Published:Updated:

H -1B விசா... இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜோ பைடன்!

ஜோ பைடன் | Joe Biden
ஜோ பைடன் | Joe Biden ( Andrew Harnik )

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தின் மூலம் பெரும்பான்மையான இந்தியர்கள் பலனடைவார்கள்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட கடுமையான குடியுரிமைச் சட்டங்களை, புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் திருத்தி அமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் சுமார் 1.10 கோடி பேருக்கான குடியுரிமையை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐ.டி. பணியாளர்கள் இதில் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முறையான ஆவணங்கள் இன்றி, அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு வசித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1.10 கோடி. தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜோ பைடன், தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் குடியேற்றத் திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவர் வெற்றிபெற்று ஆட்சியமைத்திருக்கும் நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கான சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

குடியேற்றம் | immigration
குடியேற்றம் | immigration

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய குடியுரிமைச் சட்டத்தின் மூலம், உரிய ஆவணங்களுடன் குடியுரிமை வழங்கப்பட்டு ஆண்டுதோறும் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 95,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019 நிதியாண்டில் மட்டும் கால அவகாசம் நீட்டிப்பு உட்பட 3.89 லட்சம் H -1B விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 72 சதவிகிதம் அல்லது 2.78 லட்சம் இந்தியப் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் H -1B விசா கொண்டிருப்பவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் ஏற்பாடு அல்லது அதற்கான 6 ஆண்டுகள் கால அளவை நீட்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது, ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்பட்ட H -1B விசாக்களில் அதிகம் இடம்பிடித்த இந்தியர்களுக்கு முக்கியமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

ஹெச்-1 பி விசா தடை; பாதிக்கப்படும் இந்தியர்கள்? - ட்ரம்ப்பின் முடிவால் கலங்கும் ஐ.டி துறை

ட்ரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டத்தை ரத்து செய்யும் சுற்றறிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் திரும்பப் பெற்றிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் வேலை தேடுதல், சுயதொழிலில் ஈடுபடுதல், வாகன ஓட்டுநர் உரிமம் பெறுதல், வங்கிக் கணக்கு திறத்தல் போன்ற பயன்களைப் பெறமுடியும்.

இத்தகைய நடவடிக்கைகள் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதாகவும் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு