Published:Updated:

டெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்?

ஆர்.பி.உதயகுமார் பேட்டி

பிரீமியம் ஸ்டோரி

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விருப்ப ஓய்வு விண்ணப்பமும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன!

தமிழகத்தில் செயல்படுத்தப் படவிருக்கும் `பாரத் நெட்’ உள்கட்டமைப்புக்கான 2,441 கோடி ரூபாய் டெண்டர்தான், பிரச்னைகளுக்கான ஆணிவேர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கிளம்புவதற்கு முன்பே, இதுபற்றி 25.12.2019 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி!’ என்ற தலைப்பில் எக்ஸ்க்ளூசிவ் கவர் ஸ்டோரியை பெயர்களை மறைத்து வெளியிட்டிருந்தோம். சில தினங்களில் சந்தோஷ் பாபு வி.ஆர்.எஸ் விண்ணப்பம் கொடுக்க, விவகாரம் அரசியல் அரங்கில் பற்றியெரியத் தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர்கள் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு ஆட்சியாளர்களுக்குக் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

சந்தோஷ் பாபு - ஸ்டாலின் - பெரியசாமி
சந்தோஷ் பாபு - ஸ்டாலின் - பெரியசாமி

‘முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டம்மியாக்கப்படுகிறார்கள். சந்தோஷ் பாபு இருந்த இடத்தில், டி.ஆர்.ஓ-வாக இருந்து சமீபத்தில் ஐ.ஏ.எஸ் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரவிச்சந்திரன் எம்.டி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். 2,441 கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கியமான திட்டத்தை நிறைவேற்ற, சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எவரும் இல்லையா? ஆரம்பக்கட்ட நிலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

‘தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். நாங்கள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டுகிறோம். பாரத் நெட் டெண்டர் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா?’ என்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.

‘‘டெண்டர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காததால்தான் சந்தோஷ் பாபு இடம் மாற்றப்பட்டாரா?”

‘‘இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு. இதை, பெரிய குற்றமாக ஸ்டாலின் அறிக்கைவிட்டிருப்பது ஆச்சர்யமானது. தி.மு.க ஆட்சியில் பணியிட மாறுதல் நடைபெறவில்லையா? தங்கள் குடும்பத்தினர் நடத்திய தொலைக்காட்சிக்கு உதவவில்லை என்பதால், அரசு கேபிள் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த உமாசங்கரை சஸ்பெண்ட் செய்ததை தமிழக மக்கள் அறிவார்கள். இதை அப்போதே ஜெயலலிதா கண்டித்துப் பேசினார். இதை மறந்துவிட்டு பேசுகிறார் மு.க.ஸ்டாலின்.’’

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

‘‘பாரத் நெட் டெண்டரில் முறைகேடுகள் நடக்கவேயில்லை என்று உறுதியாகக் கூற முடியுமா?’’

‘‘தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கு அதிவேகமான இன்டர்நெட் வழங்கும் வகையில் இணைப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம். மத்திய அரசின் பாரத் நெட்டுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு டெண்டரே இன்னும் முடிவாகவில்லை. விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடைபெறும்? தற்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது. எந்த நிறுவனத்திடமிருந்தும் ஒப்பந்தப்புள்ளியோ விலைப்புள்ளியோ இன்னும் பெறப்படாத நிலையில், இதில் ஊழல் நடந்துவிட்டது என்று கூறுவது விந்தையாக உள்ளது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அதிகாரத்தில் இருப்பவர்களை வளைத்து ஒரு நிறுவனம் டெண்டர் பெற இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’’

‘‘டெண்டரில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனங் களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெண்டர் கோரும் நிறுவனங்கள், பெயர் சொன்னால் தெரியும் நிறுவனமாகவும், அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும்கொண்ட நிறுவனமாகவும் இருக்க வேண்டும். முக்கியமான திட்டம் என்பதால், புதிதாக வந்த நிறுவனங்கள், எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிறுவனங்களை அனுமதிக்க முடியாது. இது ஆன்லைன் டெண்டர் என்பதால், யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் வேலையாட்கள், அனுபவம், அதற்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ள முதல் தர நிறுவனங்கள் கோரும் டெண்டர்களைத்தான் பரிசீலிக்க முடியும்.’’

‘‘பாரத் நெட் எம்.டி-யாக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்காமல், டி.ஆர்.ஓ-வாக இருந்து ஐ.ஏ.எஸ் ஆன ரவிச்சந்திரனை நியமித்தது ஏன் என்று ஸ்டாலின் கேட்டுள்ளாரே?’’

‘‘ஐ.ஏ.எஸ் நிலைக்கு வந்துவிட்டவர்களை ஒரு திட்டத்துக்கு நியமிக்கும்போது சீனியர், ஜூனியர் எனப் பிரித்துப் பார்ப்பது நியாயமா? எல்லாவற்றையும் சீனியர்களே பார்க்க வேண்டு மென்றால், அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை எப்படிப் பயன்படுத்துவது? தி.மு.க ஆட்சியில் அப்படித்தான் செய்தார்களா? இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்கள் தொலைக்காட்சி, கேபிள் தொழில் பாதிக்கப்படும் என ஸ்டாலின் அஞ்சுகிறார். அதனால்தான், ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு