Published:Updated:

ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு நிர்மலா சீதாராமனின் காரணங்கள் சரியா?!

தெ.சு.கவுதமன்

ஆட்டோமொபைல் துறையையே புரட்டிப்போடுமளவுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறதா என்று பார்த்தால், எதிர்மறையான தகவலே கிடைக்கிறது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman ( Vikatan )

கடந்த சில ஆண்டுகளாகவே இறக்கத்தைச் சந்தித்துவந்த ஆட்டோமொபைல் துறை, தற்போது மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே, மாதத்தில் பாதி நாள்களுக்கும்மேல் தொழிற்கூடங்களில் உற்பத்தியை நிறுத்திவைக்கும் அளவுக்கு வந்துள்ளன. இந்த வீழ்ச்சி குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "சொந்தப் பயன்பாட்டுக்காக வாகனங்களை வாங்குவதைவிட ஓலா, ஊபர் போன்றவற்றின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறை சரிவைச் சந்திக்கக் காரணம்" என்று தற்போது கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து பெரிய அளவில் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.

Automobile Sector
Automobile Sector
vikatan

அவர் கூறியபடி, ஆட்டோமொபைல் துறையையே புரட்டிப்போடுமளவுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறதா என்று பார்த்தால், எதிர்மறையான தகவலே கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. ஓலா, ஊபர் இந்தியா நிறுவனங்களின் சராசரி தினசரி சவாரி எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த நிறுவனங்கள் அறிமுகமானபோது மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன. அதுவரை வாடகை கார்களில் பயணிக்க யோசித்த, அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களும்கூட இந்த வாகனங்களில் பயணிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், பயன்பாட்டாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களின் சேவையில் தொய்வு ஏற்பட்டது. வாடகை கார்களை புக்கிங் செய்துவிட்டு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது, அலுவலகத்துக்குச் செல்லும் நேரங்களில் வாடகைக் கட்டணத்தை அதிகரிப்பது, நிமிடத்துக்கு நிமிடம் கட்டண விகிதம் மாறுபடுவது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த வாகனங்களைப் பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடையே குறையத் தொடங்கியது. ஓட்டுநர்களுக்குத் தரப்படும் ஊக்கத்தொகையைக் குறைத்ததால் அவர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டது. எனவே ஓலா, ஊபர் வாகனங்களின் சேவையால் ஒட்டுமொத்தமாக ஆட்டோமொபைல் துறையே ஆட்டம்கண்டிருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

Ashok Leyland
Ashok Leyland
vikatan

வாகன உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள விற்பனைச் சரிவென்பது, வெறுமனே கார்களுக்கு மட்டுமே ஏற்படவில்லை. அனைத்துவகையான வாகனங்களின் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டு, உற்பத்தியான வாகனங்கள் தேங்கிக்கிடக்கின்றன. உதாரணத்துக்கு, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்டை மட்டுமே எடுத்துக்கொண்டால், இந்த நிறுவனத்தின் வணிகப்பயன்பாட்டு வாகனங்கள், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 70 சதவிகிதம் விற்பனைச் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த 2018, ஆகஸ்ட் மாதத்தில் 11,135 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால் 2019, ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 3,336 வாகனங்கள்தான் விற்பனையாகியுள்ளன. இந்த நிறுவனத்தின் எண்ணூர் தொழிற்சாலையில் மட்டுமே 24,000 வாகனங்கள்வரை தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அசோக் லேலண்ட் நிறுவனம், நடப்பு மாதத்தில் மட்டும் தனது ஐந்து தொழிற்சாலை யூனிட்டுகளிலும் சேர்த்து மொத்தமாக 59 நாள்கள் வரை விடுமுறை அறிவித்துள்ளது. குறிப்பாக, உத்தரகாண்டிலுள்ள தொழிற்கூடத்தை 18 நாள்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனம் மட்டுமல்லாது, மாருதி, டாட்டா, ஹோண்டா, மஹேந்திரா & மஹேந்திரா உள்ளிட்ட பெரும்பாலான முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளைக் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மூடும் அறிவிப்பை மாதந்தோறும் வெளியிட்டு வருகின்றன. எனவே இவற்றையெல்லாம் பார்க்கும்போது வெறுமனே கார்களின் விற்பனை மட்டுமல்லாது அனைத்துவகை வாகனங்களின் விற்பனையும் சரிவுகண்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே வாகன விற்பனைச்சரிவுக்கு ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை கார்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதே காரணமென்று கூறுவது பொருத்தமானதாக இருக்காது.

Automobile
Automobile
vikatan

வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து டீலர்கள் சிலரிடம் விசாரித்தபோது, 'பழைய கார்கள் விற்பனை ஓரளவு நடக்கிறது' என்றும், 'புதிய கார்களின் விற்பனை மட்டுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது' என்றும் கூறுகிறார்கள். விற்பனைச்சரிவுக்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடுபவர்கள், சாலை வரி மற்றும் பதிவுக்கட்டணம் அதிகமாக இருப்பதை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். பழைய வாகனமாக வாங்கும்போது சாலை வரி, பதிவுக்கட்டணச் செலவு கிடையாது. ஆனால் புதிய வாகனம் வாங்கும்போது சாலை வரி, பதிவுக்கட்டணத்துக்கான தொகையே 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.

மேலும், டீசல் வாகனங்களின் தயாரிப்பை 2020, ஏப்ரல் முதல் நிறுத்தப்போவதாக மாருதி நிறுவனம் அறிவித்தது. அதே நேரத்தில் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து அறிவிப்புகள் வெளியாயின. இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்து, 'இனி எதிர்காலத்தில் டீசல் வாகனங்களின் உற்பத்தி மட்டுமன்றி, அவற்றைப் பயன்படுத்தவும் தடை செய்யப்படலாம்' என்று தவறான செய்தி மக்களிடையே பரவியது. எனவே டீசல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஏற்கெனவே டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்கள் விற்க முயற்சி செய்தாலும் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. தங்கள் வாகனங்களை விற்க முடியாததால் பலரால் புதிய வாகனங்களை வாங்கவும் முடியாமல் போனது.

Automobile Sector
Automobile Sector
vikatan

இவற்றையெல்லாம் தாண்டி, அதிகரித்துவரும் பார்க்கிங் கட்டணம், போக்குவரத்து நெருக்கடி, மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் வாகன உற்பத்தித் துறையைப் பாதித்திருப்பதாகத் தெரிகிறது.