Published:Updated:

`வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
ஈ.ஜெ.நந்தகுமார்

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், ``சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்காமல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக்கொண்ட சீர்மரபினருக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

தமிழக அரசுத் தரப்பில், ``ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழக மொத்த மக்கள்தொகையில் 13.01 சதவிகிதம் என்ற அளவில் வன்னியர்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற நம்பத் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை. அதனால் எதிர்த்தரப்பு வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே இந்த வழக்கில், ``வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று பா.ம.க தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

10.5% இடஒதுக்கீடு; அதிமுக-பாமக கூட்டணி! -இவற்றை மீறி வேல்முருகன் வென்றது எப்படி? #TNelections2021
உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் அமர்வு,

``மாநில அரசுக்கு சாதி அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா... முறையான வரையறுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இன்றி இதுபோல உள் இட ஒதுக்கீட்டை வழங்கலாமா... அப்படி வழங்கினால் அது சட்ட விரோதமானதாகுமா என்பது போன்ற ஏழு வினாக்களின் அடிப்படையில் வாதங்களைப் பகுப்பாய்ந்ததில், அரசு தனது சட்ட எல்லையை மீறி வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை" எனக் கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து வழக்கறிஞர்கள் எழுப்பிய கேள்விக்கு ``சட்டமே ரத்தாகிவிட்டதால், அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும்" என நீதிபதிகள் விளக்கமளித்தனர். இந்தத் தீர்ப்பை நிறுத்திவைக்க வழக்கறிஞர் கே.பாலு வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, `உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு