Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... அறிவிக்கத் தயங்கிய மோடி... அதிரடி காட்டிய எடப்பாடி!

தொழில்துறையினர் பிரதமரிடம் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்கின்றனர்.

பிரீமியம் ஸ்டோரி
ஹேங்அவுட்ஸ் காலில் வந்த கழுகார், சற்று கவலையான முகத்துடன் தெரிந்தார். நலம் விசாரித்துவிட்டு, ‘‘ஊரடங்கை நீட்டிப்பதில் தமிழக அரசுக்கு ஏன் இவ்வளவு குழப்பம்?’’ என்று நேரடியாக மேட்டருக்குச் சென்றோம்.
மிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... அறிவிக்கத் தயங்கிய மோடி... அதிரடி காட்டிய எடப்பாடி!

‘‘ஊரடங்கு நீட்டிப்பதில் மட்டுமல்ல... மக்களுக்கு உதவும் தன்னார்வலர்களுக்குத் தடைவிதிப்பது, யார் பிரஸ் மீட் கொடுப்பது என எல்லாவற்றிலும் தமிழக அரசுக்குக் குழப்பம்தான். இதே நிலை நீடித்தால், கொரோனா விவகாரத்தில் தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும்.’’

‘‘ஓ... உம்முடைய கவலை இதுதானா! ஆனால், பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பே ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுவிட்டாரே எடப்பாடி?’’

‘‘அதற்கு முன்னதாகவே ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து அறிவித்து விட்டனவே... கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதுவரை மத்திய அரசிடமிருந்து பெரிய அளவில் எந்த உதவியும் வரவில்லை. பி.ஜே.பி ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, கடுமையான பாதிப்பில் உள்ள தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்திருக் கிறார்கள். அப்படியிருந்தும் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி பிரதமர் அறிவிப்புக்காகக் காத்திருந்ததும், அதை பகிரங்கமாகச் சொன்னதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவிட்டது.’’

‘‘முதல்வர்களுடனான பிரதமரின் வீடியோ மீட்டிங்கில் பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியும், அதை தேசிய அளவில் அறிவிப்பதில் பிரதமருக்கு என்ன பிரச்னை?’’

‘‘முதல்வர்கள் மட்டுமல்ல... இந்த ஊரடங்கை நீட்டிக்காவிட்டால் இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிர்பலி பல ஆயிரங்கள் அதிகரித்துவிடும் என உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை செய்துவிட்டது. அதன்பிறகே பிரதமர் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கலாமா என்று முதல்வர்களிடமும் கேட்டதற்கு, பலரும் ஓகே சொல்லியிருக்கின்றனர்.’’

‘‘பிறகு ஏன் தாமதம்?’’

‘‘தொழில்துறையினர் பிரதமரிடம் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்கின்றனர். ‘ஏற்கெனவே 21 நாள்கள் ஊரடங்கிலேயே தொழில்கள் முடங்கிவிட்டன. இதே நிலை நீடித்தால், இந்தியாவின் பொருளாதாரமே பாதாளத்துக்குச் சென்றுவிடும்’ என்றும் எச்சரித்திருக்கின்றனர். இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்ற கவலையில்தான் முடிவை அறிவிப்பதில் தாமதம் என்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘வர்த்தகத் துறை அமைச்சகத்திடமும் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கை கேட்டது. ‘தொழில்களை முற்றிலும் முடக்கினால் பாதிப்பு அதிகம் வரும்’ எனச் சுட்டிக்காட்டிய வர்த்தகத் துறை அமைச்சகம், ‘ரெட் ஜோன் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை மட்டும் இயக்காமல் இருக்கலாம்’ என ஆலோசனை தெரிவித்திருக்கிறது. அதேபோல் உள்துறை அமைச்சகமும், ‘ரெட் ஜோன் பகுதியில் மட்டும் முழு ஊரடங்கைப் பின்பற்றச் சொல்லி மற்ற பகுதிகளில் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கைத் தளர்த்தலாம்’ என, ஏப்ரல் 13 அன்று மதியம் அறிக்கை கொடுத்திருக்கிறது.’’

‘‘ஓ... அதற்குப் பிறகுதான் பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை குறித்த அறிவிப்பு வெளியானதோ?’’

‘‘ஆமாம்... ஆனால், இனியும் தாமதித்தால் நன்றாகயிருக்காது என நினைத்த முதல்வர் எடப்பாடி, ஏப்ரல் 13 அன்று மாலையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். அத்துடன், இரண்டாவது முறையாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய், ரேஷன் பொருள்கள் இலவசம் போன்ற அதிரடி அறிவிப்புகளையும் அறிவித்துவிட்டார்.’’

‘‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேபோகிறதே?’’

‘‘அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். டெல்லி மாநாடு என்பது ஒரு காரணம். இரண்டாவது, மிக முக்கியமானது. ‘பி.ஜே.பி ஆளும் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான எந்த வசதியுமே இல்லை. தமிழகத்தில்தான் இந்தப் பரிசோதனை அதிகமாக நடைபெறுகிறது. அதனால்தான் அதிகமான பாதிப்பும் தெரிகிறது’ என்கிறார்கள்.’’

‘‘எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக இருக்கிறதே... இங்கேயே சோதனை குறைவு என்றுதானே சொல்கிறார்கள்?’’

‘‘மற்ற மாநிலங்களில் இந்த வசதியில்லை என்ற வருத்தத்தை மத்திய சுகாதாரத் துறையும் பதிவுசெய்திருக்கிறது. தமிழகத்தில் சோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவே ‘ரேபிட் கிட்’ வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஆனால், அது வருவதிலும் சிக்கலாகிவிட்டது.’’

‘‘ரேபிட் கிட் எப்போதுதான் வருமாம்?’’

‘‘ஏப்ரல் 15-ம் தேதி வரும் என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறதே... தமிழகத்திலிருந்து தனியாக சீனாவில் ஆர்டர் கொடுத்திருந்தாலும், மத்திய அரசு தலையிட்டு ‘மொத்த கிட்டையும் கொடுங்கள்; நாங்கள் பிரித்துக் கொடுத்துக் கொள்கிறோம்’ என்று சீனாவிடம் சொல்லி விட்டதாம். ஏற்கெனவே இந்தியாவுக்கு வரவேண்டிய கிட்டை வழிப்பறிக் கொள்ளையைப் போன்று பறித்துச் சென்றுவிட்டது அமெரிக்கா. அதை இந்தியா தட்டிக்கேட்கக்கூட தயாராகயில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.’’

மோடி
மோடி

‘‘கொரோனா விவகாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென கொந்தளித்திருக்கிறாரே?’’

‘‘அதைத்தான் அனைத்து தரப்பினருமே ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். குறிப்பாக, ‘அரசு இயங்காவிட்டால் அதை நாங்கள் இயக்கவைப்போம்’ என்று ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டது எடப்பாடியை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம். ‘அரசு எதுவுமே செய்யவில்லை என்பதுபோல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் வைக்கிறார்’ என்று கூறியதற்குதான், இவ்வளவு கடுமையாக அறிக்கைவிட்டு எடப்பாடியை கொஞ்சம் ஆட்டம் காணவைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.’’

‘‘வழக்கு போடவும் ஏற்பாடு செய்தாராமே?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆமாம். தன்னுடைய அறிக்கையில், ‘அரசின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தட்டிக்கேட்கக் கூடாதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஸ்டாலின். அதேபோல், ‘மக்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்யக் கூடாது’ என்று எடப்பாடி அரசு உத்தரவு போட்டதும் ஸ்டாலினை வெகுவாகக் கோபப்படவைத்துவிட்டது. அது தி.மு.க-வுக்கு எதிரான உத்தரவுதான் என நினைத்த ஸ்டாலின், கட்சியின் வழக்கறிஞர் வில்சனிடம் ‘இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.’’

‘‘தி.மு.க தரப்புதான் அதிகமாக களத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றனவே... நிஜமாகவா?’’

‘‘நீர் உமது நிருபர் படையைவைத்து ஆய்வுசெய்தால் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், இப்போதுள்ள இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தி.மு.க தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால், தி.மு.க-வின் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் பரவலாகத் தெரிகிறார்கள். ஸ்டாலினும் பல இடங்களில் நலத்திட்டங்கள் வழங்க கலந்து கொள்கிறார். அதனால்தான், `தன்னார்வலர்களுக்குத் தடை’ என்பது தனக்கு வைக்கப்பட்ட செக் என நினைத்து வழக்கு போடச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘நிவாரணப் பொருள்கள் வழங்குவதை ஒருங்கிணைக்கிறாராமே வைகோவின் வாரிசு?’’

‘‘தி.மு.க–வில் வாரிசு அரசியலை காரணம் காட்டி தனி இயக்கம் கண்ட ம.தி.மு.க–விலும் வாரிசு தலையீடு தொடங்கியுள்ளது என்கிறார்கள் ம.தி.மு.க-வினர். கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், தமிழகம் முழுக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.தி.மு.க சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கவும், தினமும் மூவாயிரம் பேருக்கு உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டு, தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்களாம். இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு துரை வைகோ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் நிவாரணப் பொருள்கள் வழங்க தடைவிதித்தது தமிழக அரசு. இந்த உத்தரவை வைகோ கடுமையாக விமர்சித்ததற்கு இதுவும் முக்கிய காரணமாம்.’’

‘‘ஓ! வைகோவின் மகன் பெயர் துரை வையாபுரிதானே... நீர் துரை வைகோ என்கிறீரே?’’

துரை வையாபுரி
துரை வையாபுரி

‘‘வைகோவின் மகன் பெயர் துரை வையாபுரிதான். ஆனால், அவரை வைகோவின் வாரிசாக அடையாளப்படுத்த விரும்பும் ம.தி.மு.க-வினர், அவரை துரை வைகோ என்று அழைப்பதுடன் போஸ்டர், கட்சி தீர்மானம் என அனைத்திலும் துரை வைகோ என்றே குறிப்பிடுகின்றனர். தன் வாரிசு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று வைகோ சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது அவருடைய நிலைப்பாடு மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள். ம.தி.மு.க-வுக்கு உள்ள பல்வேறு சொத்துகளும் `வை.கோபாலசாமி, பொதுச்செயலாளர், ம.தி.மு.க’ என்ற பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளதும் அவருடைய வாரிசு களமிறங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்’’ என்ற கழுகார், திரையில் இருந்து மறைந்தார்.

டி.என்.பி.எஸ்.சி-க்கு புதிய தலைவர்!

டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவராக பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள டி.என்.பி.எஸ்.சி-க்கு இவரை நியமித்ததற்குப் பின்னால், வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்கிறார்கள். ஸ்ரீதர் வாண்டையாருக்கு உறவினரான இவர், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. கொரோனா விவகாரம் முடிந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி-யில் காலியாக உள்ள உறுப்பினர்களின் பணியிடங்களையும் நியமிக்க இருக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு