Election bannerElection banner
Published:Updated:

``பழனிசாமி ஆட்சி கவிழாமல் இருக்க உதவினேன்; இப்போது என்னை ஏமாற்றிவிட்டனர்" - அதிமுக எம்எல்ஏ ஆவேசம்

பேட்டியளிக்கும் கீதா
பேட்டியளிக்கும் கீதா ( நா.ராஜமுருகன் )

என்னை கடைசி வரை, கரூர் மாவட்ட செயலாளராக உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'உங்களுக்கு மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவேன்' என்று கூறி, ஏமாற்றி விட்டார்.

கரூர் மாவட்டத்திலுள்ள, கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2016 - ம் தேர்தலில் வெற்றி பெற்றவர் கீதா. நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை. மாறாக, கரூர் அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபாரிசின் பேரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா, கரூர் காந்திகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கீதா (கிருஷ்ணராயபுரம் (தனி) எம்.எல்.ஏ)
கீதா (கிருஷ்ணராயபுரம் (தனி) எம்.எல்.ஏ)
நா.ராஜமுருகன்

"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் இருந்து மிரட்டப்பட்டேன். ஒரு பெண் என்றும் பாராமல் என்னை கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். இருப்பினும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும், அவருக்குப் பிறகு நூறாண்டுகள் கடந்தும் அ.தி.மு.க ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு ஆதரவளித்து வாக்களித்தேன். இப்படி, என்னைப்போல் வாக்களித்த மகளிர் சட்டபேரவை உறுப்பினர்களுக்கு தற்போது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மீண்டும் வழங்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. எதனால் எங்களுக்கு சீட் வழங்கப்படவில்லை?. அ.தி.மு.கவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மகளிர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் நான் இந்த கேள்வியை எழுப்புகிறேன்.

'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

அவர்களிடம் கேட்டால், 'உங்களைப் பற்றி எடுக்கப்பட்ட ரிப்போர்ட் சரியில்லை' என்று சொல்கிறார்கள். ஆனால், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எங்கு போய் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். என்னைப்பற்றி நல்லவிதமாகவே சொல்வார்கள். 'எளிமையான எம்.எல்.ஏ, எல்லோரும் அணுகலாம், தொகுதியே கதி என்று செயல்பட்டார்' என்றுதான் சொல்வார்கள். ஆனால், என்னைப்பற்றி மட்டுமல்லாது, என் கணவர் மணிவண்ணன் பற்றியும் ரிப்போர்ட் எடுத்துள்ளார்கள். 'உங்க கணவர் குற்றச்செயல்களில் ஈடுப்படார்' என்று சொல்கிறார்கள். நான் எம்.எல்.ஏவா, என் கணவர் எம்.எல்.ஏவா? என் கணவர் பற்றி ஏன் விசாரிக்க வேண்டும்? என் கணவர் என்ன குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதை சொல்லச் சொல்லுங்கள். கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினராக நான் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

என்னை கடைசி வரை, கரூர் மாவட்ட செயலாளராக உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'உங்களுக்கு மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவேன்' என்று கூறி, ஏமாற்றி விட்டார். நல்ல சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டேன். அரசு பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அவர்களுக்கு உதவியாக இருந்தேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல், கரூர் மாவட்டத்தில் குற்றப்பின்னணி உள்ள ஒருவருக்கு கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எனக்கே, இந்த நிலைமை என்றால், அ.தி.மு.கவில் உள்ள சாதாரண தொண்டர்களுக்கு என்ன நிலைமை என்பதை தலைமை விளக்க வேண்டும்.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம்
நா.ராஜமுருகன்

சீட் தராமல் ஏமாற்றிவிட்டு, கடந்த இரண்டு நாள்களாக யார் யாரையோ விட்டு என்னிடம் பேசி, 'கட்சியை விட்டு போகவேண்டாம்' என்று கேட்க வைக்கிறார்கள். நான் அம்மாவுக்கு துரோகம் பண்ணமாட்டேன். சுயேச்சையாக நிற்கமாட்டேன். ஆனால், தி.மு.கவுக்கு போறேனோ, அ.ம.மு.கவுக்கு போறேனோ அல்லது அ.தி.மு.கவிலேயே இருப்பேனா என்பதை இன்னும் இரண்டு நாள்களில், ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அறிவிப்பேன்" என்றார்.

இந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் சிலர், "கீதா உறுதியாக கட்சி மாற முடிவெடுத்துவிட்டார். தி.மு.க-வுக்கு போவதா அல்லது அ.ம.மு.க-வுக்கு போவதா என்பது மட்டும் தான் அவரின் இப்போதைய குழப்பம். ஆனால், அ.ம.மு.கவில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதனால், கீதா அ.ம.மு.க செல்லவே அதிகம் வாய்ப்பிருக்கிறது" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு