Published:Updated:

திரும்பும் வரலாறு... அஸ்ஸாம் மீண்டும் பற்றி எரிவது ஏன்? #CAB

என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்
என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்

குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவு வெளியிடப்பட்டதில் இருந்தே, வடகிழக்கு மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு நிலவிவருகிறது. அது ஏன்?

வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தின் புவியியல், வரலாறு என்பது இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. அதன் அரசியல் நீரோட்டமும் அவ்வாறானதே. சிறுபான்மையினர் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்பது பலரின் கவனத்தை ஈர்த்தது. வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் மத்தியில் யார் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வாக்களிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ், மத்தியில் வலுவாக இருந்த காலத்தில், வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸைத் தேர்வுசெய்தன. தற்போது, பா.ஜ.க மத்தியில் வலுவாக இருப்பதால் அதே நிலை தொடர்கிறது.

என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்
என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்

தற்போது, குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களின் நிலை என்பது வேறு. தற்போது, அங்கு நடைபெற்றுவரும் போராட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரானது மட்டுமே. அஸ்ஸாம் மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு - என்.ஆர்.சியை எதிர்ப்பதில்லை. இங்கே, என்.ஆர்.சிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கும் தொடர்பிருக்கிறது. அதற்கு முன், என்.ஆர்.சி பற்றித் தெரிந்துகொள்வோம்.

அஸ்ஸாம் மாநிலத்தில் என்.ஆர்.சி?

என்.ஆர்.சி என்பது தற்போது உருவானதல்ல. அஸ்ஸாம் மாநிலத்தில் 1951-ம் ஆண்டு முதலே என்.ஆர்.சி இருந்துவருகிறது. இந்தியாவிலே என்.ஆர்.சி என்பது அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டுமே தனித்துவமானது. என்.ஆர்.சி என்பது தகுதியுடைய இந்திய குடிமக்கள் யார் என்பது அடங்கிய ஒரு தொகுப்பு. என்.ஆர்.சி-யில் உங்களுடைய பெயர் இல்லையென்றால், நீங்கள் இந்தியக் குடியுரிமையை இழந்தவர்கள் ஆவீர்கள். சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்போடு சேர்த்தே அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் என்.ஆர்.சி மேற்கொள்ளப்பட்டது.

என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்
என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்

இந்தியப் பிரிவினையின்போது, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (தற்போதைய வங்கதேசம்) அகதிகள் இந்தியாவில் குடியேறத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, 1951-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்முறையாக என்.ஆர்.சி தயாரிக்கப்பட்டது. இத்தனை காலமும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து இருந்துவந்தது. இந்த நிலையில், 1970-களின் இறுதியில் கிழக்குப் பாகிஸ்தானில் மோதல் ஏற்பட்டது. அப்போதும் அதிகப்படியான மக்கள் இந்தியாவிற்குப் புலம்பெயர நேர்ந்தது. வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா முக்கியப் பங்கு வகித்ததால் இந்தியா எல்லைகளை மீண்டும் திறந்தது, மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள், பெரும்பாலும் அஸ்ஸாமில் குடியேற நேர்ந்தது.

வங்கதேசப் போர் முடிவுற்ற பிறகும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தொடர்பான கேள்வி அஸ்ஸாமில் தீர்க்கப்படாமலே இருந்தது. வங்காளிகள் அதிக அளவில் குடியேறியதால், தங்களுடைய கலாசாரமும், பூர்வகுடி அடையாளமும் பாதிக்கப்படுகிறது, தங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன என அஸ்ஸாம் மாநிலத்தில் 1979-ம் ஆண்டு போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களை அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு மற்றும் அஸ்ஸாம் கனபரிஷத் முன்னின்று நடத்தின. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போராட்டங்களால் 80-களில், அஸ்ஸாமில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.

இதற்குத் தீர்வு காண, இந்திய அரசு 1985-ம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தைகளின் முடிவில் அஸ்ஸாம் அமைப்புகளுக்கும் இந்திய அரசுக்கும் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 24 மார்ச், 1971-ம் ஆண்டு நள்ளிரவுக்குப் பிறகு இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என இந்திய அரசு உத்தரவாதம் அளித்தது. 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.ஆர்.சி மீண்டும் புதுப்பிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் அது. இது, நிறைவேற்றப்படவே இல்லை.

அசாம் ஒப்பந்தம்
அசாம் ஒப்பந்தம்

இதை நிறைவேற்றக் கோரி, 'அஸ்ஸாம் பப்ளிக் வொர்க்ஸ்' என்கிற தன்னார்வ அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதன் அடிப்படையில், என்.ஆர்.சியை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 2013-ம் ஆண்டு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதை மேற்பார்வை செய்தும் வருகிறது. தற்போது அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் என்.ஆர்.சி நடவடிக்கை, அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் (1985) ஷரத்துகள் அடிப்படையிலே செய்யப்பட்டுவருகிறது.

"அஸ்ஸாம் ஒப்பந்தமே அப்போதைய பதற்றத்தைத் தணிக்க உருவாக்கப்பட்ட ஒன்று, அஸ்ஸாம் பிரச்னைகள் தொடர்பான கேள்விகளுக்கு அதில் தெளிவான தீர்வு முன்வைக்கப்படவே இல்லை" என்கிறார், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த்.

இந்தியா முழுமைக்கும் என்.ஆர்.சி?

அஸ்ஸாம் மாநிலத்துக்கு இத்தகைய கொந்தளிப்பான வரலாறும் பின்னணியும் உள்ளன. இந்த நிலையில், இந்தியா முழுமைக்கும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படும் என பா.ஜ.க-வும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எந்த தர்க்கத்தின் அடிப்படையில் சொல்கிறார்கள் என்கிற கேள்வியைப் பலரும் எழுப்பிவருகின்றனர். இதில், பிரதானமான சிக்கல்களும் உள்ளன.

அமித் ஷா
அமித் ஷா

அஸ்ஸாம் என்.ஆர்.சிக்கு 24 மார்ச், 1971 என்பது வரையறை செய்யப்பட்ட நாளாக உள்ளது. இந்தியா முழுமைக்கும் என்.ஆர்.சி என்றால், எதை வரையறுக்கப்பட்ட நாளாக நிர்ணயிப்பார்கள் என்று தெரியாது. அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி -யின் இறுதி வரைவு, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 19,09,657 நபர்களின் பெயர் விடுபட்டுள்ளது. தகுதியுடைய பலரின் பெயரும் இதில் விடுபட்டதாகப் பல குளறுபடிகள் எழுந்தன. இறுதி வரைவை நிராகரிக்க வேண்டும் என அஸ்ஸாம் மாநில பா.ஜ.க-வே கூறிவருகிறது. இந்தப் பின்னணியில்தான் இந்தியா முழுவதும் என்.ஆர்.சி மேற்கொள்ளப்போகிறோம் எனக் கூறிவருகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மேலும், தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் 31.12.2014 வரை இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என சொல்லப்பட்டிருப்பது அஸ்ஸாம் ஒப்பந்தத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

டிசம்பர் 15-க்குள் `ஃபாஸ்டேக்' கட்டாயம்... இத்திட்டத்தால் யாருக்கு லாபம்?

என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத்திருத்தம்?

குடியுரிமை சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவு வெளியிடப்பட்டதிலிருந்தே வடகிழக்கு மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு நிலவிவருகிறது. வடகிழக்கில் அஸ்ஸாம் தான் பெரிய மாநிலம் என்பதால், அங்கு இதன் தாக்கமும் இதற்கான எதிர்ப்பும் அதிகமாக உணரப்படுகிறது. என்.ஆர்.சி-க்கும் இந்த சட்டத் திருத்தத்துக்குமான இணைப்பு சற்று சிக்கலானது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், என்.ஆர்.சி மூலம் குடியுரிமை இழந்தவர்களில் முஸ்லிம் அல்லாத அனைவருமே குடியுரிமை பெற முடியும் என்பதே. இதில் பெரும்பான்மையானவர்கள் வங்காளி இந்துக்கள்தான். பா.ஜ.க இதை வாக்கு வங்கி அரசியலாகச் செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

என்.ஆர்.சி - குடியுரிமைச் சட்டத்திருத்தம்
என்.ஆர்.சி - குடியுரிமைச் சட்டத்திருத்தம்

அஸ்ஸாமிகளின் நிலை என்பது வங்காளிகள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான். அங்கு, இனம்தான் அடையாளமாக இருக்கிறது. மதத்தை அவர்கள் மறுக்கிறார்கள். அஸ்ஸாமில் நிலவுகிற எதிர்ப்புகள், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு மட்டுமே எதிரானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அஸ்ஸாமிகள் என்.ஆர்.சியை ஆதரிப்பவர்களே.

திரிணாமுல் காங்கிரஸ் - மேற்குவங்கம்?

அஸ்ஸாம் மாநிலத்தை அடுத்து, என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம் அதிகம் உச்சரிக்கப்படும் மாநிலம், மேற்கு வங்கம். அஸ்ஸாம் சர்ச்சைகளும் வங்காளிகள் தொடர்பானது என்பதால், மேற்கு வங்கத்தில் அது அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்து வருகிறது.

'என்.ஆர்.சி, குடியுரிமை சட்டத் திருத்தம் இரண்டையும் மேற்கு வங்கத்தில் நிறைவேற்ற விடமாட்டேன்' என மம்தா பானர்ஜி சூளுரைத்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் எப்படியும் இரண்டையும் நிறைவேற்றுவோம் என அமித் ஷா பதிலளித்திருக்கிறார். இவர்களின் மேற்கு வங்க அரசியல் சதுரங்கத்தின் பகடைகளாக என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம் உருட்டப்படுகிறது.

மமதா பானர்ஜி - அமித் ஷா
மமதா பானர்ஜி - அமித் ஷா

ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வரும் முன்னர், மம்தா பானர்ஜியும் என்.ஆர்.சிக்கு ஆதரவாகத்தான் இருந்துள்ளார் என்கிறார், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான அபூர்பா பருஆ. அவரிடம் பேசுகையில், "மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கு பா.ஜ.க-வின் வளர்ச்சி ஆரம்பித்தது. இது, மம்தா பானர்ஜிக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. முஸ்லிம்களைக் குறிவைத்து இந்த இரண்டையும் பா.ஜ.க முன்னெடுப்பது வெளிப்படையானது.

இந்தியாவில் காஷ்மீரை அடுத்து முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் மேற்கு வங்கம். மாநிலத்தின் மக்கள் தொகையில் 27% முஸ்லிம்கள். அவர்களின் வாக்கு, திரிணாமுல் காங்கிரசுக்கு முக்கியமானது. அதனால் மம்தா பானர்ஜி தீவிரமான என்.ஆர்.சி எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறார். இதுவும் அரசியல்தான். மேற்கு வங்க மாநிலத்திலுமே இரண்டு தடுப்பு மையங்கள் (detention centres) கட்டப்பட இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன." என்றார்.

மேலும், அவர் அஸ்ஸாம் மாநிலத்தின் தற்போதைய நிலை பற்றிப் பேசுகையில், "இந்திய அரசு அஸ்ஸாம் மீது அதிகாரபூர்வமாகப் போர் தொடுத்துள்ளது. மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டனர். போராட்டத்தை ஒடுக்க, அரசு சில இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இது, 1980-களில் நிலவிய கொந்தளிப்பான காலகட்டத்தை நோக்கியே நகர்கிறது. அப்போது, அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு, அஸ்ஸாம் கண பரிஷத் ஆகியவை போராட்டங்களை முன்னின்று நடத்தின. தற்போதும் மாணவர்கள்தான் பல இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்."

அபூர்பா பருஆ
அபூர்பா பருஆ

"ஆனால், பல இடங்களில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. உண்மையான மக்கள் போராட்டத்தை சீர்குலைக்க சதி வேலை நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க, இதன்மூலம் மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்தி வன்முறைக்கு வித்திடப் பார்க்கின்றன. அஸ்ஸாம் மக்கள் இதனை எளிதில் விடப்போவதில்லை. காஷ்மீரில் இவர்கள் கையாண்ட அஜெண்டாவை அஸ்ஸாமிலும் செயல்படுத்தப்பார்க்கிறார்கள்" என்றார்.

திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்திலும் பல பகுதிகளில் தற்போது இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு ராணுவத்தை அழைத்துள்ளது. மக்கள் போராட்டங்கள் தீவிரமாக ஒடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

படைகள் குவிப்பு, இணையம் துண்டிப்பு, எதிர்ப்பு போராட்டங்கள்... மற்றுமொரு காஷ்மீர் ஆக்கப்படுகிறதா அஸ்ஸாம் மாநிலம்?

குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்களின் வாதங்கள்! #CAB

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு