Published:Updated:

அ.தி.மு.க தலைமை? - பி.ஜே.பி ‘பிக்’ பிளான் - வேலூருக்காக வெயிட்டிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டு வந்த கழுகாருக்கு, மெதுவடையும் சுடச்சுட ஃபில்டர் காபியும் கொடுத்தோம். ரசித்து ருசித்துச் சாப்பிட்ட கழுகார், ‘‘தமிழக அரசியல் சூழ்நிலையும்கூட மப்பும் மந்தாரமுமாகத்தான் இருக்கிறது!’’ என்று டிரெய்லர் ஓட்ட ஆரம்பித்தார்.

பிரீமியம் ஸ்டோரி

‘‘ஆனால், தி.மு.க-வில்தான் பெரும் சூட்டைக் கிளப்பிவிட்டீரே! கடந்த இதழில் நீர் தந்த ‘திராவிட முன்னேற்ற கம்பெனி’ கவர் ஸ்டோரிக்குக் கட்சியின் மேல்மட்ட, கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலதரப்பிலும் நல்ல ரெஸ்பான்ஸ் போலிருக்கிறது. உமக்கு என்ன தகவல் கிடைத்தது?’’ என்று கேள்வியை வீசினோம்.

‘‘தமிழகம் முழுவதும் இருக்கிற அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்ட கருத்துகள்தான் அவை அனைத்தும். கடந்த இதழ் ஜூ.வி வெளியானதும், தி.மு.க தலைவர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் தி.மு.க எம்.பி-க்்களிடம் மூத்த உறுப்பினர் ஒருவர், ‘ஹெட்மாஸ்டர் இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். அதைத்தான் அப்படியே அவர்கள் எழுதியிருக் கிறார்கள்’ என்று சொன்னராம். மற்றவர்கள் மௌனமாகத் தலை அசைத்திருக்கிறார்கள். வேலூர் தேர்தல் களத்தில் இருந்த கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘இனியாவது தலைவரின் போக்கில் மாற்றம் வந்தால் மகிழ்ச்சிதான். நாம் சொல்ல முடியாமல் இருந்தோம். ஜூனியர் விகடன் மூலமாக அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.’’

‘‘அது சரி... ஸ்டாலின் குடும்பத்தில் என்ன ரியாக்‌ஷனாம்?’’

‘‘இதைப் பற்றி கட்சியின் நிர்வாகிகளிடம் துர்காவுக்கு நெருக்கமானவர்கள் சிலர் பேசும்போது, ‘துர்கா ஸ்டாலின் இதனால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். தன் குடும்பத்துக்காக இதையெல்லாம் அவர் செய்ய வில்லை. கட்சியின் நலனுக்காகவே செய்கிறார். உதயநிதியின் கிரகச் சூழல்கள்படி இப்போது பதவிக்கு வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று சோதிடர்கள் சொன்னதால்தான் அவருக்குப் பதவி வழங்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் கூறியுள்ளனர். மற்றொருபுறம், ‘நமது குழுவைத் தாண்டி இப்போது ஸ்டாலின் வீட்டுக்குள் ஆலோசனை சொல்லும் நபர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி தான் உதயநிதியை வைத்து கட்சியின் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்கள்’ என்று ஓ.எம்.ஜி குழுவிலிருந்து புலம்பியதாகவும் தகவல் வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஸ்டாலின் குடும்பத்துக்குள் வருத்தம் கலந்த கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது கடந்த இதழில் நான் பகிர்ந்த அட்டைப்படச் செய்திகள்.’’

அமித் ஷாவுடன் ஓ.பி.எஸ்
அமித் ஷாவுடன் ஓ.பி.எஸ்

‘‘அ.தி.மு.க-வுக்குள்ளேயும் உரசல் உச்சத்திலிருக்கிறதே?’’

‘‘ஆமாம்... அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமைக்குள் மோதல் இன்னும் கடுமையாகி யிருக்கிறதாம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவருமே சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு பேசிக்கொள்வதுகூட இல்லையாம். போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது மட்டுமே ஒரு ரெடிமேட் புன்னகையை உதிர்க்கிறார்கள். மகனை வெற்றிபெறவைத்து, தன்னை நிரூபித்தப் பிறகும் தன் கையை ஓங்க விட மாட்டேன் என்கிறார்களே என்பதுதான் பன்னீரின் பரிதவிப்புக்குக் காரணம். ‘முன்பாவது என்னிடம் கட்சி விவகாரங்கள் குறித்து கலந்து பேசுவார்கள். இப்போது அதுவுமில்லை. வேலுமணி, தங்கமணி மூலம் கட்சி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகிறார் முதல்வர்’ என்று ஓ.பி.எஸ் ஒரேயடியாய்ப் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஓ... அதன் எதிரொலிதான் டெல்லி பயணமா?’’

‘‘அதிலென்ன சந்தேகம்! இதையெல்லாம் கொட்டித் தீர்க்கத்தான் அவர் டெல்லி பயணப்பட்டார். ஆனால், அமித் ஷாவின் அப்பாயின்மென்ட் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லையாம். தேர்தல் முடிந்த கையோடு தங்கமணி, வேலுமணி என்று பலரும் உடனடியாக டெல்லி தலைவர்களை யெல்லாம் சந்தித்துத் திரும்பினார்கள். ஆனால், பிரம்மபிரயத்தனத்துக்குப் பிறகே பன்னீருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இந்த முறை நாடாளுமன்ற வளாகத்திலேயே அமித் ஷாவைச் சந்தித்துள்ளார் பன்னீர்.’’

‘‘சந்திப்பில் என்ன பேசப்பட்டதாம்?’’

சசிகலா, எடப்பாடி பழனிசாமி
சசிகலா, எடப்பாடி பழனிசாமி

‘‘மகனின் மந்திரிப் பதவிக்காகத்தான் இந்தச் சந்திப்பு என்று முதலில் சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டி தனது மனச்சுமையையும் சேர்த்தே இறக்கிவைத்துவிட்டு வந்திருக்கிறது பன்னீர் தரப்பு. ‘உங்களின் உத்தரவுப்படிதான் தர்மயுத்தம் ஆரம்பித்தோம். மீண்டும் இணைந்து பணியாற்றச் சொன்னீர்கள். அதையும் செய்தோம். ஆனால், இப்போது கட்சியில் எனக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை. ஒற்றைத் தலைமை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்த ஒற்றைத் தலைமையாக, தான் இருக்க வேண்டுமென்று எடப்பாடி நினைக்கிறார்’ என்று குமுறித் தீர்த்ததாம் பன்னீர் தரப்பு.’’

‘‘பன்னீர் விட்ட கண்ணீர் என்று சொல்லும்!’’

‘‘கிட்டத்தட்ட அப்படித்தான்... ‘யாரை எதிர்த்து நான் தர்மயுத்தம் தொடங்கினேனோ, அவரை முன்கூட்டியே விடுவிப்பதில் பி.ஜே.பி தரப்பில் உதவிக்கரம் நீட்டப்படுகிறது என்று செய்திகள் வருகின்றன’ என சசிகலா விரைவில் விடுதலையாகக்கூடும் என்று பரவிக்கிடக்கும் செய்தி பற்றிப் பேசினாராம். அதற்கு அமித் ஷா தரப்பில், ‘இதற்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது சட்டபூர்வமான நடைமுறை’ என்று சொல்லப்பட்டதாம்.”

‘‘ஓஹோ!’’

‘‘அப்படியும் விடாமல், ‘அவரை இப்போது நீங்கள் விடுவித்தால், என்னால் இனி தமிழகத்தில் அரசியல் பண்ணவே முடியாது’ என்று யதார்த்தத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். இவருடைய புலம்பலை அமித் ஷாவும் நட்டாவும் மெளனமாகக் கேட்டுக்கொண்டார்கள்.’’

‘‘அப்படியானால், அ.தி.மு.க தலைமையில் ஏதாவது மாற்றம் வர வாய்ப்பிருக்கிறதா?’’

‘‘அது வேலூர் தேர்தல் முடிவுக்குப் பின்புதான் தெரியவரும். வேலூர் தேர்தல் முடிவுக்காகத்தான் தமிழகத்தில் சில விஷயங்களில் எந்த ஒரு காய் நகர்த்தலையும் செய்யாமல் பி.ஜே.பி தலைமை தவிர்க்கிறது. இந்தத் தேர்தலில் முடிவு எப்படி வந்தாலும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும்கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதையே, பி.ஜே.பி-யின் சில தலைவர்கள் விரும்புகிறார்களாம். அதேசமயம், அ.தி.மு.க-வில் தற்போது நிலவும் தலைமைப் பதவிக்கான குழப்பத்துடன் 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் மீண்டும் அடிவாங்க வேண்டியிருக்கும் என்றும் பி.ஜே.பி யோசிக்கிறது.’’

‘‘அதனால்?’’

‘‘அ.தி.மு.க-வுக்கு உறுதியான ஒற்றைத் தலைமையைக் கொண்டுவர வேண்டும் என்று

அமித் ஷா அண்ட் கோ திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் சசிகலாவை முன்கூட்டியே வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியை எடப்பாடி தரப்பு மேற்கொண்டிருக் கிறது. இதை எப்படியோ மோப்பம் பிடித்துதான் டெல்லி பயணத்தில் சசிகலா விடுதலையைப் பற்றிப் பேசினாராம் பன்னீர்.’’

ராமதாஸ், எடியூரப்பா
ராமதாஸ், எடியூரப்பா

‘‘நீர் சொல்வதைப் பார்த்தால், சசிகலாவும் எடப்பாடியும் மீண்டும் சேர்ந்துகொண்டு பன்னீரைக் கழற்றிவிட்டுவிடுவார்களோ..?’’

‘‘அந்தச் சந்தேகமும் பன்னீருக்கு இருக்கிறது. இதையெல்லாம் விலாவாரியாகப் பேச வேண்டும் என்றுதான் அங்கே போயிருக்கிறார். ஆனால், எதையும் முழுதாகப் பேச முடியவில்லையாம். இரண்டு, மூன்று அமைச்சர்களின் ஆதிக்கத்தைப் பற்றியும், அதனால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை யும் சொல்லியிருக்கிறார்.’’

‘‘எப்போது பார்த்தாலும் இதே புலம்பல்தானே... இதில் என்ன புதிதாக இருக்கிறது?’’

‘‘இதைத்தான் டெல்லி பி.ஜே.பி தரப்பிலும் சொல்லியிருக்கிறார்கள் ‘இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் இந்த இரண்டு பேருக்கும் இடையே பஞ்சாயத்து செய்து செய்தே நாம் ஓய்ந்து போய்விடுவோம்போலிருக்கிறது. இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் இருக்கும் குழப்பங்களுக்கு முடிவே கட்ட முடியாது. ஆனால், இதற்குமேல் பிரச்னை எதுவும் வராமல் இருக்க நாம் முடிவுகட்டியே ஆகவேண்டும். அதற்கு அ.தி.மு.க கட்சித் தலைமை குறித்து உறுதியான முடிவை நாம் எடுத்தே ஆகவேண்டும். இதற்குமேல் இதை வளரவிட்டுக்கொண்டிருந்தால் ஆபத்து’ என்று பி.ஜே.பி தலைவர்கள் சிலர் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ‘பிக் பிளான்’ ஒன்றும் தயாராகியிருக்கிறதாம். அது என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார்கள்.’’

‘‘பி.ஜே.பி-யே சரணம் என்று நம்பியிருக்கிற பன்னீரை, அவ்வளவு சீக்கிரமாகக் கைவிட்டு விடுவார்களா என்ன?’’

‘‘பன்னீரை மட்டுமல்ல, பழனியையும்கூட கைவிட அவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். அவர்களுடைய தேவை, தமிழ்நாடு தொடர்ந்து தங்களுடைய கைப்பிடியிலேயே இருக்கவேண்டும் என்பதுதான். அதற்குக் கரைச்சலில்லாத ஒரு தலைமையைத்தான் அவர்கள் சப்போர்ட் செய்வார்கள். அந்தத் தலைமை உள்ளே இருந்தும் வரலாம்... வெளியே இருந்தும் வரலாம். அதெல்லாம் ‘ராஜ தர்பார்’ ரகசியம்.’’

“வேலூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?”

“இப்போதைக்கு இரண்டு பிரதான கட்சிகளின் கவனமும் வேலூர் தேர்தலில்தான் இருக்கிறது. ஆளுங்கட்சி அசுரபலத்துடனும் அடுக்கடுக்கான பெட்டிகளுடனும் களத்தில் இறங்கியிருப்பதைப் பார்த்து, தி.மு.க கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறது. `பலமுறை அமைச்சராக இருந்தவரே அவருடைய மகனுக்குச் செலவழிக்கப் பணம் இல்லை என்று சொல்லும்போது, நாங்கள் எங்கே செல்வது?’ என்று மாவட்டச் செயலாளர் கள் புலம்புகிறார்களாம். தி.மு.க-வின் பண பலவீனத்தை அ.தி.மு.க தரப்பு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. எனவே, கரன்ஸி விஷயத்தில் கஞ்சத்தனம் வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. ‘இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் தான் பி.ஜே.பி-யிடம் லாபி செய்ய முடியும்’ என்பதுதான் அவரின் தேர்தல் கட்டளை.’’

‘‘ராமதாஸின் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்களே!’’

‘‘முதலில் அவருக்கு வாழ்த்தைத் தெரிவித்து விடுவோம். ராமதாஸ் 80 வயதை நிறைவு செய்திருக்கிறார். எனவே, முத்துவிழாவை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப் போகிறார்கள் பா.ம.க-வினர். சோர்வில் இருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துவதற்கு இந்த விழாவைப் பயன்படுத்தப்போகிறார்களாம். எனவே, பா.ம.க-விலும் பல அதிரடி மாற்றங்கள் விரைவில் வரலாம்.’’

“எடியூரப்பா முதல்வர் ஆவாரா?”

“காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி கலைந்துவிட்டது. ஆனால், இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை பி.ஜே.பி. அங்கு எடியூரப்பாவை முதல்வராக்க வயது சிக்கலாக அமைந்துவிட்டது என்கிறார்கள். அமித் ஷா, தலைவரான பிறகு 75 வயதுக்குமேல் இருப்பவர்களை பதவியில் அமர்த்த வேண்டாம் என்று ஒரு அஜெண்டாவைக் கொண்டுவந்தாராம். எடியூரப்பா 75 வயதை நிறைவு செய்துவிட்டார். அதனால்தான் கட்சித் தலைமை அவரை முதல்வராக்க யோசிக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

தமிழ்நாடு ஹவுஸில் ஈகோ மோதல்!

டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்த இருவருக்குமிடையே உள்ள ஈகோவால், அங்கு பணிபுரியும் மற்ற அதிகாரிகள் மன உளைச்சலில் இருக்கிறார்களாம். கேன்டீன் ஒப்பந்தம் முதல், வேலையாள்கள் நியமனம் வரை இருவருக்குள்ளும் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறதாம். சமீபத்தில் தமிழ்நாடு ஹவுஸில் ஒரு மர்ம மரணம் வேறு நிகழ்ந்துள்ளது. இதற்குப் பின்னணியில் இந்த அதிகார மோதலும் இருக்கிறது என்கிறார்கள். இதை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை என்று புலம்புகிறார்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு