Published:Updated:

பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கி... பயணத்தை ரத்துசெய்கிறாரா, மோடி?

பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தன் துருக்கி பயணத்தை ரத்துசெய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 பிரதமர் மோடியுடன் துருக்கி அதிபர் எர்டோகன்
பிரதமர் மோடியுடன் துருக்கி அதிபர் எர்டோகன்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதலே, பாகிஸ்தான் உலக நாடுகளை இந்தியாவுக்கு எதிராகத் திரளவைக்க முயன்றது. அதில், பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்கவில்லை. வளைகுடா நாடுகளே ஆதரவு அளிக்காத நிலையில் துருக்கி, மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவைத் தெரிவித்து கருத்து வெளியிட்டன. கடந்த மாதத்தில், நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன், காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசி இந்தியாவின் கோபத்துக்கு ஆளானார்.

மோடி மற்றும் எர்டோகன்
மோடி மற்றும் எர்டோகன்

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து சிக்கலில் சிக்கியுள்ள பாகிஸ்தானை Financial Action Task Force (FATF) அமைப்பின் நடவடிக்கையிலிருந்து காப்பாற்றவும் எர்டோகன் முயன்று வருகிறார். இதுவும், மத்திய அரசுக்கு துருக்கி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வரும் 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார். அங்கு, நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இரு நாள்கள் சுற்றுப்பயணமாக துருக்கி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தன் துருக்கி பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், `காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக நாடுகள் தங்கள் கவனத்தை காஷ்மீர் பக்கம் திருப்ப வேண்டும் ' எனவும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியா மீது குற்றம்சாட்டியிருந்தார். எர்டோகனின் பேச்சுக்குப் பிரதமர் மோடி பதில் கூறவில்லை.

மாறாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் துருக்கி அதிபருக்கு கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது. `காஷ்மீர் விவகாரத்தை அதனடிப்படையில் இருந்து புரிந்துகொண்டு பேச வேண்டும். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். துருக்கி பேசுவது சரியில்லை' என்று இந்தியா தரப்பில் எர்டோகனுக்குக் கடும் பதிலடி தரப்பட்டது.

பாகிஸ்தானுக்கு கடற்படை கப்பல் கட்டும் துருக்கி
பாகிஸ்தானுக்கு கடற்படை கப்பல் கட்டும் துருக்கி

இதற்குப் பிறகு துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசவில்லை. ஏற்கெனவே, துருக்கி - பாகிஸ்தான் கடற்படைக்காக MILGEM ரக போர்க்கப்பல்களைத் தங்கள் நாட்டில் கட்டிவருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்தக் கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. பாகிஸ்தானை தொடர்ச்சியாகத் தங்களிடம் ஆயுதங்கள், கப்பல்கள் வாங்க வைப்பதற்காகவே, துருக்கி அதிபர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுகிறார்.

இதனால், எர்டோகனின் இந்தியா குறித்த பேச்சுகளுக்கு முடிவுகட்டும் விதத்தில், பிரதமர் துருக்கி பயணத்தை ரத்துசெய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், `பிரதமரின் துருக்கி பயணம் இறுதி செய்யப்படாததாகவே இருந்தது. அப்படியிருக்கையில், ரத்து என்கிற பேச்சு எங்கேயிருந்து வந்தது' என மறுத்துள்ளார்.

அதேவேளையில், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த மலேசியாவுக்கு வேறு விதத்தில் மத்திய அரசு பதிலடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, `இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் அரசுடன் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். மலேசியப் பிரதமரின் கருத்து, மத்திய அரசைக் கோபப்படுத்தியுள்ளது. விளைவாக, மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்களைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

முதல் கட்டமாக பாமாயில் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 9 மில்லியன் டன் பாமாயில் இறக்குமதி செய்கிறது. மலேசிய பாமாயில் போர்டு புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு 3.9 மில்லியன் டன் பாமாயிலை அந்த நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

பாமாயில் விதைகள்
பாமாயில் விதைகள்

மலேசிய பிரதமரின் காஷ்மீர் குறித்த பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதியைக் குறைத்துவிட்டு, இந்தோனேசியாவிடமிருந்து பாமாயில் அதிகளவில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவும் இந்தியாவின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் பாமாயிலை அதிகளவில் தர ஆர்வத்துடன் இருக்கிறது. சர்க்கரைக்கு மாற்றாக, பாமாயிலை தரவும் இந்தோனேசியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவும் இஸ்லாமிய நாடுதான். ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காமல் நடுநிலையாக உள்ளது. அதேபோல், துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதியைக் குறைக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளது.

`உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா. வாங்கும் சக்தி எங்களுக்கு அதிகம். இந்தியாவைப் பகைத்துக்கொண்டால் உங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும்' என்பதை உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, பாகிஸ்தான் ஆதரவு நாடுகளுக்கு எதிராக மறைமுகப் பொருளதாரப் போரை இந்தியா தொடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டபோது, `இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தை என்பதால் வளைகுடா நாடுகள்கூட எங்களுக்கு ஆதரவு தர மறுக்கின்றன' என்று பாகிஸ்தான் புலம்பியது நினைவுகொள்ளத்தக்கது.

370 முதல் 371 வரை: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் ஒரு பார்வை!