Election bannerElection banner
Published:Updated:

``சொந்த நாட்டில் அகதியாக அவதிப்படுகிறோம்!'' - தேர்தலைப் புறக்கணிக்கும் செங்குன்றம் பகுதி மக்கள்

தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

''பத்திரப்பதிவே தடைப்பட்டு நிற்பதால், புதிதாக வீடு வாங்கவோ, வீட்டை விற்கவோ முடியவில்லை. அவசரத் தேவைக்கு வீட்டை அடமானம்வைத்து வங்கிக் கடன் பெறக்கூட வழியில்லாமல் தவித்துவருகிறோம்'' என்று குமுறுகின்றனர் செங்குன்றம் பகுதி மக்கள்.

தமிழருவி மணியன், மன்சூர் அலிகான், கருணாஸ், அர்ஜுனமூர்த்தி என அடுத்தடுத்து 'தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பை வெளியிட்டுவரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் நகர் மற்றும் கணபதி நகர் குடியிருப்புவாசிகளின் 'தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு' வித்தியாசமானது!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக்கூறி, 'ஈஸ்வரன் நகர் மற்றும் கணபதி நகர்' பகுதிகளில் வீட்டுமனைகளைப் பத்திரப் பதிவு செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை அமலில் இருந்துவருகிறது. ஆனால், பட்டா, சிட்டா என உரிய ஆவணங்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அனுமதியோடும் கட்டப்பட்டுள்ள வீடுகளும் இந்தத் தடை உத்தரவால், பெரிதும் பாதிக்கப்படுவதாக பகுதி பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

வீடுதோறும் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு
வீடுதோறும் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு

தடை உத்தரவை விலக்கக் கோரி அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நீதிமன்றப் படியேறி அலுத்துப்போன இப்பகுதி மக்கள், தடாலடியாக 'தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பை வெளியிட்டு வீடுதோறும் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்துவந்தனர். இந்தநிலையில், ஈஸ்வரன் நகர் - கணபதி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை (17-3-2021) திடீரென 'அடையாள உண்ணாவிரதப் போராட்ட'த்திலும் ஈடுபடவே அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, பொதுமக்களிடம் பேசியபோது, ''இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, இந்தப் பகுதி முழுமைக்குமே பத்திரப்பதிவு செய்யக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி எது, ஆக்கிரமிப்பு இல்லாத பகுதி எது எனப் பிரித்தறியாமல் ஒட்டுமொத்தமாக தடை அமலில் இருப்பதால், கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகிறோம்.


``பத்து ரூபாய்க்கு காபி விற்றது குற்றமா?”அத்துமீறிய காவல்துறை; பொங்கும் வியாபாரி

வீட்டை விற்கவும் முடியவில்லை. அவசரத் தேவைக்கு வீட்டை அடமானம் வைத்து வங்கிக்கடன் பெறக்கூட வழியில்லாமல் தவித்துவருகிறோம். இதனால், வெளியில் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படுகிறோம். சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய பிறகும், சொந்த நாட்டில் அகதிகள்போல அவதிப்பட்டு வருகிறோம். எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்படாத சர்வே எண்களின் உட்பிரிவு பத்திரப்பதிவுகளைத் தடை செய்யாதீர்கள் எனக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு செய்துவிட்டோம்.

எங்களது தொடர்ச்சியான முயற்சியால், தாசில்தார் மூலம் கூட்டு சர்வே செய்து விமானப்படை நிலம் எது, பொதுமக்கள் நிலம் எது எனப் பிரித்தறிந்து கடிதமும் வாங்கிவிட்டோம். ஆனாலும் இன்னமும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான தடை விலக்கப்படவில்லை. நாங்களும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே சார்பதிவாளர், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் என்று கோரிக்கை மனுக்களோடு அலைந்து திரிவது... அதனால்தான் 'தேர்தலைப் புறக்கணிக்கிறோம்' என்று சொல்லி உண்ணாவிரதத்தில் அமர்ந்துவிட்டோம். இதற்குப் பிறகும் எங்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையென்றால், எங்கள் வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டையும் கலெக்டரிடமே ஒப்படைக்க முடிவுசெய்துவிட்டோம்!'' என்றனர் கோபமாக.

மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்

இதற்கிடையே, தேர்தல் புறக்கணிப்பு - உண்ணாவிரத போராட்டம் பற்றிய தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பேனர்களை அப்புறப்படுத்தியதோடு, பொதுமக்களையும் கலைந்து செல்ல உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து 'ஈஸ்வரன் நகர் - கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்க' பொருளாளர் அபுதாஹிர் நம்மிடம் பேசும்போது, ``1,200 மனைகள் இந்தப் பகுதியில் உள்ளன. அவற்றில் 550 வீடுகள் இருக்கின்றன. இதில், எந்த சர்வே எண்ணின் உட்பிரிவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை குறிப்பிடாமல், இப்படியொரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் வந்த பிரச்னை இது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஓர் அதிகாரி எழுதிய கடிதத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல், அவசரகதியில் பிறப்பித்த தடை உத்தரவால் தினம் தினம் நாங்கள் அல்லல்பட்டுவருகிறோம். இத்தனை நாள்களாக நாங்கள் மனு கொடுத்துப் பார்த்து ஓய்ந்துவிட்டோம். அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் 'புறம்போக்கு இடத்தில் குடியிருப்பது' போன்ற அவமானம் எங்களுக்கு ஏற்படுகிறது.

செய்திக்கு பணம் கொடுக்கும் பேஸ்புக்... ராபர்ட் முர்டோக்  நிறுவனத்தோடு கூட்டணி!

எனவே, வேறு வழியில்லாமல்தான் இப்போது 'தேர்தல் புறக்கணிப்பு' என்ற முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னர்தான் பம்மதுகுளம் பஞ்சாயத்து தலைவரில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை அனைவரும் வந்து பிரச்னையைத் தீர்த்துவைப்பதாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், காவல்துறை அதிகாரிகளோ 'கூட்டம் கூடாதீர்கள் கலைந்துபோய்விடுங்கள், வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள கறுப்புக்கொடியையும் இறக்கிவிடுங்கள்' என மிரட்டுகிறார்கள். எங்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுகிற மாதிரியான உறுதிமொழி கிடைக்காதவரையில் நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை!'' என்றார் உறுதியாக.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்த விவகாரம் குறித்து விளக்கம் பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவைத் தொடர்புகொண்டோம். செல்பேசியை எடுத்த ஆட்சியரின் உதவியாளர், 'ஐயா மீட்டிங்கில் இருக்கிறார்... மீட்டிங் முடிந்ததும் உங்களிடம் பேசுவார்' என்றார். சொன்னதுபோல், சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு நம்மிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ``பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில், பத்திரப் பதிவு செய்வதற்கான தடை கடந்த சில ஆண்டுகளாகவே இருக்கிறது. ஏற்கெனவே பகுதி மக்கள் தெரிவித்த புகார் என் கவனத்துக்கும் வந்துள்ளது. பத்திரப் பதிவுக்கான தடையை விலக்குவதற்கான நடவடிக்கைகளும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு, அது குறித்த ஆய்வுப் பணிகள் நடைமுறையில் இருந்துவருகின்றன. எனவே, நிச்சயம் நல்லதொரு தீர்வு எட்டப்படும். அதுவரையில் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும்!'' என்கிறார் கோரிக்கையாக!


அதேநேரம், உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்துக்கு வந்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள், 'இது தேர்தல் நேரம் என்பதால், முடிவுகளை எடுப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தேர்தல் முடிவுற்றதும் ஆட்சியர் அனுமதியோடு விரைவில் உங்கள் பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுங்கள்' என போராட்டக்காரர்களிடம் உறுதிமொழி கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்!
அதிகாரிகளின் இந்த உறுதிமொழி, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளாக இல்லாமல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையிலேயே நல்லதொரு தீர்வை விரைவில் கிடைக்கப்பெறச் செய்வதாக இருக்க வேண்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு