Published:Updated:

"ஒற்றைமொழிக் கொள்கை அரசியலமைப்புக்கு எதிரானது" - ரவிக்குமார் எம்.பி

Amit shah
Amit shah

இந்தி எதிர்ப்பும் இந்தித் திணிப்பும் குறித்து விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் முனைவர் ரவிக்குமார்.

"ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமென்றால் 14 தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாகும்வரை மொழிப் பிரச்னையில் ஒரு திருப்திகரமான நிரந்தரமான முடிவு ஏற்படப்போவதில்லை. பன்மொழிகளை ஆட்சி மொழிகளாக்குவது இந்தியர்களை ஒன்றுபட்டவர்களாகக் கலந்துகொள்ள நாம் தரும் விலை என்றே கொள்ள வேண்டும். இந்தியின் மூலம், ஒற்றுமையைக் குலைத்த இந்தியாவைத்தான் பெற முடியும். ஒற்றுமையான இந்தியர் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்றால் ஒரு வட்டாரம் மற்றொரு வட்டாரத்தை அடக்குகிறது என்று எவரும் கருதும் வகையில் எத்தகைய செயல்பாடும் இருக்கக்கூடாது."
சி.என்.அண்ணாதுரை

இன்று, அண்ணாவின் 111-வது பிறந்த தினம். அண்ணா எனும் அதீத ஜனநாயகவாதி கையிலெடுத்த இந்தி எதிர்ப்பு ஆயுதத்தை அவரது பிறந்தநாளில் மீண்டும் தமிழகம் கையிலெடுப்பதற்கான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

Rajaji and Annadurai
Rajaji and Annadurai

இந்தி தினமான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'பாரதம் பல்வேறு மொழிகளைக் கொண்ட தேசம். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. இருந்தும் மொத்த தேச மக்களுக்குமாக ஒற்றை மொழி என்பது அவசியமானதாக இருக்கிறது. இன்று தேசத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியின் வாயிலுக்கு அருகில் இருக்கும்போது அதை ஒற்றை மொழியால் மட்டுமே செய்ய முடியும், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே சாத்தியம்' என்று தனது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தார்.

மொழியைக் கொண்டுதான் ஒரு தேசத்தை ஒருங்கிணைக்க முடியும் என்னும் அவரது வாதமே தவறானது. அதை இந்தியால் மட்டுமே செய்ய முடியும் என்பதும் தவறான பார்வை. 'தேசத்தின் பெரும்பான்மை மக்களால் இந்திப் பேசப்படுகிறது' என்கிறார் அமித்ஷா. அவரின் வாதத்தின்படியே பெரும்பான்மை மக்களால் இந்தி பேசப்படுகிறது எனக் கொள்வோம்.

அம்பேத்கர் தனது ஆய்வின்முடிவில், "இந்தியாவில் ஆரியர்கள் நுழைவுக்கு முன்பு, இந்த மண் எங்கிலும் பரவியிருந்த நாகர் மக்களால் தமிழ்தான் பேசப்பட்டது" என்று பதிவு செய்கிறார். அப்படியென்றால் பெரும்பான்மையான மக்கள் பேசிய ஒற்றை மொழியாம் தமிழ் மொழியை அமித்ஷா தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளத் தயாரா?

இந்தியாவில் தேசிய மொழி என்று தனியாக எதுவும் கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தில்கூட, அதிகாரபூர்வ மொழி என்கிற சொல்லாடல்தான் கையாளப்படுகிறதே ஒழிய, தேசிய மொழி என்கிற சொல் அதில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக அரசியலமைப்புச் சபை இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. சுமார் மூன்று வருடங்கள் இந்த இருபிரிவினருக்குமிடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அதன் அடிப்படையில் கையெழுத்திடப்பட்டதுதான் ’முன்ஷி-ஐயங்கார் ஒப்பந்தம்’.

Jawaharlal Nehru
Jawaharlal Nehru

’அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக இருக்குமென்றும் '15 ஆண்டுகள் முடிந்த பிறகு அதிகாரபூர்வ மொழி குறித்து நாடாளுமன்றத்தில் பேசி முடிவெடுக்கப்படும்’ என்றும் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பான மீண்டும் 1963-ல் உருவான விவாதம்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கவும் காரணமாக இருந்தது. அந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில்தான் ஜவஹர்லால் நேரு, `1965-க்குப் பிறகும் ஆங்கிலம், இந்தி இரண்டுமே நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக இருக்கும்’ என்று ஆட்சிமொழிக்கான சட்டதிருத்தத்தைக் கொண்டுவந்தார்.

வேற்றுமொழி யாருக்குத் தாய்மொழியாக இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கல்வியில் அனுகூலங்கள் சாத்தியப்படும். அது கல்வியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

அமித்ஷா சொல்வதுபோல, தேசிய மொழி கொண்டுவரப்பட்டால், இந்தி தேசிய மொழியாக்கப்பட்டால், கல்வியில் தேசிய மொழிக்கான கட்டாயம் ஏற்படும். பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்ற இந்த மண்ணில் கட்டாயமாகக் கற்பிக்கப்படும் தேசிய மொழி வேற்றுமொழியாகவே இருக்கும்.

அது என்றுமே அவர்களது தாய்மொழியாகாது. அதுமட்டுமல்லாமல் அந்த வேற்றுமொழி யாருக்குத் தாய்மொழியாக இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கல்வியில் அனுகூலங்கள் சாத்தியப்படும். அது கல்வியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

இந்தியாவில் மொத்தம் 22 மொழிகள் அங்கீகரிப்பட்டிருக்கின்றன. அத்தனை மொழிகளையும் தங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ள, மொழிபெயர்ப்புக்கான கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் போன்ற பயன்பாட்டுக் கருவிகளும் நமக்குக் கைவசம் இருக்கின்றன. ஒரு பத்தியைப் புகைப்படம் எடுத்துப் பதிவேற்றினாலே 99 சதவிகிதம் துல்லியமாக அவை நமக்கு மொழிபெயர்த்துத் தருகின்றன.

இந்தியாவினுடைய பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடத் தொடங்கியது. பல்வேறு மொழிகளுக்கும் இப்படியான அங்கீகரிக்கப்பட்ட தளங்கள்தான் தேவையே தவிர, ஒற்றை மொழியை எல்லோரும் பழக வேண்டும் என்பதல்ல.

பாரதிய ஜனதா கட்சியின் ஆங்கில எதிர்ப்பு அல்லது ஆங்கில வெறுப்பு என்பது ஆர்.எஸ்.எஸ் அதிகார மையத்தின் அறிவியல் எதிர்ப்பிலிருந்து கிளைத்தது. அறிவியலை எதிர்க்கும் காரணத்தால்தான் இவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்கிறார்கள். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆங்கிலத்தில்தான் நமக்கு கிடைக்கின்றன. அதனாலேயே பெரும்பாலான நாடுகளும் ஆங்கிலத்தைத் தங்களது இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாகக் கொண்டிருக்கிருக்கின்றன. இதைச் சர்வதேச நாடுகள் மட்டுமல்ல... 2018-ல் பாரதிய ஜனதா கட்சியும்கூட ஏற்றுக்கொண்டிருக்கிறது.

“மருத்துவப் படிப்புக்கு இந்தியைப் பயிற்றுமொழியாக ஆக்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா என இந்திய மருத்துவக் கவுன்சில் ஆராய்ந்தது. அப்படிச் செய்வதற்குப் போதுமான கற்றல் உபகரணங்கள் இந்தியில் இல்லை. அதுமட்டுமன்றி அவ்வப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப மருத்துவப் பாடங்களைத் திருத்தியமைக்க வேண்டும். அதற்கான தரவுகள் பெருமளவில் ஆங்கில மொழியில்தான் இருக்கின்றன. முன்னேறிய நாடுகளிலும் அண்டை நாடுகளிலும் மருத்துவக் கல்வி ஆங்கில மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது என்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஆங்கிலத்தில் பயிற்றுவிப்பது உலக அளவிலான வாய்ப்புகளையும் அனுபவத்தையும் அவர்களுக்குத் தருகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு மருத்துவக் கல்வியை இந்தியில் வழங்குவதில்லை என இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவுசெய்திருக்கிறது” என நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 2018-ல் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

JP Nadda's Remarks
JP Nadda's Remarks

நட்டா சொன்னது முழுக்க முழுக்க அத்தனை கல்விக்குமே பொருந்தும். இந்திக்கு வாய்ப்புகளை வழங்கும் ஆற்றல் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் சொன்ன அதே கருத்துக்கு மாறாகத்தான் தற்போது அமித்ஷா பேசியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி தற்போது பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களின் அடிப்படைச் சித்தாந்தங்களில் ஒன்றான அறிவியல் எதிர்ப்பைக் கொண்டுவருவதற்கே இவை அத்தனையும் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால்தான் ஆங்கிலத்தையும் அறிவியலையும் வெறுக்கின்ற ஒருவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களது செயல்பாடுகளுக்கு அறிவியலற்ற தொழில்நுட்பம் தேவைப்படுகிறது என்பதால் அறிவியலை அழிக்க அதன் மொழியையும் அழிக்கும் நோக்கத்தில் இருக்கிறார்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தங்களது ஒற்றை ஆட்சிமொழியாக ஆங்கிலத்தைக் கொண்டிருக்கையில் வல்லரசுக் கனவில் இருக்கும் நாம் ஏன் ஒற்றை மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பது இவர்களது வாதம்.

ஆனால், ஐக்கிய நாடுகளை ஒருங்கிணைத்த அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமுமே பெரும்பான்மையாக ஆங்கிலம்தான் பேசுகிறது. இந்தியா, அமெரிக்காவைப்போல ஒற்றைத் தேசமும் அல்ல, இந்தியாவில் மாநிலங்கள் அத்தனையிலும் இந்தி பேசப்படவும் இல்லை.

Ravikumar MP
Ravikumar MP

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் எனதான் அரசியலமைப்புச் சட்டமே குறிப்பிடுகிறது. அதனால் இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் குறிப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.

அது பிரிவினைக்குதான் வழிவகுக்கும். பாகிஸ்தான் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்கப்போய்தான் கிழக்கு வங்காளம், பங்களாதேஷாகப் பிரிந்தது, இலங்கையில் ஆயுதப் போராட்டம் உருவாக வேராக இருந்தது அங்கே தமிழ் ஒதுக்கப்பட்டு சிங்கள மொழி ஒற்றை ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதுதான். இப்படி ஒற்றை அடையாளத்தைத் திணிக்க முற்பட்ட எல்லா நாடுகளிலும் பிரிவினைவாதம்தான் தலைதூக்கியிருக்கிறது. அமித்ஷா பிரிவினைவாதத்துக்குதான் வழிவகுக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு