Published:Updated:

இன்றோடு சிறையில் 30 ஆண்டுகள் நிறைவு செய்த பேரறிவாளன்... மு.க.ஸ்டாலினிடம் மன்றாடும் அற்புதம்மாள்!

அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்
அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்

பேரறிவாளனின் சமீபத்திய பரோலைத் தொடர்ந்து, அவர் சிறைவாசம் 31-வது ஆண்டை எட்டியிருக்கும் இந்தச் சூழலில், அவரது நிரந்தர விடுதலைக்கான குரல்கள் மேலும் வலுப்பெற்றிருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சென்னை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், இவ்வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

ஒரு தலைமுறைக் காலம் சிறையில் கழித்துவிட்ட, திரும்பப் பெறமுடியாத தன்னுடைய இளமையை இழந்துவிட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்காகப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடங்கி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடியும், குரல் எழுப்பிக் கொண்டும் இருக்கும் நிலையில், பேரறிவாளனின் சிறைவாசம் 31-ம் ஆண்டை எட்டியிருப்பது, இப்பிரச்னையில் மேலதிக கவனத்தை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் விசாரணை நடத்த வேண்டும், விசாரணை முடிந்து நாளை காலை அனுப்பி வைக்கப்பட்டுவிடுவார் என்று, 30 ஆண்டுகளூக்கு முன்பு அதாவது, 1991 ஜூன் 11 அன்று இரவு சிபிஐ-யின் சிறப்புப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறி அழைத்துச்சென்றிருக்கிறார்கள். தங்கள் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால், அதிகாரிகளின் கூற்றை நம்பி, பேரறிவாளனை விசாரணைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், தங்கள் மகன் நாளை காலை திரும்பப் போவதில்லை என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை!

பேரறிவாளன்
பேரறிவாளன்

19 வயதில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன், இன்று 50 வயதை நெருங்கிவிட்டார். திரும்பப் பெறமுடியாத தன்னுடைய இளமையை ஒட்டுமொத்தமாக இழந்து, இதுவரையிலான தன்னுடைய வாழ்நாளில் பாதிக்கும் மேலான காலத்தைச் சிறையில் கழித்திருக்கிறார். கடும் மன அழுத்தத்தோடு, நீரிழிவு நோய், சிறுநீரகத் தொற்று போன்ற உடல்நலப் பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியபோது, சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்தப் பின்னணியில், நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய மகன் பேரறிவாளனின் உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் மே 18 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பேரறிவாளனின் சமீபத்திய பரோலைத் தொடர்ந்து, அவர் சிறைவாசம் 31-வது ஆண்டை எட்டியிருக்கும் இந்தச் சூழலில், அவரது நிரந்தர விடுதலைக்கான குரல்கள் மேலும் வலுப்பெற்றிருக்கின்றன. இந்தப் பின்னணியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காணொளி ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார்; அதில் அவர் பேசியிருப்பதாவது...

மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்
மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்
பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு - அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! #NowAtVikatan

“சிறை வாழ்க்கையையே அவன் பயனுள்ளதா பயன்படுத்திக் கொண்டான். அவன் மட்டுமே படிக்காம, சிறைவாசிகள் நிறைய பேருக்குப் படிப்பறிவு கொடுத்தான். இருந்தாலும் அவன் சுதந்திரமா வாழக்கூடிய வாழ்க்கை இல்லைங்கிறதுதான் எனக்குக் கவலையா இருக்கு. என் மகனோட இளமை, நிம்மதி எல்லாம் இந்த 30 ஆண்டுகள் சிறை வாழ்க்கைல போயிடுச்சு; ஒட்டுமொத்தமா குடும்பத்தின் நிம்மதியே போச்சு.

இந்த முப்பது ஆண்டு சிறை வாழ்க்கை என் மகனுக்குப் பலவித நோய்களைக் கொடுத்திருக்கு. அதுக்கு தொடர் மருத்துவம் அவனுக்குக் கிடைக்கல. நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன். சில மருத்துவம் அவனுக்கு அப்பப்போ கிடைச்சது. ஆனால், தொடர்ந்து மருத்துவம் பார்க்க முடியாம போச்சு. அதனால் தொடர்ந்து அவன் உடல்நிலை பாதிக்கப்படுது.

இந்த நிலையில உலகத்தையே அச்சுறுத்துற கொரோனா வந்தது. உடல்நலமில்லாத என் மகனுக்கு அதைத் தாங்குற சக்தி இல்லயேனு தவிச்சிட்டு இருந்தேன். உச்ச நீதிமன்றமே சிறைவாசிகளைக் குறைக்கணும்னு சொன்னப்போ மகிழ்ச்சி அடைஞ்சேன். உடனே அரசுக்கு விண்ணப்பிச்சேன். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என் கோரிக்கையை ஏத்துக்கிட்டாங்க. என் மகனோட உடல்நிலையை கவனிக்க வேண்டியது அவசியமா இருக்கு. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவையா இருக்கு.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

இனிமேல் என் மகன் சிறைக்குப் போகக் கூடாது. 30 ஆண்டுகள்ன்றது, எவ்ளோ பெரிய நீண்ட சிறை தண்டனைங்கிறத உணர்ந்த தாயாக நான் சொல்கிறேன் - நீங்க (முதல்வர்) இதுக்கு மேல என் மகனை சிறைக்கு அனுப்பாம பாத்துக்கணும். என் பையன் நிரபராதினு அதிகாரி தியாகராஜன், நீதிபதி கே.டி. தாமஸ், நீதியரசர் கிருஷ்ணய்யர்னு நிறைய பேர் குரல் கொடுத்தாங்க; மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனா, என் மகனுக்கு இன்னும் வெளியுலக வாழ்க்கை கிட்டல. இழந்ததெல்லாம் யாராலயும் திருப்பித் தர முடியாது. இந்த வயசான காலத்துயாவது எங்க புள்ள எங்களோட இருக்கணும்ங்கிற கோரிக்கைய அரசுக்கு வைக்கிறேன்” - அற்புதம்மாளின் குரலில் காலங்களை மீறிய வேதனையின் கனம்.

எழுவர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். எழுவர் விடுதலை தொடர்பாகச் சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

எழுவர் விடுதலை தொடர்பாக, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளனின் சிறைவாசம் 31-வது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், எழுவர் விடுதலை குறித்த நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரைக்கு