Published:Updated:

பஞ்சமி நில மீட்புப் போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை... 25-ம் ஆண்டு நினைவு தினம்!

பல போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருந்தாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் போராட்டங்கள் 90-களுக்குப் பிறகே நடந்தன. 1994-ம் ஆண்டு, அக்டோபர் 4-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் காரணையில் நடந்த பஞ்சமி நில மீட்புப் போராட்டம் மிக முக்கியமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நான் உன்னை நேசிக்கிறேன்; திருவள்ளுவர் தமிழை நேசித்ததைப்போல, அயோத்திதாசர் பௌத்தத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன்; சகஜானந்தா கல்வியை நேசித்ததைப்போல, ரெட்டைமலை சீனிவாசன் தன்மானத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் வெண்மணிமக்கள் உரிமையை நேசித்ததைப்போல, ஜான் தாமஸ், ஏழுமலை நிலத்தை நேசித்ததைப் போல'' என்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பியுமான துரை.ரவிக்குமார் ஒரு கவிதை எழுதியிருப்பார்.

அப்படி நிலமீட்பு, பஞ்சமி நிலப் போராட்டம் என்றாலே நினைவுக்கு வருபவர்கள் இருவர்தான் ஒருவர் ஜான் தாமஸ், மற்றொருவர் ஏழுமலை.

Land
Land

யார் இந்த ஜான் தாமஸ், ஏழுமலை... அவர்கள் செய்தது என்ன?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் நில உரிமைப் போராட்டம்தான். நிலம் இழந்ததாலேயே வேறொருவர் நிலத்தில் அவர்களின் ஆணைக்குட்பட்டு, அடங்கி ஒடுங்கி வாழவேண்டிய சூழல். இல்லை அப்படி அவர்கள் கடைசி வரை கை கட்டி நிற்க வேண்டுமானால் அவர்களிடம் நிலங்கள் இருக்கக்கூடாது. என்பதே ஆதிக்கவாதிகளின் மன எண்ணம். அப்படி, ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழகத்தில் நிலம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்ட பிறகு அவர்கள் அடைந்த கொடுமைகள் ஏராளம். வேலைக்குச் சரியான கூலி கிடையாது. தேவைப்படும் நேரங்களில் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்களால் அதைக் கட்ட இயலாத சூழலை உருவாக்கி பரம்பரை பரம்பரையாய் அடிமையாக நடத்திய கதைகள் ஏராளம்

வரிக்கு மேல் வரி, விவசாயம் செய்ய தண்ணீர் திறந்துவிடுவது கிடையாது, கட்டிய பணத்துக்கு ரசீது கொடுப்பது கிடையாது என, கொஞ்சம் நிலம் வைத்திருப்பவர்களின் நிலையோ அதோகதிதான். எப்படியாவது அந்த நிலத்தையும் கைப்பற்ற நடக்கும் முயற்சிகள் அதிர்ச்சியூட்டுபவை. அப்படி தங்களின் சாதிய ஆதிக்கத்தால் மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். இவர்களுடன் நம்மால் போராட முடியாது என நிலத்தைக் கொடுத்தவர்களும் ஏராளம்.

J. H. A. Tremenheere
J. H. A. Tremenheere

இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான். ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களுக்கு ஏகப்பட்ட சட்டதிட்டங்களை விதித்தார்கள் ஆங்கிலேயர்கள். பட்டியலின மக்களிடமிருந்து வேறு யாரும் நிலத்தை வாங்கினால், அது செல்லாது. விஷயம் தெரிந்தால் அந்த நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது...என ஏகப்பட்ட கடும் விதிமுறைகள் இருந்தும், சட்டத்துக்குப் புறம்பாகப் பட்டியலின மக்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பறிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலம் செல்லச் செல்ல, இது தங்களின் நிலம் என்பதை மறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தெரிந்தவர்கள் பேசினாலும் அவர்கள் கடும் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு இந்திய அளவில் எழுந்த தலித் புரட்சியின் விளைவாக, பட்டியலின மக்களின் உரிமைப் போராட்டங்கள் மெல்ல துளிர்விடத்தொடங்கின. அதற்கு முன்பு பல போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருந்தாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் போராட்டங்கள் 90-களுக்குப் பிறகே நடந்தன. அப்படி 1994-ம் ஆண்டு, அக்டோபர் 4-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் காரணையில் நடந்த போராட்டம் மிக முக்கியமானது.

Ambedkar
Ambedkar

அப்போதைய, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு அருகே இருந்த `காரணை' எனும் கிராமத்தில், 633 ஏக்கர் பஞ்சமி நிலம் பிற சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அங்கு வாழ்ந்த 300 பட்டியலினக் குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் போராட்டத்துக்காக, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காரணைக்குப் படையெடுத்தனர். மொத்தமான ஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து 4.5 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டது. அந்த நிலத்தை உழுது அம்மக்கள் தம் உரிமையை நிலை நாட்டினர்.

மக்களின் எழுச்சியைப் பொறுக்காத ஆதிக்க சக்திகள், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களையும் அவர்களால் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையையும் அகற்றினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆங்காங்கே ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் வெடித்தன. பலர் கைது செய்யப்பட்டனர். அந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவக் கோரியும் அக்டோபர் 10ம் தேதியன்று செங்கல்பட்டு துணை-ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Ambedkar statue
Ambedkar statue

மக்களின் எழுச்சியைப் பொறுக்க முடியாத காவல்துறை, போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஏழுமலை மற்றும் காரணை கிராமத்தைச் சேர்ந்த ஜான் தாமஸ் ஆகிய இருவரும் கொல்லப்படனர். ஏழுமலைக்குத் திருமணம் ஆகவில்லை. ஜான் தாமஸுக்கு ஒன்பது மாதக் கைக்குழந்தை இருந்தது. அவர்கள் இருவர் தவிரவும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது. பட்டியலின மக்களுக்கான இயக்கங்கள் போராட்டங்களில் இறங்கினர். அதன் பிறகே பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக அரசு ஆணையம் ஒன்றை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் பிறர் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்தது. நிபந்தனைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து சட்டமன்றத்திலே அமைச்சர் பேசினார். 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், பஞ்சமி நிலங்கள் தொடர்பாக விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.மருதமுத்து தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. பஞ்சமி நிலம் மீட்புக்காகவே பல இயக்கங்கள் தோன்றின. இன்னும் உரியவர்களுக்கு நிலம் மீட்டுக் கொடுக்கப்படாவிட்டாலும்... வழக்குகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் எனப் பல வகைகளில் அதற்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

Protest
Protest

அந்தப் போராட்டங்களின் கலை வடிவமாகவே இயக்குநர் ரஞ்சித் காலா திரைப்படம் எடுத்தார். அந்தப் படம் நில உரிமை குறித்துப் பேசியது. அதைத் தொடர்ந்து தற்போது நேரடியாக பஞ்சமி நிலம் குறித்து இயக்குநர் வெற்றிமாறனின் அசுரனின் படம் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல தளங்களிலும் பேசு பொருளாகியிருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்த ஜான் தாமஸின் குரல்வளை துப்பாக்கித் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகே பஞ்சமி நிலம் குறித்தான உரையாடல்கள், போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இன்று, அது பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

தன் உயிர் இழந்து மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஜான் தாமஸ், ஏழுமலை இருவரையும் இந்நாளில் நினைவுகூர்வோம்.

`அசுரன்’ படம் பேசும் `பஞ்சமி நிலம்...' யாருக்கு எதற்காகக் கொடுக்கப்பட்டது?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு