Published:Updated:

`அனுமதித்தால் 1 கோடி பேர் வேலை இழப்பார்கள்; அதான் வேண்டாம் என்றேன்!'- எதைச் சொல்கிறார் நிதின் கட்கரி

தானியங்கி கார்கள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

Nitin Gadkari
Nitin Gadkari

ஆட்டோமேடிக் கார்கள் எனப்படும் தானியங்கி கார்கள் பல்வேறு நாடுகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. சில நாடுகள் இந்த வகையான கார்களை ஏற்றுக்கொண்டுவிட்டன. சில நாடுகள் சோதனை முயற்சியில் வைத்துள்ளனர். சில நாடுகளில் உணவு உள்ளிட்ட பொருள்கள் டெலிவரி செய்வதற்காகவும் தானியங்கி கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில், நடந்த காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் விழாவில் கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் தானியங்கி கார்கள் குறித்து பேசினார். அதில், ``நாட்டில் உள்ள பணக்காரர்களில் சிலர் என்னை நேரில் சந்தித்து வெளிநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ள தானியங்கி கார்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

automatic car
automatic car

அவர்களிடம், `நான் இங்கு இருக்கும் வரை இந்தியாவில் டிரைவர் இல்லாத கார்களை அனுமதிக்க மாட்டேன்' என்று தெளிவாகக் கூறிவிட்டேன். சிலர் `நீங்கள் புதிய தொழில்நுட்பத்தை எதிர்க்கிறீர்களா' என என்னைப் பார்த்து கேட்கிறார்கள். அதற்கு என் பதில் `இல்லை' என்பதே. நமது நாட்டில் 40 லட்சம் ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்னும் 25 லட்சம் ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில் இந்தியாவில் தானியங்கி கார்களை கொண்டுவந்தால் ஓட்டுநர் தொழிலைச் சார்ந்த 1 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும். இதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.