Published:Updated:

மிஸ்டர் கழுகு: “சசிகலா பேசியது என்ன?” மனம் திறந்த ரஜினி!

ரஜினி - அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - அண்ணாமலை

ரஜினி - பா.ஜ.க தலைவர் சந்திப்புதானே... டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் நடந்த இந்தச் சந்திப்பின்போது பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியிருக்கிறது

கையில் மஞ்சப்பையுடன் என்ட்ரி கொடுத்த கழுகார், ஸ்வீட் பாக்ஸ்களை எடுத்து டேபிளில் அடுக்கினார். நமது நமுட்டுச் சிரிப்பைப் பார்த்தவர், “உமது சிரிப்புக்கு அர்த்தம் புரிகிறது... கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர் ஒருவர் கொடுத்த கேக், ஸ்வீட் பாக்ஸ்கள் இவை... வெறும் பிளம் கேக், லட்டுகள்தான் உள்ளே இருக்கும்” என்றபடி இனிப்பு வகைகளைப் பரிமாறிக்கொண்டே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. அவரது பெயரில் தொகுதி முழுக்க வசூல் வேட்டை நடப்பதாக 28.11.2021 தேதியிட்ட இதழில் செய்தி வெளியிட்டிருந்தீர் அல்லவா... கட்டுரை வெளியானதுமே மாரி, உதயசூரியன் ஆகிய இரு வட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட... அதற்கு வசூல் வேட்டைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. அந்தச் செய்திக்காக ஜெ.கருணாநிதியிடம் உமது நிருபர் பேசியபோதுகூட, ‘சாலையோர வியாபாரிகள் சங்கத்துல கருணாநிதின்னு யாரோ இருக்காங்கபோல... அவங்க வசூல் பண்றதை நான்னு நினைச்சுக்கிட்டு எல்லாரும் என்னைத் தப்பா நினைக்குறாங்க’ என்றெல்லாம் சொல்லியிருந்தார். ஆனால், அந்தக் கருணாநிதியோ உடல்நலமில்லாமல் சிறுநீர்ப் பையைப் பிடித்தபடி சக்கர நாற்காலியில் வலம்வருபவராம்.’’

‘‘அடப்பாவமே..!”

ஜெ.கருணாநிதி, ராஜா அன்பழகன்
ஜெ.கருணாநிதி, ராஜா அன்பழகன்

‘‘கட்டுரை வெளியானதும் சித்தரஞ்சன் சாலையிலிருந்து கடுமையான டோஸ் விழுந்ததோடு, ‘வசூலில் ஈடுபடுவது யார்?’ என்றும் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான், வட்டச் செயலாளர்கள் பெயர்களைப் போட்டுக்கொடுத்திருக்கிறார் ஜெ.கருணாநிதி. இவர்கள் இருவரும் மறைந்த ஜெ.அன்பழகனுக்கு நிழலாக வலம்வந்தவர்கள்; இப்போதும் அவரின் மகன் ராஜா அன்பழகனுடன்தான் இருக்கிறார்கள். ஜெ.கருணாநிதிக்கும், ராஜா அன்பழகனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியைக் கேட்டு ராஜா எவ்வளவோ முட்டிப்பார்த்தும், ஜெ.கருணாநிதி அதைத் தட்டிச் சென்றுவிட்டார். ஏற்கெனவே இந்தப் பஞ்சாயத்து நீடித்த நிலையில், தற்போது தன் ஆதரவாளர்களைக் கட்சித் தலைமையிடம் போட்டுக்கொடுத்து பதவியைப் பறித்திருப்பதால், கடுப்பான ராஜா அன்பழகன் தரப்பு, ஜெ.கருணாநிதிக்கு எதிராக அறிவாலயத்தில் பெரிய புகார்ப் பட்டியலே அளித்துள்ளதாம். விரைவில் வேறு ரூபத்தில் ஜெ.கருணாநிதிக்குச் சிக்கல் வெடிக்கும் என்கிறார்கள்.’’

‘‘நிழல் அண்ணாமலையும், நிஜ அண்ணாமலையும் சந்தித்து என்ன பேசினார்களாம்?’’

‘‘ரஜினி - பா.ஜ.க தலைவர் சந்திப்புதானே... டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் நடந்த இந்தச் சந்திப்பின்போது பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியிருக்கிறது. அப்போது ரஜினி, ‘சசிகலா என்னிடம் கால் மணி நேரம், ஒரு மணி நேரம் பேசியதாகச் செய்திகள் வந்தன. உண்மையில், அவர் என்னிடம் இரண்டரை மணி நேரம் பேசினார். அ.தி.மு.க கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், ஒற்றைத் தலைமையின்கீழ் மீண்டும் கட்சியைக் கொண்டுவருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பேசினார். டெல்லி மனதுவைக்காமல் இது நடக்காது என்றும் சொன்னார்’ என்று பேசினாராம். அந்தச் சந்திப்பின் தாக்கம்தான், அண்ணாமலையை ‘எல்லோரும் இணைந்த பலமான அ.தி.மு.க வேண்டும்’ என்று கூறவைத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-விலிருந்து எதிர்ப்பு கிளம்பவே, ‘அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று மழுப்பிவிட்டார் அண்ணாமலை.”

மிஸ்டர் கழுகு: “சசிகலா பேசியது என்ன?” மனம் திறந்த ரஜினி!

‘‘ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது என்கிறார்களே!”

உமது அத்தனை புதிர்களுக்கும் எம்மிடம் விடை இருக்கிறது. பன்னீரைத்தானே கேட்கிறீர்கள்... ஆமாம், உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பதால் மீண்டும் விசாரணையைத் தொடங்க ஆயத்தமாகிவருகிறார் ஆறுமுகசாமி. ஆணையம் அமைக்கப்பட்டபோது அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததால், துணை முதல்வராக இருந்த பன்னீர் ஆணையத்தில் ஆஜராகாமல் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தார். தற்போது தி.மு.க ஆட்சியில் இருப்பதால், ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. முதலில் சசிகலா, இளவரசி இருவருக்கும்தான் சம்மன் அனுப்பப்படும் என்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து பன்னீர், எடப்பாடி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படுமாம். ஏற்கெனவே அ.தி.மு.க காலத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை நீக்கிவிட்டு, புதிதாக தி.மு.க சார்ந்த வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இது பற்றியெல்லாம் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்’’ என்ற கழுகாருக்கு சூடாக கிரீன் டீயைக் கொடுத்தோம். உறிஞ்சியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை குறித்து சமீபத்தில் மத்திய உளவுத்துறை அலசியுள்ளது. இதில், கொடநாடு வழக்கில் எடப்பாடியைச் சிக்கவைக்க உருப்படியான ஆதாரங்களும் ஆவணங்களும் தமிழக போலீஸ் வசம் சிக்கவில்லை என்று தெரியவந்ததாம். இந்தத் தகவலை அப்படியே டெல்லி மேலிடத்துக்கு பாஸ் செய்திருக்கிறது மத்திய உளவுத்துறை. இந்தச் சூழலில், கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமனை விசாரணைக்கு அழைத்த போலீஸ், டிசம்பர் 22-ம் தேதி கோவையில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரித்துள்ளது. போலீஸாரின் கேள்விகளுக்கு, ‘எனக்கு எதுவும் தெரியாது... நினைவில் இல்லை’ என்றரீதியிலேயே பதிலளித்திருக்கிறார் விவேக். இதனால் கடுப்பிலிருக்கிறது போலீஸ்!’’

‘‘விவரமான மனிதர்தான்!”

‘‘சம்பவம் நடந்து ஐந்தாண்டுகளைக் கடந்தும் இப்போதுவரை ‘அங்கு கொள்ளையடிக்கப்பட்ட முக்கியமான பொருள் என்ன?’ என்பது புதிராகவே இருக்கிறது. எதிர்பார்த்த துப்பு சிக்காததாலேயே, சசிகலா குடும்பத்தினரை விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதலில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியதாகவும், அப்போது அவர் சிறையில் இருந்ததால் வழக்கறிஞர்கள் மூலம் பேசி விவேக் ஆஜரானதாகவும் சொல்கின்றனர். கொடநாடு எஸ்டேட் நிலம் ஆரம்பத்தில் விவேக் பெயரில்தான் வாங்கப்பட்டதாகத் தகவல் உள்ளது. கொடநாடு சம்பவத்துக்குச் சில மாதங்களுக்கு முன்புகூட, விவேக் அங்கு சென்றுள்ளாராம். இ்தையெல்லாம் மனதில் வைத்துத்தான் விசாரணையை நடத்தியிருக்கிறது காவல்துறை.’

‘‘மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறதே!”

சண்முகநாதன் - மு.க.ஸ்டாலின்
சண்முகநாதன் - மு.க.ஸ்டாலின்

‘‘ஆமாம். முதல்வர் ஸ்டாலின் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்திருக்கிறார். அதேசமயம், கடைசி நேரத்தில் சண்முகநாதன் மனதில் சில வருத்தங்கள் குடிகொண்டிருந்தன என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். ‘நான் உதவியாளராகச் சேர்ந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. தலைவர் இருந்திருந்தால் எனக்குப் பொன்விழாவை நடத்தியிருப்பார்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருந்தாராம். ஆனாலும், அவரின் குடும்பத்தினர் இதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஸ்டாலினின் அஞ்சலி அறிக்கையைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார்கள்.”

“மாஜி அமைச்சர் ஒருவரைப் போட்டு நெருக்குகிறார்களாமே?’’

‘‘முன்னாள் அமைச்சர் வீரமணி சங்கதிதானே... கடந்த சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்குச் சில நாள்களுக்கு முன்பாக பதிவுத்துறையில் 165 அலுவலர்களை சார் பதிவாளர்களாகப் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார் வீரமணி. இதற்காக வீரமணி தரப்பு வெயிட்டாக ஸ்வீட் பாக்ஸ்களைப் பெற்றதாம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த விவகாரத்தைத் தோண்டிய துறையின் உயரதிகாரி, அந்த 165 பேரின் பதவி உயர்வை ரத்துசெய்துவிட்டாராம். பதவியைப் பறிகொடுத்தவர்கள் இப்போது வீரமணியை நெருக்கவே... என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், பதற்றத்தில் இருக்கிறாராம்!”

‘‘ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் அளித்த பட்டியலும் மாற்றப்பட்ட சேதி தெரியுமா?’’

‘‘ம்ம்... என் காதுக்கும் அந்தத் தகவல் வந்தது. சமீபத்தில் போக்குவரத்துத்துறையில் உள்ள வழக்குகளைக் கையாள 120 வழக்கறிஞர்கள் பட்டியலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அந்தப் பட்டியலை அப்படியே ஓரமாகத் தூக்கிவைத்துவிட்டு, துறைச்செயலாளர் மூலம் புதிய பட்டியலை வாங்கி அவர்களை நியமித்துவிட்டதாம் முதல்வர் அலுவலகம். இதனால் அப்செட் ஆன அமைச்சர் தரப்பு, பட்டியலை மாற்றியதுபோல தனது பதவியை மாற்றாமல்விட்டார்களே என்று ஆறுதல்பட்டுக்கொண்டதாம்!” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* நீண்டகாலத் தடைக்குப் பிறகு மீண்டும் விசாரணையைத் தொடங்கவிருக்கிறார் கடவுள் பெயர்கொண்டவர். இதில் பெண் தலைவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறதாம். ஒருவேளை விசாரணை சற்று திசைமாறிச் சென்றாலும், விசாரிக்கும் இடத்திலிருப்பவர், முன்பு ஒரு ஆப்ளிகேஷனுக்காக தங்கள் தரப்பினரை நேரில் சந்தித்த வீடியோவையும், கொடுத்த கடிதத்தையும் வெளியிடத் தயாராக இருக்கிறதாம் பெண் தலைவர் தரப்பு.

* சென்னை அண்ணாநகர் பிரமுகருக்கு நெருக்கமான, சிவன் பெயர்கொண்ட கட்சிப் பிரமுகர் ஒருவரின் ஆட்டம் தாங்க முடியவில்லை என்கிறார்கள். பிரமுகரின் பெயரைச் சொல்லி தொகுதிக்குள் கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல், 24 மணி நேரமும் சட்டவிரோத பார் என வசூலில் கொழிக்கிறாராம். விவகாரம் பெரிதாவதால், அண்ணாநகர் பிரமுகரின் பெயர்தான் ரிப்பேர் ஆகிறது என்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.