Published:Updated:

`ஆபரேஷன் காஷ்மீர்...’ அரங்கேற்றிய தளபதிகள்!

பிரதமர் மோடியின் ‘ஆபரேஷன் காஷ்மீர்’ செயல்திட்டத்துக்கான ‘கவுன்ட் டவுன்’, கடந்த ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கியது. கடைசி நிமிடம் வரை இந்த ஆபரேஷன் குறித்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

காஷ்மீர்
காஷ்மீர்

சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் என அதிகாரிகள் ஒருசிலர் இந்த ஆபரேஷனில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

1987 பேட்ச் சத்தீஸ்கர் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர், இதற்கு முன்பு பிரதமரின் இணைச் செயலாளராகப் பணியாற்றியவர். `ஆபரேஷன் காஷ்மீர்’ குழுவில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்த நடவடிக்கையில் சட்டரீதியாக இருக்கக்கூடிய சிக்கல்களை ஆய்வுசெய்து, அதற்கான ஆலோசனை வழங்கும் பொறுப்பு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் அளிக்கப்பட்டது. சட்டம் மற்றும் நீதித்துறைச் செயலாளரான அலோக் ஸ்ரீவஸ்தவ், கூடுதல் செயலாளரான ஆர்.எஸ்.வர்மா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால், மத்திய உள்துறைச் செயலாளரான ராஜிவ் கௌபா உள்ளிட்டோர் அடங்கிய சட்ட நிபுணர்களுடன் ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்தினார்.

மோடி
மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்த்தை அளித்துவந்த பிரிவு 370-ஐ நீக்குவது, அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றுவது என்கிற செயல்திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அமித் ஷா
அமித் ஷா

மத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தவுடன், நீண்டகாலமாகத் தங்களின் நிகழ்ச்சிநிரலில் இருந்துவரும் செயல்திட்டங்களை நிறைவேற்றுவது என்று பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நீண்டகாலத் திட்டம். தற்போது, அதைச் செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒப்படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்ததாக, சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீரில் எழக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு, அஜித் தோவல் ஸ்ரீநகருக்குச் சென்று மூன்று நாள்கள் அங்கு தங்கியிருந்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

அஜித் தோவல்
அஜித் தோவல்

அதைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரையை முடித்து பக்தர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்வது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் அங்கிருந்து திரும்பச் சொல்ல வேண்டும் என்கிற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக 100 மத்திய துணை ராணுவப் படைகள் அங்கு அனுப்பப்பட்டன.

பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகம் ஆகியவற்றுடன் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் நேரடித் தொடர்பில் இருந்துள்ளார். காவல்துறை, ராணுவம், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சாட்டிலைட் போன்களை வழங்க முடிவுசெய்யப்பட்டது. ராணுவத் தளபதி, உளவு அமைப்புகளின் தலைவர்கள், மத்திய துணை ராணுவ அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் மத்திய உள்துறைச் செயலாளர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்த எல்லா நடவடிக்கைகள் பற்றிய எந்தத் தகவலும் கசிந்துவிடாமல், ரகசியம் காக்கப்பட்டது. எல்லாவற்றையும் முடிவு செய்த பிறகு, ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு ஜம்மு-காஷ்மீர் மாநிலக் காவல்துறை டி.ஜி.பி-க்கு அவசர உத்தரவைப் பிறப்பித்தார், தலைமைச் செயலாளர். செல்போன், தொலைபேசி சேவைகளைத் துண்டிப்பது, 144 தடையுத்தரவைப் பிறப்பிப்பது, முக்கியத் தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இன்னொருபுறம், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பி.ஜே.பி-யின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகப் பிற கட்சிகளின் எம்.பி-க்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளும் அமித் ஷா தலைமையில் நடந்துள்ளன. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவது என்பதற்கான மசோதா ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் அதிரடியாகத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிமிடம்வரை அதுகுறித்த தகவல்கள் மிக மிக ரகசியமாகவே இருந்தன.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, இந்த ஆபரேஷன் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி ஆகியோரைச் சந்தித்து விரிவாக விளக்கியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

‘ஆபரேஷன் காஷ்மீர்’ குறித்து அமைச்சர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதி காலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான், பல அமைச்சர்களுக்கே அது பற்றிய விவரம் தெரியவந்ததாம். இவ்வளவு ரகசியமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டதுதான், இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.