Published:Updated:

உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே!

உள்ளாட்சி சடுகுடு
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி சடுகுடு

பதறும் பழைய பார்ட்டிகள்

உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே!

பதறும் பழைய பார்ட்டிகள்

Published:Updated:
உள்ளாட்சி சடுகுடு
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி சடுகுடு

‘இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும், அமைப்புத் தேர்தல்கள் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மா அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கழக நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட இந்தப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது!’ - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2017, செப்டம்பர் 12-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானம் இது.

நவம்பர் 6-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் முடிவுசெய்து தெரிவிக்க வேண்டும். கூட்டணி, இடங்கள் பங்கீடு உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குங்கள்’’ என்று பேசியிருக்கிறார். ‘அம்மா வழியில் நடக்கும் அரசு’ என அடிக்கடி முழங்கும் இன்றைய அ.தி.மு.க தலைமை, கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் அப்படியே பின்பற்றப்போகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது எடப்பாடியின் சமீபத்திய பேச்சு.

உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே!

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளிவருவதற்கான முஸ்தீபுகள் கடந்த ஒரு மாதமாகவே வேகமெடுத்துள்ளன. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த அ.தி.மு.க அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘தேர்தலை நடத்துவோம்’ என வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியல் தொடங்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் வைப்பது வரையிலான தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக் கிறது மாநிலத் தேர்தல் ஆணையம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்று நடந்தது என்ன?

உடல்நலக் குறைவால் 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா, அப்போலோவில் அனுமதிக்கப் பட்டார். நான்கு நாள் கழித்து செப்டம்பர் 26-ம் தேதி ‘உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்’ என்ற அறிவிப்பு வெளியானது. மறுநாளே அ.தி.மு.க-வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோதே அவரின் பெயரில் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்தன. வேட்புமனு தாக்கலும் தொடங்கியது.

அப்போதுதான் ‘பழங்குடியினருக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை’ என தி.மு.க வழக்கு தொடர்ந்தது. ‘தேர்தல் அறிவிப்பு முறையாகச் செய்யப்படவில்லை, கால அவகாசம் அளிக்கவில்லை’ என்ற வாதமும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. இதனால், உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கிடையே ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர்கள் பலர் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது தேர்தலை அவசர அவசரமாக நடத்த ஆர்வம் காட்டிய அ.தி.மு.க. அதன் பிறகு தேர்தலைத் தள்ளிப்போடவே முயன்றது. தேர்தல் நடத்தாமல் இருக்க நீதிமன்றங்களில் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிருந்தது. இப்போது ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போகிறார்கள். இதில்தான் இப்போது ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர்.

சிக்கல் என்ன?

“ஜெயலலிதாவால் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும், அமைப்புத் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அவரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட ஒப்புதல் அளித்த பொதுக்குழு தீர்மானம், வேட்பாளர் தேர்வுக்கும் பொருந்துமா என்பதில்தான் சிக்கல் எழுந்துள்ளது. ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் சீட் தரப்படும் என்று எந்த உறுதியும் இப்போது தரப்படவில்லை. அப்படித் தராமல்போனால் பொதுக்குழு தீர்மானத்தை மீறியதாகிவிடும். கொடுத்தால், அது சசிகலாவுக்குச் சாதகமாகிவிடும்.

உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே!

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது வெளியிடப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் இருந்த பலரும் சசிகலாவின் ஆதரவாளர்கள். ஜெயலலிதா அப்போலோவில் இருந்ததால், அவரின் பெயரைப் பயன்படுத்தி சசிகலா தரப்பினர் அந்த வேட்பாளர் பட்டியல் களை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மூலமாக சசிகலா தரப்பு, வேட்பாளர் தேர்வில் பெரியளவில் வசூல் வேட்டையாடியதாகவும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் இப்போது, ‘உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் முடிவுசெய்து தெரிவிக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதைவைத்து பார்க்கும்போது, ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் பலருக்கும் சீட் கிடைக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெயலலிதா பட்டியலில் வெளியேயும் எடப்பாடி பட்டியல் உள்ளேயும் செல்லும் எனத் தெரிகிறது. அதனால், அப்போது சசிகலா தரப்புக்கு பணம் கொடுத்து சீட் வாங்கிய பழைய பார்ட்டிகள் பலரும் ‘அய்யோ, சீட்டும் போச்சு... நோட்டும் போச்சு’ என்று புலம்பத் தொடங்கியுள்ளனர்’’ என்றவர்கள், இதன்மூலம் என்ன நடக்கும் என்பதையும் சொன்னார்கள்.

“இப்போது அமைச்சர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் இருப்பவர்கள்தான், ஜெயலலிதா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோதும் அதே பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள் மூலமாக மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்டவர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்தனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையுடன் பணம் கொடுத்தவர்களுக்கே சீட் தரப்பட்டது. அவர்களுக்கு இப்போது சீட் கிடைக்காமல்போனால், அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் முற்றுகையிட்டு கட்டாயம் பிரச்னை செய்வார்கள்.

புதிய வேட்பாளர் தேர்வு தொடங்கும்போதே பிரச்னை வெடிக்கத் தொடங்கிவிடும். அதுமட்டுமன்றி, 2016-ம் ஆண்டில் எந்தக் கட்சியுடனும் கூட்டுவைக்காமல் அ.தி.மு.க தனித்தே போட்டியிட்டது. இப்போது பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா எனப் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. இவர்களுக்கு குறைந்தபட்சம் 30-லிருந்து 40 சதவிகித இடங்களைக் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி கொடுத்தால் அந்த இடங்களுக்கு ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. அதிலும் பிரச்னை கிளம்பும்.

பணம் கொடுத்தவர்கள் பக் பக்!

தமிழக உள்ளாட்சிகளில் மொத்தம் உள்ள 1,30,000-க்கும் அதிகமான பதவிகளில், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து 50,000-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்வுசெய்யப் பட்டிருந்தனர். இவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக அப்போது எத்தனை கோடி ரூபாய் மொத்தமாய் வசூல்செய்யப் பட்டது எனத் தெரியவில்லை. இவர்களில் அ.ம.மு.க-வுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுக்குத்தான் சீட் தரவேண்டும் என நிச்சயமாகப் போர்க்கொடித் தூக்குவார்கள். இல்லாதபட்சத்தில், முன்பு தாங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்துத் தர வேண்டும் என்று சண்டை போடுவார்கள். அது கட்சிக்குள் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கும். ஒட்டுமொத்த வெற்றியையும் பாதிக்கும். தவிர, ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நடந்த வசூல் வேட்டையைப் போலவே ‘வசூல் வேட்டை 2’ ஆரம்பமாகும். அதற்கான பேரங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.

உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே!

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பலரும் கட்சிக்கு நிதி வழங்கினார்கள். அத்துடன் விருப்ப மனுவும் அளித்தார்கள். விருப்ப மனுவுக்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகை 34 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகையைக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள். அப்படி நன்கொடை கொடுத்தவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் சீட் பிடிக்க போட்டிப் போடுவார்கள். அவர்களையும் சமாளிக்க வேண்டி வரும்.

ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் விதிமுறை. ஆனால், கடந்த ஆண்டில் பொதுக்குழுவைக் கூட்டவில்லை. நவம்பர் 24-ம் தேதி பொதுக்குழு கூடுகிறது. கடந்த பொதுக் குழுவில் ‘ஜெயலலிதாவால் நியமிக்கப் பட்டவர்களும், தேர்தல்கள் வழியாகத் தேர்வு செய்யப்பட்டோரும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்’ எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இந்தப் பொதுக்குழுவில் அதை மீறினால் அதனால் ஏற்படும் சிக்கலையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடிக்கு ஏற்படும். அதனால், உள்ளாட்சித் தேர்தல் எடப்பாடிக்கு பெரும் தலைவலிதான்.

நவம்பர் 6-ம் தேதியன்று நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டாம்’ என்று பேசியிருந்தார். அதற்கு கூட்டத்தில் தெளிவான பதில் ஏதும் கிடைக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா... தள்ளிப் போடப்படுமா, அப்படியே நடந்தாலும் பழைய ஆட்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். கூடவே தமிழக மக்களும்!

‘‘அம்மா அறிவித்த பட்டியலை மதிப்போம்!’’ - அமைச்சர் ஜெயக்குமார் ‘பளிச்’

உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே!

ந்த விவகாரம்குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். ‘‘தி.மு.க தொடுத்த வழக்கால் தள்ளிப்போன உள்ளாட்சித் தேர்தல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, மாவட்டச் செயலாளர்கள் அளித்த பட்டியலை ஆராய்ந்து வேட்பாளர்கள் பட்டியலை அம்மா அறிவித்தார். இந்தப் பட்டியலுக்கு மதிப்பளிக்க வேண்டியது எங்களின் கடமை. மற்றதை கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுக்கும்’’ என்றார்.