Published:Updated:

சிக்கலில் `சில்க்’ பிரமுகர்... முதல்வரின் தனிப்பிரிவு முடக்கம்... சரக்கு மெகா சேல்ஸ்... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார்
கழுகார்

ஹேங்அவுட்ஸ் ஸ்கிரீனில் தோன்றிய கழுகார், ``அடுத்தடுத்த மீட்டிங்குகள் உள்ளன. வாட்ஸ் அப்பில் தகவல்களைத் தட்டிவிடுகிறேன், பாரும்” என்றபடி லீவ் ஆனார். அடுத்தடுத்த விநாடிகளில் சுடச்சுட வந்துவிழுந்தன செய்திகள்.

`படியளப்பு’ பரிவர்த்தனை கண்ணைக் கசக்கும் வேளாண் ஊழியர்கள்!

ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தி 33 சதவிகித பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களை நடத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், சென்னையில் நந்தனம் வேளாண் பொறியியல் துறையில் மட்டும் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில் எப்படி அலுவலகத்துக்கு வருவது என்று பணியாளர்கள் புலம்புகிறார்கள். விஷயத்தைத் தோண்டினால், ``துறையில் 79 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர் பதவி உயர்வு அளிக்கும் கோப்புகள் உட்பட பல பதவி உயர்வு கோப்புகள் தேங்கியிருக்கின்றன. இவை அனைத்துக்கும் `படியளப்பு பரிவர்த்தனைகள்’ கொரோனா காலத்துக்கு முன்பேயே செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டன. பரிவர்த்தனை பார்ட்டிகள் இப்போது பதவி உயர்வுக்கு நெருக்குகிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு முடிவு” என்கிறார்கள் துறையின் உள்விவரம் அறிந்தவர்கள்.

முடங்கியதா முதல்வரின் தனிப்பிரிவு?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்களின் குறைகளைச் சொல்லும் முதலமைச்சரின் தனிப் பிரிவு, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மக்கள் அளிக்கும் புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்து, கோரிக்கையை ஒரு மாதத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து அதுகுறித்த பதிலை புகார்தாரருக்கு அனுப்புகிறது தனிப் பிரிவு. கடந்த சில மாதங்களாகத் தனிப் பிரிவுக்கு வரும் புகார்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லையாம். கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்ட புகார்கள்குறித்து தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை எனப் புலம்பல்கள் கேட்கின்றன. அதனால், முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேரடியாகப் புகார்களைத் தட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அமைச்சர் தொகுதியில் பிரசாரம் ஸ்டார்ட்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கொரோனா நிவாரணமாக 22 பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பை ஒரு பெட்டியில் அடைத்து தனது தொண்டாமுத்தூர் தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொண்டு சேர்த்து வருகிறார். ``இவையெல்லாம் அமைச்சரோட சொந்த செலவுல பண்றாருங்க. இரண்டாவது ரவுண்டும் கொடுப்போம். எதையும் மறந்துறாதீங்க... ஞாபகம் வெச்சுக்கோங்க” என்று அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இப்போதே பிரசாரம் செய்துவருகின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

ரேஷன்... கமிஷன்... புள்ளி!

ரேஷன் கடைகள்மூலம் வழங்கப்பட்ட 500 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் கொள்முதலிலும் குளறுபடிகள் என்று முணுமுணுப்பு கேட்கிறது. 600 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை 500 ரூபாய்க்குக் கொடுப்பதாக அரசு சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், ``அதன் உண்மையான மதிப்பு 400 ரூபாய்க்குள்தான் இருக்கும்’’ என்கிறார்கள் கூட்டுறவுத்துறை ஊழியர்கள். ``இந்தப் பொருள்களை மாவட்ட வாரியாகக் கொள்முதல் செய்திருந்தால், செலவுகள் மேலும் குறைந்திருக்கும். அதைவிடுத்து, சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம்மூலம் கொள்முதல் செய்ததிலேயே தெரியவில்லையா, இதிலிருக்கும் உள்குத்து வேலைகள்’’ என்று முணுமுணுக்கிறார்கள் அவர்கள். இதில் கமிஷன் பார்த்தவர்களைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறது எதிர் தரப்பு.

வைத்திலிங்கம் எங்கே?

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் ராஜ்ய சபா எம்.பி-யுமான வைத்திலிங்கம் கொரோனா காலத்தில் வெளியே எங்கும் தலை காட்டவில்லையாம். அவர் தஞ்சாவூரில் இருக்கிறாரா, சென்னையில் இருக்கிறாரா தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் முக்கிய நிர்வாகிகள். பல நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை வரவழைத்து, அவர் தலைமையில் நிவாரண உதவிகளைத் தஞ்சை மாவட்டத்தில் செய்ய நினைத்தனர். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் தாங்களாகவே உதவிகளைச் செய்து வருகின்றனர். அதிலும் புதிய பிரச்னை முளைத்துள்ளது. தன்னிச்சையாகச் செயல்படுவோர்மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் தரப்பில் திட்டமிடப்படுகிறதாம். ``வைத்திலிங்கமும் வெளியே வரமாட்டார். மற்றவர்கள் செய்தாலும் பிரச்னை என்றால் கட்சி எப்படி வளரும்’’ எனப் புகார் வாசிக்கிறார்கள் கட்சியினர்.

``ஓட்டுரிமை இல்லாதவர்களுக்கு நிவாரணம் இல்லையா?”

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை போட்டிப் போட்டு வழங்கிவருகிறார்கள். இருவரும் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று வெளியில் தெரிந்தாலும், நெருங்கி விசாரித்தால் இருவரது `வாக்கு அரசியல்’ வெளிச்சத்துக்கு வருகிறது. அ.தி.மு.க-வுக்கு கண்டிப்பாக வாக்களிக்கும் பட்டியலில் இருக்கும் மக்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தி.மு.க-வுக்கு உறுதியாக ஓட்டு போடும் குடும்பங்களுக்கு செந்தில் பாலாஜியும் உதவுகிறார்களாம். ராயனூர் மற்றும் இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாம்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இருவரும் உதவிகள் வழங்கவில்லை. காரணம் அவர்களுக்கு ‘வாக்குரிமையே இல்லை’ என்பதுதானாம்!

நிவாரண உதவி... ஓசூர் காவல்துறை பாரபட்சம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து உணவுக்காகத் தவித்து வருகிறார்கள். அவர்களுக்குத் தி.மு.க சார்பில் பல்வேறு நிர்வாகிகளும் நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்கள். ஆனால், ``அ.தி.மு.க முக்கிய தலைகள் ஒவ்வோர் இடத்திலும் தலையிட்டு, நிவாரணப் பணிகளை வழங்கும் தி.மு.க-வினர் மீது பொய்வழக்கு போடுவது உள்ளிட்ட இடையூறுகளைச் செய்து வருகிறார்கள்” என்று புகார் வாசிக்கிறார்கள் உடன்பிறப்புகள். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ``சில நாள்களுக்கு முன்பு முன்னாள் ஓசூர் நகர மன்றத் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள். உடனே மாதேஸ்வரன் உட்பட ஐந்து பேர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதேசமயம், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கும்போது போலீஸார் முன்னின்று பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்” என்கிறார்கள்.

இனோவா என்னாச்சு... ரேஞ்ச் ரோவர் வந்தாச்சு! பன்னீர்செல்வத்தின் கார் கதை!

அம்மா உணவகத்தில் அரசல் புரசல்சிணுங்கல் சிக்கலில் `சில்க்’ பிரமுகர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆளுங்கட்சியின் `மன்ற’ பொறுப்பில் இருக்கும் முக்கியஸ்தர் அவர். மாநில அளவில் `சில்க்’காகவும் ஜொலிப்பவர். கடந்த சில வாரங்களாக அவருக்கு வீட்டில் ஏதோ பிரச்னை என்கிறார்கள். இதனால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலிருக்கும் அம்மா உணவகத்தை வீடு போல பாவித்து தங்க ஆரம்பித்திருக்கிறார். அவர் அங்கே தங்க தொடங்கியதிலிருந்து சிசிடிவி கேமராக்களும் செயலிழந்துவிட்டனவாம்! அம்மா உணவகத்தில் அனைவருக்கும் இட்லி, பொங்கல் வழங்கப்பட்டாலும் இவருக்கு மட்டும் நண்டு சூப், மட்டன் சுக்கா, சிக்கன் ஃப்ரை, வான்கோழி பிரியாணி என்று வகை வகையான கவனிப்பு நடந்துள்ளது. ஆனால், இதனால் எல்லாம் எதுவும் பிரச்னை எழவில்லை. சமீப நாள்களாக உணவகத்தில் சிணுங்கல் சத்தங்களும் வளையல் சத்தங்களும் வருவதாக அரசல் புரசலாகப் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து மே 1-ம் தேதி மதியம் 3 மணிக்கு காஞ்சிபுரம் நகராட்சியின் முக்கிய அதிகாரி ஒருவர் அம்மா உணவகத்துக்கு திடீர் விசிட் அடித்தார். அப்போது எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டிருக்கிறார் `சில்க்’ பிரமுகர். வாரிச்சுருட்டி எழுந்தவர், ``நான் யார் தெரியுமா?” என்கிற ரேஞ்சுக்கு அதிகாரியை மிரட்டி, கட்சியின் மேலிடத்தில் பலருக்கும் போனை போட்டிருக்கிறார். ஒருவழியாக நகராட்சி அதிகாரி பின்வாங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து, அம்மா உணவகத்துக்கு கணிசமான நிதியை நன்கொடை அளித்த அந்தப் பிரமுகர், இப்போது `மாவட்டம்’ வசம் அடைக்கலமாம்!

``கட்சிக்காரரே கைகொடுக்கலை!”

``நம்ம நாகப்பட்டினம் மாவட்டத்துல தி.மு.க-காரன்கூட அவன் கட்சிக்காரங்களுக்கு முடிஞ்சதை செய்றான். கோடி கோடியாய் சம்பாதிச்சு வைச்சிருக்குற மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பர்ஸை திறக்கவே மாட்டேங்குறாரு. குறைந்த பட்சம் சொந்தக் கட்சிக்காரர்களுக்காவது உதவி செய்யணும். அதுகூட செய்யவில்லைனா பதவியும் பணமும் இருந்து எதற்கு?” - இப்படி பகிரங்கமாக விஷயத்தைப் போட்டு உடைத்திருப்பது எதிர்க்கட்சிக்காரர்கள் அல்ல. வேளாங்கண்ணி அ.தி.மு.க அவைத்தலைவரும் முன்னாள் நகரச் செயலாளருமான ராமன்தான்!

`மே 7-ம் தேதி டாஸ்மாக் திறக்கப்படுமா?' - ஒலிக்கும் 'மதுவிலக்கு' கோஷம் அரசுக்கு எட்டுமா? #BanTasmac

சரக்கு மெகா சேல்ஸ் மேளாகரைச்சலில் காரிப்பட்டி காவலர்கள்!

சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அயோத்தியாபட்டிணம்,கூத்தாட்டுப்பட்டியில் பகுதியில் இரண்டு உணவுக்கடைகள் செயல்படுகின்றன. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி காரிப்பட்டி காவல்நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் வந்த எஸ்.ஐ மோகனசுந்தரம், ஏட்டு அருள், போலீஸ் துரை ஆகியோர் அடங்கிய டீம், இந்த இரண்டு கடைகளையும் சோதனையிட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களைக் கைப்பற்றினர். இதுவரைக்கும் எல்லாம் ஓகே. ஆனால், இதன் பிறகுதான் வில்லங்கம் விளையாட ஆரம்பித்திருக்கிறது. ``கைப்பற்றிய சரக்குகளை ஒரு குவாட்டரை 400 ரூபாய் விலைக்கு பல லட்சங்களுக்கு விற்பனை செய்து பங்கு பிரித்துக்கொண்டார்கள்” என்று ஊருக்குள் ஒரு பேச்சு ஓட ஆரம்பிக்கவே, காரிப்பட்டி காவல் நிலையத்தைத் தன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளாராம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கனிக்கர்.

அடுத்த கட்டுரைக்கு