Published:Updated:

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இலவசம்... ஏழைத் தொழிலாளர்களுக்கு கட்டணம்... இது நீதியா இந்திய அரசே?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழைத்து வரப்பட்ட காட்சி
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழைத்து வரப்பட்ட காட்சி

லாக்டௌன் அறிவிக்கப்பட்டதால், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் புலம் பெயர் தொழிலாளர்கள் பரிதவித்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா இத்தாலி, அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடவில்லை. ஆனாலும், நீடிக்கும் ஊரடங்கு மக்களை வெகுவாகவே பாதித்துள்ளது. ஏழைகள் நிறைந்த இந்தியாவில், அன்றாடங்காய்ச்சிகள்தான் அதிகம். அன்றாடம் வேலை பார்த்து, அந்தக் கூலியில் குடும்பம் நடத்தும் குடும்பங்கள் நிறைந்த நாடு இந்தியா. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை விட, ஊரடங்குதான் மக்களை அதிகம் பாதித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தேவையிலிருந்து, அனைத்து விஷயங்களுக்குமே மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். மத்திய அரசு, ஊரடங்கு என்ற ஒரு விஷயத்தைக் கையிலெடுத்து கொரோனாவைக் கட்டுப்படுத்தி விட்டதாகச் சொல்கிறது. ஆனால், சாமானிய மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்தது என்று கேட்டால் பூஜ்யமே. ரேஷன் கடைகளில் பொருள் வழங்குவதோடு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டதாக மத்திய அரசு கருதுகிறது. மாநில அரசு மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வழங்குகிறது. மத்திய அரசு ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்துகிறது. நிதியுதவி என்ற பெயரில் இந்த உதவிகள் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வழியாக மக்களுக்கு கிடைத்துள்ளன. இந்தக் கொரோனா காலத்திலும் மோடி அரசு சாமானிய மக்களைக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை என்றே பொருளாதார நிபுணர்களும் அரசியல் விமர்சகர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

புலம்பெயர்த் தொழிலாளர்கள்
புலம்பெயர்த் தொழிலாளர்கள்

இந்தியாவில் மார்ச் 24-ம் தேதி லாக்டெளன் திடீரென்று அறிவிக்கப்பட்டது. இந்த லாக்டௌன், புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்களைத் திணறடித்தது என்றே சொல்ல வேண்டும். என்ன ஏதுவென்று யோசிக்கும் முன்னரே, லாக்டௌன் அறிவிக்கப்பட்டதால், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் புலம் பெயர் தொழிலாளர்கள் பரிதவித்தனர். கால்நடையாகவே புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் அதில் பலர் உயிரையும் இழந்துள்ள சம்பவமும் நிகழ்ந்தது. தற்போது, மூன்றாவது முறையாக இந்தியாவில் லாக்டௌன் அறிவிக்கப்பட்ட பிறகு, புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயில்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள், மூலம் சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களிடத்திலிருந்து டிக்கெட் தொகையும் வசூலிக்கப்படுகின்றன. முதலில் இந்தத் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலங்களின் இணையதளத்தில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி, பதிவு செய்பவர்களிடத்தில் மாநில அரசுகள் டிக்கெட் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளும். இந்தப் பணம் ரயில்வேக்கு செலுத்தப்படும். மாநில அரசுகள் சார்பாக, பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். ரயிலில் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே ரயில்வே சார்பாக உணவு வழங்கப்படுகிறது.

பல நாள்களாக வேலை இல்லாத நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களிடத்தில் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவது நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், `ஏற்கெனவே நொந்து போயுள்ள இந்த மக்களிடத்திலிருந்து டிக்கெட் கட்டணம் வசூலிப்பது என்பது வெட்கக் கேடான செயல்' என்று கடுமையாகச் சாடியுள்ளார். வளைகுடா நாடுகளில் தவித்த இந்தியர்களை இந்திய அரசு மீட்ட சம்பவத்தையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது. வளைகுடா, ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்களிடத்தில் இந்திய அரசு எந்தவித விமானக் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. அவர்களை முற்றிலும் இலவசமாகவே மீட்டு வந்தது.

வளைகுடா தொழிலாளர்கள்
வளைகுடா தொழிலாளர்கள்

வளைகுடா இந்தியர்களுக்கு ஒரு நியதி உள்நாட்டில் தவிக்கும் மக்களுக்கு ஒரு நியதி என்கிற இரட்டை நிலைதான் இந்திய அரசிடம் காணப்படுகிறது. மாநில அரசுகளே புலம் பெயர் தொழிலாளர்களிடத்தில் ரயில் கட்டணம் வசூலித்து தர வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணச் செலவை ஜார்க்கண்ட் அரசே ஏற்கும் என்று அதிரடியாக அறிவித்துவிட்டார். புலம் பெயர் தொழிலாளர்கள் மீது மாநில அரசுகள் காட்டும் அக்கறை கூட மத்திய அரசிடத்தில் இல்லையென்பதைதான் இது காட்டுகிறது.

லாக்டௌன் நீக்கப்பட்ட பிறகும், லட்சக்கணக்கான இந்தியர்களை வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய விமானப்படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் மீட்டு வரப் போகின்றன. அப்போது, அவர்களிடத்தில் இந்திய அரசு கட்டணம் வசூலிக்குமா? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டும் இத்தகைய சலுகை வழங்கிவிட்டு, உள்நாட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடத்தில் கட்டணத்தை வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசின் ஓரவஞ்சனைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sonia gandhi | Rahul Gandhi
Sonia gandhi | Rahul Gandhi
AP

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ``1947-ம் ஆண்டுக்குப் பிறகு புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் மக்களை இப்படியா நடத்துவது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும். இதற்காக , ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சித் தலைமையும் பணிபுரிய உள்ளது. இக்கட்டான சூழலில் தேசத்துக்கு காங்கிரஸ் கட்சி செய்யும் சிறிய உதவி இது '' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு