Published:Updated:

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-க்குள் என்.பி.ஆர் கணக்கெடுக்க உத்தரவு... தயக்கத்தில் அரசு ஊழியர்கள்?!

என்.பி.ஆர் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதால், மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. என்ன ஆதாரங்கள் கேட்கப்படும் என்று மக்கள் குழப்பமான மனநிலையில் உள்ளனர்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகைப் பதிவேடு) தயாரித்து விட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, விவாதிக்கக் கேரள அரசு வரும் 16-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிப்பது குறித்து விவாதித்து அதிலுள்ள பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Census
Census

பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிப்பதில் உள்ள பிரச்னைகளால் அந்த மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. தனித்தனியாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தகவல் சேகரித்து பட்டியல் தயாரிக்க வேண்டும். நடைமுறையில் உள்ள பிரச்னைகளைப் போக்கும் வகையில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி, பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்கைச் சந்தித்து சில விளக்கமளித்துள்ளார். தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்க ஒத்துழைக்கவும் அவரிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்'' என்கின்றனர்.

பஞ்சாப் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பிற மாநில முதல்வர்களையும் சந்திக்க விவேக் ஜோஷி முடிவெடுத்துள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

ராஜஸ்தான் தலைமைச் செயலர் டி.பி குப்தா சமீபத்தில் விவேக் ஜோஷியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `பெற்றோர்கள் பிறப்பிடம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது' என்று கோரிக்கை விடுத்தார். `நாட்டு மக்களுக்குத் தாங்கள் பிறந்த இடமே தெரியாத நிலையில், பெற்றோரின் பிறப்பிடம் குறித்து எப்படித் தெரியும்?' என்கிற கேள்வியையும் டி.பி. குப்தா எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, விவாதிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 16-ம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்.பி.ஆர் தயாரிப்பது குறித்து மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், "நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பம், வீடு மற்றும் தனிநபர் குறித்த விவரங்களை அறிவதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. யாரிடமும் எந்த ஆவணமும் கேட்கப்படாது'' என்று தெரிவித்துள்ளார்.

CAA-க்கு எதிர்ப்பு, கோயில்களுக்குக் குரல்... தி.மு.க ஆரம்பித்த தேர்தல் உத்தி!

நாடு முழுவதும் என்.பி.ஆர் கணக்கெடுப்புக்காக ரூ.3,941.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படுவதற்காக ஒவ்வொரு தனிநபரும் தங்களை என்.பி.ஆரில் பதிவு செய்துகொள்ளவேண்டியது அவசியமென்று சட்டம் சொல்கிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம்
சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம்
Twitter

அஸ்ஸாமில் ஏற்கெனவே என்.ஆர்.சி எடுக்கப்பட்டு விட்டதால், அந்த மாநிலத்துக்கு மட்டும் என்.பி.ஆர் கணக்கெடுப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்.பி.ஆர் தயாரிப்பின் போது பெயர் விவரம், குடும்பத் தலைவருக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் உள்ள உறவு, தந்தை, தாயார் பெயர்கள், பாலினம், திருமணமாகியிருந்தால் மனைவி அல்லது கணவர் பெயர், பிறந்த இடம், தேசிய இனம், தற்போது வசிக்குமிடம், தற்போது வசிக்குமிடத்தில் தங்கியுள்ள கால விவரம், நிரந்தர விலாசம், தொழில், கல்வி விவரங்கள் போன்ற கேள்விகள் கேட்கப்படும்.

கணக்கெடுப்பின் போது, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை காட்டப்பட வேண்டுமென்றும் சொல்லப்படுகிறது. எனினும் பல மாநிலங்களில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் கணக்கெடுப்புக்குப் பலத்த எதிர்ப்பு இருப்பதால் இதைச் செய்து முடிப்பதில் பல சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்புப் போராட்டம் நடக்கும் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்துவது கடினமான காரியம்.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

தற்போது போராட்டம் நடத்திவரும் மக்கள், இது தொடர்பாகக் கணக்கெடுப்புக்கு அரசு அதிகாரிகள் வரும்போது ஒத்துழைப்பு அளிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. எதிர்ப்பு இருக்கும் பகுதிகளில் கணக்கெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்போது தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா என்று அரசு அலுவலர்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது. இவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமில்லை என்பதால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்க வாய்ப்பிருப்பதாகவும் அரசு அலுவலர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. பணியைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, அவர்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படும்போது, தற்போதுள்ள எதிர்ப்பு மேலும் வலுக்கவே வாய்ப்பும் இருக்கிறது. அரசு என்ன சொல்லப் போகிறது, அரசு அலுவலர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்கிற கேள்விகளும் எழுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ. செல்வத்திடம் பேசிய போது, ''அஸ்ஸாமை பொறுத்தவரை, தனியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து தனியார் தொண்டு நிறுவனங்களிடம்தான் என்.ஆர்.சி கணக்கெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். தமிழ்நாட்டில் கணக்கெடுப்பை எடுக்கும் பணியை யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. மாநில செயற்குழுவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப் போகிறோம். அரசு ஊழியர்களிடத்தில் பொறுப்பை ஒப்படைத்தால் ஏற்படும் சிரமங்கள், அதை எப்படி எதிர்கொள்வது, பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆய்வுக்குட்படுத்துவோம்.

அஸ்ஸாம் என்.ஆர். சி கணக்கெடுப்பு
அஸ்ஸாம் என்.ஆர். சி கணக்கெடுப்பு

பாதுகாப்பு என்பது மட்டுமல்ல இந்த விஷயத்தில் பல சிரமங்கள் உள்ளன. வாக்களார் பட்டியல், ரேசன் கார்டு போன்றவற்றை கணக்கெடுக்கும் போதே ஏகப்பட்ட பிரச்னைகள் வருகிறது. என்.பி.ஆர் கணக்கெடுப்பின் போது, கண்டிப்பாக பல பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. இதையெல்லாம், இப்போதே அரசு கவனத்தில் கொண்டு, யாரிடம் பணி ஒப்படைக்கப்பட்டாலும் அவர்களை தகுந்த முறையில் பாதுகாப்பளித்து தயார் செய்வது நல்லது!'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு