Election bannerElection banner
Published:Updated:

சுடுகாட்டுக்கு பாதையில்லை; தடையை அகற்றி பிணத்தை தூக்கிச் சென்ற பெண்கள் - முதல்வர் தொகுதியில் அவலம்

சுடுகாடு
சுடுகாடு ( எம். விஜயகுமார் )

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மசகாளிப்பட்டி கிராம மக்கள் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மசகாளிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனியார் ஒருவர் கம்பி வேலி அமைத்து அடைத்து விட்டதால் இந்த கிராம மக்கள், உயிரிழந்தோரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

அப்பு
அப்பு

இதுபற்றி மசகாளியூரைச் சேர்ந்த அப்பு நம்மிடம் பேசுகையில், ''முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மசக்காளிப்பட்டி கிராமம் எங்களுடைய சொந்த ஊரு. நாங்க நாடார் சமூகத்தைச் சேர்ந்தவங்க. எங்க ஊர்ல 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங்க எல்லோரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. மரம் ஏறி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம்.

எங்க ஊரிலிருந்து வடக்கு புறத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் எங்க சமூகத்துக்கு உரிதான சுடுகாடு இருக்கு. இந்த சுடுக்காட்டில் தான் எங்க முன்னோர்களை அடக்கம் செய்திருக்கிறோம். அந்த சுடுகாட்டிற்கு மாணிக்கம் என்பவரின் காட்டின் வழியாகத் தான் செல்ல வேண்டும். மாணிக்கம் அந்த காட்டை விற்பதாக தெரிந்ததையடுத்து அவரிடம் 'நீங்கள் யாருக்கு காட்டை விற்றாலும் நாங்கள் சுடுகாட்டிற்கு செல்வதை தடுக்கக் கூடாது' என கூறினோம். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

ஆனால், கடந்த வருடம் காடு முழுவதும் கம்பி வேலி போட்டு விட்டார்கள். நாங்கள் சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்துச் செல்ல முடியாமல் அவதி படுகிறோம். கடந்த வருடம் அருக்காணி என்ற பெண் இறந்து விட்டார். அவரது உடலைக் கொண்டு செல்ல முடியாமல் ரோட்டில் பிணத்தை வைத்து தர்ணா செய்தோம். பிறகு கம்பி வேலியை காவல்துறை அவிழ்த்த எங்களை அனுமதித்தனர்.

தேரைத் தூக்கும் பெண்கள்
தேரைத் தூக்கும் பெண்கள்

கடந்த வாரம் உடல் நலக் குறைவால் 75 வயது மதிக்கத்தக்க சிலம்பாயி என்பவர் இறந்து விட்டார். அந்த பாட்டிக்கு தேர் கட்டி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றோம். மாணிக்கத்தின் காட்டில் கம்பி வேலி போட்டிருந்ததால் சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் செல்ல முடியவில்லை. கடந்த ஒரு வருடமாக பல அதிகாரிகளை சந்தித்து சொன்னாலும் எங்களுடைய புகாரை காது கொடுத்துக் கூட கேட்க மறுக்கிறார்கள். அதையடுத்து சாலையில் பிணத்தை வைத்து மறியல் செய்தோம். மாணிக்கம் முதல்வரின் சமூகம் என்பதால் நங்கவல்லி போலீஸார் எங்களை மிரட்டுகிறார்கள்” என்றார்.

அதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த சிவகாமி என்ற பெண் பேசுகையில், ``போலீஸ்காரங்க காட்டுக்காரங்களுக்கு ஆதரவாக பேசுறாங்க. எங்களுக்கு ஆதரவாக பேசவில்லை. எங்க ஊருல இருக்கிற ஆண்களை மிரட்டியதால் அவுங்க பயந்துட்டு ஓடிட்டாங்க. நாங்க பொம்பளைங்க எல்லோரும் சேர்ந்து கம்பி வேலியை அகற்றி சுடுகாட்டிற்கு பிணத்தை கொண்டு போய் அடக்கம் செய்தோம். நாங்க சுடுகாட்டிற்கு போவதற்கு நிரந்தரமாக வழி செய்து கொடுக்க வேண்டும்'' என்றார்.

சுடுகாடு
சுடுகாடு

இதுபற்றி நங்கவல்லி காவதுறை உதவி ஆய்வாளர் ராமசாமியிடம் கேட்டதற்கு, ''அந்த நிலம் மாணிக்கம் என்பவரின் பட்டா நிலம். அவர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டார். அவர் காட்டைச் சுற்றி கம்பி வேலி போட்டு விட்டதால் மசகாளிப்பட்டி மக்கள் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை. இதற்கு வருவாய்துறை மூலமாக பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு அந்த மக்கள் முயற்சி செய்யாமல் யாராவது இறக்கும் தருணத்தில் மட்டும் பிணத்தை ரோட்டில் வைத்து மறியலில் ஈடுபடுவது தவறானது. மற்றபடி நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு