கூடம்
அரசுப் பள்ளிக்கூடம்

2015-16-ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்ட பள்ளிக் கழிப்பறை பராமரிப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளிகள், கிராமப்புறப் பள்ளிகளுக்கு மாதம்தோறும் பணம் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்தப் பணம், பள்ளிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியத்துக்கும், பராமரிப்பு பொருள்கள் வாங்கவும் பயன்பட்டுவந்தது. மாணவர்களின் உடல்நலம் மற்றும் பள்ளியின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தால் தமிழகம் முழுதும் பயன்பெறும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 34,947. இதற்காக வருடத்துக்கு சுமார் 57.63 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிவந்தது. இதில் 39.79 கோடி பணி செய்பவர்களுக்கும் 17.84 கோடி பொருள்களுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ( 2015 - 16 வெளிவந்த அரசாணைப்படி). இந்த நிலையில், கொரோனா காலத்துக்குப் பிறகு இந்த நிதி ஒதுக்கப்படவில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, ``கொரோனாவில் பள்ளிகள் மூடிய காரணத்துக்காக இந்த நிதி நிறுத்தபட்டது. ஆனால், அதற்குப் பிறகும் நிதி வரவே இல்லை. கொரோனா முதல் அலைக்கு பின்னர் சிறிது காலம் பள்ளி திறக்கப்பட்டது. இப்போதும் பல இடங்களில் பள்ளிகள் இயங்கிவருகின்றன. பணமே கொடுக்காமல் பள்ளிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அழுத்தம் மட்டும் தருகிறார்கள். நாங்கள் கைக்காசைப் போட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதுவும் எல்லாப் பள்ளிகளிலும் இவ்வாறு கொடுக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை. சில பள்ளிகளில் மூன்று, நான்கு ஆண்டுகளாக இந்த நிதி வருவதில்லை.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் சரியாகக் கிடைப்பதில்லை. தனியார் ஒப்பந்ததாரர்கள் கையில் சென்று பணியாளர்களுக்கு வழங்கப்படுவதால் அவர்கள் பாதியை எடுத்துக்கொள்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு மொத்தமாகக் கொடுப்பதும், அதற்குப் பலமுறை போராடுவதுமே யதார்த்த நிலைமையாக உள்ளது. மேலும் 1,000-2,000 பேர் பயிலும் பள்ளிகளில் வெறும் ஒன்றிரண்டு தூய்மைப் பணியாளர்களே இருக்கிறார்கள். காலை முதல் மாலை வரை பள்ளியில் உள்ள அனைத்துச் சுகாதாரப் பணிகளையும் அவர்கள் செய்வது மிகக் கடினமாக உள்ளது. பள்ளி மேலாண்மைக்குழுவும் பல பள்ளிகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை. அதிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது'' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன் இது குறித்துப் பேசும்போது, "பள்ளி என்பது வெறும் வகுப்பறை மட்டுமல்ல. சுற்றுச்சூழல் எல்லாம் சேர்ந்ததுதான் பள்ளி. அதில், கழிப்பறை என்பது மிக முக்கியமான ஒன்று. அது சரியாகப் பராமரிக்கப்படவில்லையென்றால் பல்வேறு நோய்கள் வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகளே அதிகமாகப் படிக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் குழந்தைகளுக்குப் பல்வேறு வகையில் ஏமாற்றமே மிஞ்சியது. பள்ளி மேலாண்மைக்குழு இயங்கியதற்கான வெள்ளை அறிக்கையை அரசால் தர முடியுமா, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது?

தேவநேயன்
தேவநேயன்

ஏதாவது உயிரிழப்பு நடந்தால் மட்டும்தான் இதற்கெல்லாம் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா..? இந்த நிதி அரசால் ஒதுக்கப்பட்டு பள்ளிகளுக்கு வரவில்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாரிடம் இந்தப் பொறுப்புகளைக் கொடுக்காமல் அரசே இதை மேற்பார்வையிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் இந்த அரசு இதையெல்லாமும் தன் கவனத்தில் கொண்டுவர வேண்டும். மேலும் தவறு செய்தவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டபோது, ``இந்த நிதி நேரடியாக பள்ளிக்கல்வித்துறையால் ஒதுக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வருவாய்த்துறையிலிருந்து நிதி கிராம நிர்வாக அலுவலருக்குக் கொடுக்கப்படும். மேலும் அங்கிருந்து நிதி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குச் செல்லும். கொரோனா காலத்தில் நிதிச் சிக்கல் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆட்சி மாறிய பின் கொரோனாவுக்குப் பிறகு அந்த நிதி இப்போது வருவாய்த்துறையிலிருந்து ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து தலைமை ஆசிரியர்களுக்கு நிதி செல்ல தாமதமாகிறது. இதனால் அதுவரை பள்ளிக்கல்விதுறை, தலைமையாசிரியர்களின் நிதியிலிருந்து அதை வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதை விரைவுபடுத்த சுற்றறிக்கை அனுப்பி அழுத்தம் தரப்பட்டுள்ளது" என்றார்.