Election bannerElection banner
Published:Updated:

``தளபதியிடம் பேசினேன்; திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதையும் சொன்னேன்!” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன் ( Photo: Vikatan )

`வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகராகும் வாய்ப்பு சுப்புலட்சுமிக்கு கிடைக்கப் போகிறது’ என்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில், தற்போதைய தேர்தல் தோல்வி குறித்து சுப்புலட்சுமியிடம் பேசினோம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அப்போது பல தொகுதிகளில் மாறி மாறி வந்த முன்னணி நிலவரங்கள், வேட்பாளர்களின் இதயத் துடிப்பை எகிறச்செய்தன. கோவை தெற்கு, காட்பாடி தொகுதிகளின் வரிசையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியும் பரபரப்பாக உற்றுநோக்கப்பட்டது. தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், பா.ஜ.க சார்பில் டாக்டர் சரஸ்வதியும் அந்தத் தொகுதியில் பிரதான வேட்பாளர்களாகக் களம் கண்டனர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

இருவரும் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் சரஸ்வதி வெற்றி பெற்றார். `வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகராகும் வாய்ப்பு சுப்புலட்சுமிக்கு கிடைக்கப் போகிறது’ என்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில், தற்போதைய தேர்தல் தோல்வி குறித்து சுப்புலட்சுமியிடம் பேசினோம்.

``மொடக்குறிச்சி தொகுதி முழுக்கவே விவசாயிகள் நிறைந்த பகுதி. பாசன வசதிகள் இருப்பதால், இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் ஏராளமானோர் விவசாயக் கடன் வாங்கியிருந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பாக, `விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ எனத் தமிழக முதல்வர் அறிவித்தார். இதனால், விவசாய மக்கள் பலரும் பயனடைந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய வாக்காளர்கள் பெரும்பாலானோர் அ.தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த பா.ஜ.க-வுக்கு வாக்களித்துள்ளனர்.

ஸ்டாலின் உடன் சுப்புலட்சுமி
ஸ்டாலின் உடன் சுப்புலட்சுமி
Photo: Vikatan

எனவே, பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. அதேநேரம், ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் பெருவாரியான மக்கள் எனக்கும் வாக்களித்தனர். என்னுடைய வெற்றியைத் தடுக்க முன்கூட்டியே சில மோசடி வேலைகள் நடந்துள்ளன. என்னுடைய தொகுதியில் 2,600 தபால் வாக்குகள் பதிவாகின. அதில், 571 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதில், 350 வாக்குகள் எனக்குப் பதிவானவை.

தபால் வாக்களிக்கும் கவரில், உறுதிப்படிவம் (confirmation letter) ஒன்று இருக்கும். அதில் வாக்காளர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். அந்தப் படிவத்தில் குறிப்பிடப்படும் நான்கு இலக்க எண்ணும், வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு இலக்க எண்ணும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டு எண்களும் மாறுபட்டு இருந்தால் அந்தத் தபால் வாக்கு செல்லாது. பெரும்பாலும் இந்த எண்களை அதிகாரிகள்தான் குறிப்பிடுவார்கள். ஆளும் கட்சியுடன் சேர்ந்து, என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே சில அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

அதன்படி, மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரித்த சில அதிகாரிகள், வாக்குச்சீட்டில் இருக்கும் எண்ணை உறுதிப்படிவத்தில் எழுதாமல், மனம் போன போக்கில் மாறுபட்ட இலக்க எண்களாக எழுதியிருந்தனர். எனக்குப் பதிவாகியிருந்த 350 வாக்குகளில் இப்படி மாறுபட்ட எண்களை எழுதி, அவற்றையெல்லாம் செல்லாத வாக்குகளாக மாற்றிவிட்டனர். இதையெல்லாம் நேற்று கண்கூடாகப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

தபால் வாக்குகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். இது தொடர்பாக நீதி கேட்டு நீதிமன்றம் செல்லப்போகிறோம். தற்போதைய காலச்சூழலில் உடனடியாக சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது. எனவே, என்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேநேரம், சில அதிகாரிகளின் இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்கக்கூடாது. இதுபோன்று தவறு செய்யும் அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் வகையில் புதிய திருத்தங்கள் உருவாக நிச்சயம் போராடுவேன்” என்றவர், கின்னஸ் சாதனை நிகழ்வாக அமைந்த 1996-ம் ஆண்டு தேர்தல் குறித்துப் பேசினார்.

கருணாநிதி உடன் சுப்புலட்சுமி
கருணாநிதி உடன் சுப்புலட்சுமி
Photo: Vikatan
`25 ஆண்டுகளாகத் தொடரும் சோகம்!' - கோவை மாவட்டத்தில் தி.மு.க படுதோல்விக்குக் காரணம் என்ன?

``அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் நான் போட்டியிட்டேன். எங்கள் கட்சியிலேயே என் வெற்றியைத் தடுக்க சிலர் திட்டமிட்டனர். அப்போது 250 ரூபாய்தான் டெபாசிட் தொகை. தேர்தலை நிறுத்துவதற்காக ஆயிரம் பேரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்தனர். தேர்தல் களமே அதிர்ச்சியானது. அத்தனை வேட்பாளர்களுக்கும் வாக்குச்சீட்டு அச்சடிக்க முடியாமல், வாக்குப் புத்தகமே அச்சடிக்கப்பட்டது. பெயர் அடிப்படையில், எனது பெயரும் சின்னமும் அந்தப் புத்தகத்தின் 25-வது பக்கத்தில் இடம்பெற்றது. இதே மொடக்குறிச்சி தொகுதி மக்கள், அவ்வளவு சிரமமான தேர்தல் முறையிலும் துல்லியமாக எனக்கு வாக்களித்து 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தனர். அப்போது மூன்றாவது முறையாக அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அதை ஏற்க மறுத்தேன்.

அதன் பிறகு மீண்டும் அதே தொகுதியில் தோல்வி கண்டேன். ஆனால், அதன் பிறகு மத்திய அமைச்சராகவும் ஆனேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் தொகுதி நிலவரத்தைப் பொறுத்து மக்களின் மனநிலை மாறும். ஆனால், மக்களின் உண்மையான எண்ண ஓட்டத்துக்கு மாறாக, இதுபோன்று குறுக்கு வழியில் என்னைத் தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு. எனவே, மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை. சிலரின் சூழ்ச்சியால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோதே எங்கள் கட்சித் தலைவர் தளபதிக்கு போன் செய்தேன். `முடிந்தவரையில் நம்முடைய நியாயமான வெற்றிக்குப் போராடுங்கள்’ என்றார். விரைவில் அவரைச் சந்தித்துப் பேசுவேன்.

சுப்புலட்சுமி சுப்புலட்சுமி
சுப்புலட்சுமி சுப்புலட்சுமி
சுப்புலட்சுமி ஜெகதீசன்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

இதற்கிடையே, `சபாநாயகராகும் முதல் பெண்’ என்று தேர்தல் முடிவுக்கு முன்பு சிலர் எனக்கு வாழ்த்து சொன்னார்கள். இதெல்லாம் சிலர் யூகமாகச் சொன்னது. அதைக் கேட்டு அமைதியாகச் சிரித்தேன். அரசியல் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தில், மீண்டும் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றுவேன். இதே மக்கள் தங்களுக்கான தேவைகளுக்கு என்னை நாடிவருவார்கள். அவர்களே அடுத்த தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்யவும் வாய்ப்புள்ளது. நான் தோல்வி அடைந்தாலும், தளபதியும், எங்கள் கட்சியும் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது” என்று முடித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு