Published:Updated:

மகிழ்ச்சியைவிடக் கவலைதான் அதிகமாக இருக்கிறது!

வைகோ
பிரீமியம் ஸ்டோரி
வைகோ

வைகோ உருக்கம்

மகிழ்ச்சியைவிடக் கவலைதான் அதிகமாக இருக்கிறது!

வைகோ உருக்கம்

Published:Updated:
வைகோ
பிரீமியம் ஸ்டோரி
வைகோ

ம.தி.மு.க-வின் தலைமையகமான தாயகம், அன்றைக்கு வழக்கத்தைவிட கூடுதல் பரபரப்போடு இருந்தது. மாநிலங்களவை எம்.பி-க்கான தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்படுமா, நிராகரிக்கப்படுமா என்று தெரியாத நிலையில், ம.தி.மு.க தொண்டர்கள் கவலையுடன் அங்கு காத்திருந்தனர். ‘வைகோவின் மனு ஏற்கப்பட்டது’ என்ற செய்தி வந்ததும், தாயகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ம.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். 23 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் தலைவன் நாடாளுமன்றத்தில் கம்பீர உரையாற்றப்போகிறார் என்பதையறிந்த தொண்டர்கள் உற்சாகத்தில் வாழ்த்து கோஷங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் மூழ்கினர். அந்த உற்சாகச் சூழலுக்கு மத்தியில் வைகோவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினர், இரண்டு முறை மக்களவை உறுப்பினர் என நாடாளுமன்ற செயல்பாடுகளில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் நீங்கள். ‘சிறந்த நாடாளுமன்றவாதி’, ‘பார்லிமென்ட் டைகர்’ என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கிறீர்கள். 23 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு மாநிலங்களவை செல்லப்போகிறீர்கள். இது, உங்கள் இயக்கத்தைத் தாண்டி பல தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்?”

“இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவைக்குப் போகப்போகிறேன் என்பதை நினைக்கும்போது சற்று மலைப்பாக இருக்கிறது. இன்றைக்கு மக்களவையில் மிகப்பெரிய அளவுக்கு பி.ஜே.பி பெரும்பான்மை பெற்றுள்ளது. மாநிலங்களவையிலும் அதே பெரும்பான்மையைப் பெறக்கூடிய அளவுக்கு அந்தக் கட்சி வளர்ந்துள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூக நீதி, பல தேசிய இனங்கள், பல பண்பாடுகள், நாகரிகங்கள் கொண்ட அமைப்புக்கே பெரும் அழிவாக இருக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்கிற ஒரு கவலை எனக்கு இருக்கிறது.

மகிழ்ச்சியைவிடக் கவலைதான் அதிகமாக இருக்கிறது!

ஆரம்ப காலத்தில், நாடாளுமன்றத்தில் என் செயல்பாடுகளைக் கண்டு எல்லா தலைவர்களும் எனக்கு அறிமுகமானார்கள். கட்சி எல்லைகளைக் கடந்து என்னிடம் அன்பு செலுத்தினார்கள். ஆனால், இப்போதுள்ள எம்.பி-க்களில் 90 - 95 சதவிகிதம் பேரை எனக்குத் தெரியாது. ஒரு புதிய உறுப்பினர் மாதிரிதான் நான் அங்கு போக வேண்டியிருக்கிறது. ஆகையால், பெரிய மகிழ்ச்சி என்பதைவிட, இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற பெரிய பாரம் என் மனதில் இருக்கிறது. மாநிலங்களவையில் எங்கள் கட்சியின் ஒரேயொரு உறுப்பினர் நான். எனவே, எல்லா விவாதங்களிலும் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தாலும், நேரம் குறைவா கவே கொடுக்கப்படும். இந்நிலையில், எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் எப்படி நிறைவேற்றுவது என்ற திகைப்பிலும், கவலையிலும் இருக்கிறேன்.”

“மாநிலங்களவை உறுப்பினர் ஆகப்போகிற நேரத்தில், தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“124 ஏ என்ற சட்டப்பிரிவு ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் இதுவரை ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை. இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கைதான ஒரேயொரு எம்.பி நான் மட்டும்தான். அதேபோல, 124 ஏ என்ற சட்டப்பிரிவில் தண்டனைப் பெற்று முதல் பலியாகியிருப்பதும் நான்தான். இது எனக்குப் பெருமைதான்!”

வைகோ
வைகோ

“ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று தேசிய அளவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அணிகளை அமைத்து கட்சிகள் செயல்பட்டுள்ளன. அவற்றில் உங்களுடைய பங்கும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்த மாதிரியான எந்த ஏற்பாடும் தேசிய அளவில் இப்போது இல்லை. அதற்கான ஒரு முயற்சியை நீங்கள் எடுப்பீர்களா?”

“1978-ல், முதன்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அங்கே என்னை வழிநடத்தியவர் அண்ணன் முரசொலி மாறன். அவர் மூலமாகப் பல பெரிய தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஜோதிர்மயி பாசு, புபேஷ் குப்தா, ஹெச்.வி.காமத், வாஜ்பாய், அத்வானி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, நிதீஷ்குமார், பிரகாஷ் சிங் பாதல், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் என எல்லோரும் என் மீது அன்பையும், பாசத்தையும் காட்டி அரவணைத்தார்கள். அந்தச் சூழலும், காலகட்டமும் வேறு.

இன்றைக்கு மதச்சார்பற்றத் தன்மையை அழித்துவிட்டு, பல மொழிகள், பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள் நிறைந்த நாட்டில், ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைப் பண்பாடு என்று கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இத்தகைய சூழலில், ஜனநாயகத் துக்கே பெரும் ஆபத்தாகத் திகழ்கிற பி.ஜே.பி-யின் நோக்கங்களை எதிர்கொள்ள நாமெல்லாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்கிற கருத்தை எனக்குத் தெரிந்த தலைவர்களிடம் எடுத்துச்சொல்லி அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். ஆனால், ஜோதிர்மயி பாசு, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், வாஜ்பாய் போன்ற பெரிய ஜாம்பவான்கள் இப்போது இல்லை. பழைய தலைவர்களில் டாக்டர் ஃபரூக் அப்துல்லா போன்ற ஒன்றிரண்டு பேர்தான் இருக்கிறார்கள். ஆனாலும், எல்லோரையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை நிச்சயம் மேற்கொள்வேன்.”

“மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான வாய்ப்பை தி.மு.க உங்களுக்கு வழங்கியதையும், அது குறித்து எழுந்த விமர்சனங்களையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“எங்கள் இயக்கத்தில் மற்றவர்களை எம்.பி-க்களாகவும், எம்.எல்.ஏ-க் களாகவும், அமைச்சர்களாகவும் அமரவைத்து மகிழ்ந்தவன் நான். என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எங்கள் கட்சி முடிவு செய்தது. ஆனால், நான் அமைச்சர் ஆவதில்லை என்று முடிவெடுத்தேன். என் முடிவால் கண்ணப்பனும், செஞ்சி ராமச்சந்திரனும் மத்திய அமைச்சர்களாக ஆக்கப்பட்டார்கள். பொடா சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த சூழலில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் பல லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெறலாம் என்ற சூழல் நிலவியது. ஆனால், அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவுசெய்தேன். அப்போது நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆகியிருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்புகளை எல்லாம் நான் மறுத்துவிட்டேன்.

என் தம்பி ரவிச்சந்திரன் தடா சட்டத்தின்கீழ், ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். அவருக்குக் கட்சியில் எந்தப் பதவியையும் நான் கொடுக்க வில்லை. என் மகன், எல்லா வகையிலும் எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். அவரை நான் அரசியலுக்குக் கொண்டுவரவில்லை. எங்கள் இயக்கத்தில் தொண்டர்களின் உணர்வு களைத்தான், தலைமை எதிரொலிக்கிறது. எனவே, அவர்களின் ஒப்புதலைப் பெற்றுத்தான், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தோம். என் சுயநலத்துக்காக எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை. இந்த முறை, ‘உங்களைத் தவிர வேறு யாரைப்பற்றியும் யோசிக்கக் கூடாது’ என்று கட்சி முடிவெடுத்தது. கட்சியின் ஒட்டுமொத்தக் கருத்தின் அடிப் படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.”

“தி.மு.க-வைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்தது ஒரு சர்ச்சையாக எழுந்ததே?”

“என் வேட்பு மனு ஏற்கப்பட்டது என்றவுடன், தி.மு.க. தலைவரும் என் ஆருயிர் சகோதரருமான தளபதி ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்கு முன்பாக, ‘ஒருவேளை என் மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடு என்ன’ என்று அவரிடம் கேட்டேன். அதன்படி, ஒரு ஏற்பாடு செய்தார்கள். அவ்வளவுதான்.”

“நாடாளுமன்றத்தில் எந்த மாதிரியான பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் பேசுவீர்கள்?”

“தற்போது தமிழகம் பல ஆபத்து களால் சூழப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். மதச் சார்பின்மையைக் காக்க வேண்டும். கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ வேண்டும். தமிழ் ஈழம் அமைவதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது, நியூட்ரினோ திட்டம் கூடாது, மேக்கேதாட்டூ அணையைக் கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது, கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைப் புதைக்கக் கூடாது, மேக்கேதாட்டூவில் கர்நாடகம் புதிய அணை கட்டிவிட்டால், நமக்கு சொட்டுத் தண்ணீர்கூட வராது. ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனம் ஆக்கிவிடும். கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டப்போகிறார்கள். முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்தி, இந்து, இந்து ராஷ்டிரா என்பதை நிலைநாட்டிவிட வேண்டும் என்ற இந்துத்துவ சக்திகளின் பிரதிநிதியாக நரேந்திர மோடியின் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, முற்பட்ட வகுப்பினருக்குப் பொருளாதார அடிப்படையில் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு புதிய சட்டம் கொண்டுவருகிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எதிராக என்னுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.”