Published:Updated:

மிஸ்டர் கழுகு: மோடி மேஜிக் - நம்பும் ஏ.சி.எஸ்... நடுங்கும் இ.பி.எஸ்!

எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

வேலூர் திகுதிகு

மிஸ்டர் கழுகு: மோடி மேஜிக் - நம்பும் ஏ.சி.எஸ்... நடுங்கும் இ.பி.எஸ்!

வேலூர் திகுதிகு

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

குஷி மூடில் உள்ளே நுழைந்து தன் இருக்கை யில் அமர்ந்த கழுகார், ‘சர்சர்’ரென்று நான்கைந்து முறை இருக்கையோடு சுழன்று ஸ்டைலாக ஒரு பார்வையை வீசினார்.

‘`என்ன இது ‘கோன் பனேகா குரோர்பதி’ அமிதாப் பச்சன் போல செமையாகச் சுழல்கிறீர்கள்?’’ என்றோம்.

``நீர் இப்படிக் கேட்கவேண்டும் என்பதற் காகத்தான். அதாவது, அமிதாப் பச்சனை வேலூரில் இறக்கிவிட்டு, ‘கோன் பனேகா குரோர்பதி’ என்று கேட்க வைத்தால், ‘நான்தான்... நான்தான்’ என்று ஆளாளுக்கு ஓடிவந்து அவரை மொய்த்து விடுவார்கள். அந்த அளவுக்கு கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். மறுபடியும் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் பில் போட ஆரம்பித்துவிட்டனர் பலரும். இதனால், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்போகிறது.’’

‘‘ஏற்கெனவே பணத்தால்தானே பிரச்னை. அ.தி.மு.க-வோ, தி.மு.க-வோ மறுபடியும் பணத்தைக் கையில் எடுப்பார்களா என்ன?’’

‘‘பணமில்லாமல் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். வெளியில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஏற்கெனவே சிக்கியிருந்தாலும் தி.மு.க தரப்பு கொஞ்சம் போல நூல்விட ஆரம்பித்துள்ளது. அவர்களைத்தான் தேர்தல் ஆணையமும் வருமானவரித்துறையும் உன்னிப் பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், ஆளும்கட்சித் தரப்பில்தான் சிக்கல் ஏதுமில்லை. அமோகமாகத் துட்டு விளையாட ஆரம்பித்திருக்கிறது!’’

‘‘ஆளுங்கட்சித் தரப்பில் ஏற்கெனவே நூறு கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகிவிட்டதாமே?’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘இதுவரை 130 கோடியைத் தொட்டுவிட்டது என்று துல்லியமாகக் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் புதுவீடு கட்டி செட்டிலாகிவிட்டார்களாம். தொகுதி யைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளும் ஆளும்கட்சி வி.ஐ.பி-க்களில் ஒருவர், ஏற்கெனவே 25 சி வரைக்கும் கறந்துவிட்டாராம். இப்போது, புதுசாக பில் போட ஆரம்பித்திருக்கிறார்களாம் அந்த வி.ஐ.பி-யின் அடிப்பொடிகள். தேர்தல் நிறுத்தப்படுவதற்கு முன்பே நிறையச் செலவு செய்துவிட்டோமே என்று வேட்பாளர் தரப்பினர் சுட்டிக்காட்டியதற்கு, ‘அது போன மாசம்... இது இந்த மாசம். இப்ப செலவழிக்கலனா... அப்ப செலவழிச்சதும் வேஸ்ட் ஆகிடும்’ என்று பயமுறுத்துகிறார்களாம்!’’

மிஸ்டர் கழுகு: மோடி மேஜிக் - நம்பும் ஏ.சி.எஸ்... நடுங்கும் இ.பி.எஸ்!

‘‘ஆனால், ஆளுங்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் (ஏ.சி.எஸ்) அதீத நம்பிக்கையில் இருப்பதுபோல தெரிகிறதே!’’

‘`ஜூ.வி-க்கு அவர் தந்திருக்கும் பேட்டியை வைத்துத்தானே சொல்கிறீர். மோடியின் வசீகரமும்,

பி.ஜே.பி-யின் ‘தேசிய வெற்றி’யும் தன்னைக் காப்பாற் றும் என்று மலைபோல நம்புகிறார். அ.தி.மு.க-வினரைவிட மோடியைத்தான் ரொம்பவே நம்புகிறார். ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பி.ஜே.பி தோற்க வேண்டுமென்றுதான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள். ஆனாலும் மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைத்துவிட்டது. இனி தி.மு.க-வுக்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை என்று வேலூர் தொகுதி மக்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக் கிறார்கள். அதனால் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்’ என்று நம்பிக்கைப் பொங்கச் சொல்கிறார் ஏ.சி.எஸ்.’’

‘`ஆக, வெற்றி அவர் பக்கம்தானா?’’

‘`வெற்றியா... ‘அண்ணன்தான் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர்’ என்று கனவில் மிதக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இதைச் சொல்லித்தான் உள்ளூர் அமைப்பு களிடம் வாக்குச் சேகரித்துக் கொண்டுள்ளனர்.அதாவது, தான் மத்திய மந்திரி என்பதில் தீர்க்கமாகவே இருக்கிறார் ஏ.சி.எஸ்.’’

‘‘அதனால்தான் அவருடன் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் அதிகமாகத் தென்படு கிறார்களா?’’

‘‘அதேதான். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வேறு ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருந் தது. ‘வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் சிறுபான்மை யினரான இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம். குறிப்பாக, மூன்று தொகுதிகளில் அதிகம். பி.ஜே.பி-யை நம்முடன் வைத்திருந் தால், அவர்களுடைய வாக்குகள் மொத்தமாக நமக்குக் கிடைக்காது. இந்தத் தொகுதிக்குட் பட்ட ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க-வுக்கு அடிதான் விழுந்தது. அதனால் பி.ஜே.பி-யைக் கழற்றி விட்டுவிடலாம்’ என்று அ.தி.மு.க-வின் சீனியர்கள் சிலர் ஐடியா கொடுத்தார்களாம். ஆனால், இந்த விஷயத்தை பி.ஜே.பி தலைமையிடம் கொண்டு செல்வதற்கு, அ.தி.மு.க-வில் யாருக்கும் தைரியம் இல்லை. அதனால், அந்த ஐடியா அப்படியே கைவிடப்பட்டுவிட்டது.’’

‘`ஆனால், பி.ஜே.பி-யைத்தான் ஏ.சி.எஸ் நம்புகிறார் என்கிறீரே?’’

‘`நம்பித்தானே ஆகவேண்டும். அப்போது தானே மந்திரி பதவி கிடைக்கும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலும், பி.ஜே.பி வேட்பாளர் போலத்தான் பேசிக் கொண்டிருக்கிறார் ஏ.சி.எஸ். மூச்சுக்கு முந்நூறு முறை மோடி புராணம்தான் பாடுகிறார். ‘மோடி மேஜிக் கட்டாயம் வேலை செய்யும் பாருங்கள்’ என்று இவர் சிலாகிப்பதைப் பார்த்து, அ.தி.மு.க-வினரே கடுப்பாகிக் கிடக்கிறார்கள்!’’

‘`ஆளுங்கட்சி வேலை செய்யாவிட்டால், இவர் எப்படி மந்திரியாவது?’’

‘`அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தங்கள் சின்னத்தில் நிற்கும் இவரை வெற்றிபெற வைப்பதன் மூலமாக, தங்கள் கட்சிக்கு இன்னொரு எம்.பி என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள நினைக்கிறது. அதனால்தான், பி.ஜே.பி-யைக் கழற்றிவிட்டு, இவருக்காகச் சிறுபான்மையினரின் வாக்குகளைத் தேடிப்பிடிக்கலாம் என்று கணக்குப்போட்டது. ஆனால், டெல்லி வேறு ஏதாவது கணக்குப் போட்டால் ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என்று அடக்கி வாசிக்கிறார்கள். ஆனாலும், உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறார்கள்.’’

‘`சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காகத்தானே இந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முகமது ஜான், ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார்!’’

‘`பி.ஜே.பி-யை மடியில் கட்டிக்கொண்டு வேலூர் தொகுதியில் வெற்றியை எதிர்பார்க்கவே முடியாது என்று எடப்பாடியே நடுங்கித்தான் கிடக்கிறாராம். ‘மோடி மேஜிக்' என்று ஏ.சி.எஸ் நம்பலாம். ஆனால், அ.தி.மு.க புள்ளிகள், குறிப்பாக வேலூர் தொகுதியைக் கவனிக்கும் புள்ளிகள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கிறார்கள் என்பது எடப்பாடியைக் கூடுதலாக நடுங்க வைத்துள்ளது. அதன் விளைவுதான், முகமது ஜான் ராஜ்யசபா எம்.பி ஆக்கப்பட்டது. இதன் மூலமாகத் தொகுதியில் பி.ஜே.பி எதிர்ப்பு உணர்வை மட்டுப்படுத்தி வாக்குகளை அள்ளலாம் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம்.’’

‘‘அது ஈடேறுமா?’’

‘‘ஈடேற்றியாக வேண்டும் என்பது டெல்லிக் கட்டளை. ‘பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால், தனியாக நடக்கும் வேலூர் தொகுதியில் மொத்தப் பலத்தை யும் இறக்கி ஏ.சி.எஸ்-ஸை வெற்றிபெற வைத்தாக வேண்டும். இல்லையென்றால், நாளைக்கு டெல்லி பக்கம் வரவே முடியாது. கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையும் காணாமல் போய்விடும்... ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.’’

‘`ஏ.சி.எஸ் மீது பி.ஜே.பி-க்கு அப்படியென்ன அக்கறை?’’

‘`அவர் தனியாக ஒரு கட்சி வைத்திருக்கிறார், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார், ஆனால், தன்னை பி.ஜே.பி உறுப்பினர் போலவே உணர்கிறார். அடிக்கடி பி.ஜே.பி-யினருடன்தான் பேசிக்கொண்டுள்ளார். மோடியைக்கூட சந்திக் கிறார். பி.ஜே.பி-யின் தமிழக வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்கிறார். பி.ஜே.பி-க்குப் பிடித்தமான நடிகர் ரஜினிகாந்த்தின் அபிமானத்தையும் பெற்றவராக இருக்கிறார்...’’

‘`போதும் போதும்... அக்கறைக்கான காரணங்கள். நாம் டிராக் மாறலாம். உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றப் பிறகு, தி.மு.க-வின் அன்பகம் பிஸியாகவே இருக்கிறதாமே?’’

‘‘மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளரான பிறகு, அவருக்கான அலுவலக மாக அண்ணா சாலையில் இருக்கும் தி.மு.க-வின் சொத்துகளில் ஒன்றான ‘அன்பகம்’ கட்டடத்தை முழுமையாக ஒதுக்கிக் கொடுத்தார் அப்பா கருணாநிதி. அதே போல், இப்போது மகன் உதயநிதிக்கு அன்பகத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளார் அப்பா ஸ்டாலின். அடிக்கடி உதயநிதி அங்கே வர ஆரம்பித்திருப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.’’

உதயநிதியுடன் வெள்ளக்கோவில் சாமிநாதன்
உதயநிதியுடன் வெள்ளக்கோவில் சாமிநாதன்

‘`நடிகர் உதயநிதிக்காக வந்தவர்களாக இருக்கப் போகிறது!’’

‘`இந்தக் குசும்பு உம்மை விட்டுப் போகாதே. வருபவர்கள் எல்லாம் கட்சியின் இளசுகள்தான். அடுத்தடுத்த மட்டங்களில் இருக்கும் பொறுப் பாளர்கள், கட்சியில் தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்வதற்காக, கூட்டத்தை அலை மோத வைத்துக் கொண்டுள்ளனர். போஸ்டர், ‘முரசொலி’யில் பக்கம் பக்கமாக விளம்பரம் என்று கலக்கி வருகிறார்கள். மூத்த நிர்வாகிகள் பலரின் பெயரும் கண்ணுக்குத் தெரியாத சைஸுக்குச் சென்றுவிட்டதால், புலம்பலும் ஓங்கி ஒலிக்கிறது.’’

‘`அடப்பாவமே!’’

‘`இது கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது. முன்னணி நிர்வாகிகள் பலரும் மன வருத்தத்தில் உள்ளனர். ஆனாலும், முறைவாசல் செய்ய வேண்டும் என்பதற்காக நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள். ‘சின்னவர் வருகிறாரா’, ‘சின்னவர் இருக்கிறாரா’ என்று பவ்யமாகப் பேசவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்!’’

‘‘பதவியே ஏற்றாகிவிட்டது. இப்போது என்ன குமுறல்?’’

‘‘அதற்குப் பிறகுதான் குடும்ப அரசியல் என்ற விமர்சனமும் கடுமையாகியிருக்கிறது. கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது பெரிதாக விமர்சனங்கள் எழவில்லை. எதிர்க் கட்சிகள் தரப்பில்தான் விமர்சித்தார்கள். இப்போது, கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் ஒலிக்கின்றன. ‘உதயநிதிக்கு இப்போது பதவி கொடுத்தது தவறு. அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அப்போது அவர் முழுமையாக கட்சிப்பணிகளை ஏற்கச் செய்து, தன்னை நிரூபிக்க வாய்ப்புக் கொடுத்து, அதன்பிறகு பதவி கொடுத்திருக்கலாம்’ என்று சீனியர்கள் கிசுகிசுக் கிறார்கள். ‘உதயநிதியை வைத்து இனி தி.மு.க-வில் என்னென்ன அரசியல் விளையாட்டுகள் நடக்கப்போகின்றனவோ’ என்கிற அச்சமும் தி.மு.க-வில் எழுந்திருக்கிறது!’’

‘‘இளைஞர் அணிச் செயலாளர் பதவியை இழந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் என்ன வானார்?’’

‘‘வெளியில் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறார். அவர் பதவியில் இருந்தாலும், அன்பகத்தில், அதன் நிர்வாகி கலை சொல்வது மட்டும்தான் எடுபட்டது. இளைஞரணிச் செயலாளர் அறையைக்கூட பூட்டிதான் வைத்திருந்தார்களாம். இப்போது அந்த அறைக்குப் பெரிய மவுசு வந்துவிட்டது. உதயநிதியுடன் இருப்பவர்கள் மாவட்டச் செயலாளர்களை எல்லாம் போனில் கூப்பிட்டு, ‘சின்னவரை வந்து பாருங்கள்’ என்று உத்தரவு போடுகிறார்களாம். அன்பகம் பக்கம் வரமுடியாமலிருக்கிற சில நிர்வாகிகளைக் கூப்பிட்டு, ‘நீங்க எப்போ அன்பகம் வர்றீங்க’ என்று ‘அன்போடு’ விசாரிக் கிறார்களாம். ‘கட்சியின் முன்னோடிகளை உதயநிதி போய்ச் சந்திப்பதுதான் முறை. தன்னைத் தேடி அவர்களையெல்லாம் வரச் சொல்லிப் பார்ப்பது ஓவர்’ என்கிற புலம்பலும் கேட்கிறது.’’

‘‘இதெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியாதா?’’

‘‘தெரியும். ஆனால், ஆழ்வார்பேட்டை வீட்டில் எடுக்கப்படும் முடிவுக்கு அவரும் கட்டுப் பட்டவர்தானே. ஏற்கெனவே, ஓ.எம்.ஜி குரூப் என்ற ஒன்று கட்சியை ஒருபுறம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் குரூப்பை வளைத்து வைத்திருக்கும் சிலர், தமக்கு வேண்டியவர்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டிருக் கிறார்கள். இப்போது உதயநிதி தலைமையில் இளைஞரணி என்கிற பெயரில் மறுபுறம் இன்னொரு டீம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித் துள்ளது. இதனால், கட்சி என்னவாகுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் வெளியில் பேச மறுக்கிறார்கள்.’’

‘`அடடே!’’

‘‘இளைஞரணியில் மாற்றங்களும் தொடங்கி விட்டன. இரண்டு நிர்வாகிகளைப் பொறுப் பிலிருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த அதிரடி தொடருமாம். ஆயிரம் விளக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் முன்பு போட்டியிட்டு தோற்ற அசன் முகமது ஜின்னா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கும் உதயநிதிக்கும் சரிப்பட்டு வராததால், அந்த இடத் துக்கு வேறு ஒருவரைக் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறதாம். மாநிலப் பொறுப்பில் உள்ள சிலருக்கும் கல்தா கொடுக்கப்போகிறார்களாம். வயதானவர்கள் இனி இளைஞரணியில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம் உதயநிதி!’’ என்ற கழுகார்,

‘`இப்படி வெளியேற்றப்படுபவர்கள், குமுறிக் கொண்டிருப்பவர்களையெல்லாம் மதுரை மண்டலத் தளபதியின் இளசுத் தரப்பினர் ரகசியமாகச் சந்தித்துப் பேசுவதாகத் தகவல்!’’ என்றபடியே சிறகடித்தார்.

மறுபடியும் டான்சி!

ள்ளாட்சித்துறையில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. அதில், ஊராட்சிகளில் உபகரணங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டான்சி நிறுவனம் மூலமே ஊராட்சிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்படும். இந்தமுறை, தனியார் நிறுவனத்தின் மூலமாகவே வாங்க வேண்டுமென்று ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளிகளில் ஒருவர் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறாராம். பாதிக்கப்பட்ட டான்சி உற்பத்தியாளர்கள், டான்சி நிறுவன உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டிருக்கிறார்களாம்.