அலசல்
சமூகம்
Published:Updated:

ஒன்றிய - மாநில உறவுகள் விவாதிக்கப்பட வேண்டும்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

எஸ்.பீட்டர் அல்போன்ஸ், தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்

உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவால் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்களின் பட்டியலிலிருந்து, ‘ஒன்றிய-மாநில உறவுகள்’ என்கிற அம்சம் ஒன்றிய அரசால் நீக்கப்பட்டிருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்குமிடையே நல்ல புரிதலும் பரஸ்பர ஒத்துழைப்பும் இருக்கவேண்டியது அவசியம். மேலும், ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஒருவருக்கொருவர் மதிப்புடனும் மரியாதையுடனும் நிர்வாகத்தை நடத்துவது இன்னும் அவசியம். ஆனால், அப்படியான சூழல் நம் நாட்டில் இருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ்
எஸ்.பீட்டர் அல்போன்ஸ்

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, ஒன்றிய அரசை ‘டெல்லி சுல்தானேட்’ என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டே அழைத்தார். `இந்தியாவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கும் டெல்லியின் எஜமானத்துவம்தான் காரணம்’ என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். ஆனால், நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டுவரும் இன்றைய ஒன்றிய அரசு, மாநில அரசுகளை எப்படி நடத்துகிறது... நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஒன்றிய அரசை நோக்கி என்னென்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதைவிட மோசமான ஆட்சியாகத்தான் இவரது ஆட்சி இருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில், ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே தற்போது இருக்கும் அவநம்பிக்கை, அவமரியாதைபோல இதற்கு முன்பு இருந்ததேயில்லை.

மோடி அரசின் அணுகுமுறைகளால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கேகூட பெரும் வருத்தங்கள் உண்டு. ஆனால், கட்சிக் கட்டுப்பாடு காரணமாக அவர்கள் வாய் திறப்பதில்லை. மோடி - அமித் ஷா கூட்டணியைப் பகைத்துக்கொண்டால், முதல்வர் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் சில முதல்வர்கள் அமைதி காக்கிறார்கள். பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்வர்கள், ஒன்றிய அரசின் எஜமானத்துவத்தை எதிர்த்தால், அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகள் தங்கள்மீது பாய்ந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். அதனால், அவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.

மோடி
மோடி

அதேநேரத்தில், கொள்கை வழி நின்று, மாநில உரிமைகள் மீது நம்பிக்கைகொண்டு மாநில வளர்ச்சிக்காக சில முதல்வர்கள் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களுக்கு ஆளுநர்கள் மூலமாகப் பல நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், ஒன்றிய உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதப் பட்டியலிலிருந்து ‘ஒன்றிய-மாநில உறவுகள்’ என்கிற பொருள் நீக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உள்துறை விவகாரங் களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, காங்கிரஸின் அபிஷேக் சிங்வி தலைமையில் கூடியது. அப்போது, அந்தக் குழு விவாதிக்கவேண்டிய பொருள்களின் பட்டியலில் ‘ஒன்றிய - மாநில உறவுகள்’ என்கிற அம்சம் இடம்பெற்றிருந்தது. பின்னர், செப்டம்பர் மாதம் அந்த அம்சம் மாற்றியமைக்கப்பட்டு, உ.பி-யைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-யான பிரிஜ்லால், நிலைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். ஒன்றிய அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி இது. பொதுவாக, உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவது வழக்கம். அந்த நடைமுறையை மாற்றி, உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் சுதந்திரத்தைப் பறித்திருக்கிறார்கள்.

இது எப்பேர்ப்பட்ட சூழலில் நிகழ்ந்திருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். எங்கெல்லாம் தன்னை ஓர் அரசியல் சக்தியாக வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று பா.ஜ.க நினைக்கிறதோ, அந்த மாநிலங்களின் ஆளுநர்கள் மூலமாக, ஆளுநருக்கு வழங்கப்படாத அதிகாரங்களையும் கையிலெடுத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படச் செய்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஜார்க்கண்ட், பஞ்சாப் உட்பட சில குறிப்பிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியல் சாசனத்தை மீறிச் செயல்படுவதால், அந்த மாநிலங்களில் நிர்வாகப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் ஆளுநருக்கு எதிராக அந்த மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கடிதம் அளித்திருக்கிறார்கள்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், அரசியல் சாசனத்தின் வழிகாட்டலின்படி ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நல்ல உறவுப்பாலத்தை உருவாக்குபவராக ஆளுநர் இருக்கவேண்டும். தன்னுடைய நிறைந்த அனுபவத்தின் அடிப்படையில், மாநில அரசுக்குத் தகுந்த சமயங்களில் நல்ல ஆலோசனைகளை வழங்குபவராக ஆளுநர் இருக்கவேண்டும். மாநிலங்களில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படுகிற சூழலில், அதைத் தீர்த்துவைப்பதற்கு மாநில முதல்வருக்குத் தகுந்த உதவிகளைச் செய்யக்கூடியவராகவும் ஆளுநர் இருக்க வேண்டும். மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நிலைகுலையச் செய்கிற அரசியல் கருவிகளாக ஆளுநர்கள் இருந்தால், நம்முடைய கூட்டாட்சித் தத்துவத்தின் வேர்கள் அழுகிப்போய்விடும். உடைந்துபோன கூட்டாட்சித் தத்துவத்தை மீட்டெடுப்பது பெரும் சிரமம்.

இந்தியக் கூட்டாட்சியின் அடிப்படையே, ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் மீதும், மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசின் மீதும் இருக்கிற மதிப்பும் மரியாதையும்தான். அதைப் பாதுகாக்கும் வகையில், ஆளுநர்களின் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பணிகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டதே இந்த நாடாளுமன்ற நிலைக்குழு. அதன் அதிகாரத்தைப் பறித்து, ஒன்றிய-மாநில உறவுகள் என்கிற அம்சம் விவாதத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகளைப் பாதுகாக்கும் வகையில், ஆளுநர்களின் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் அதிகாரம் சீர்செய்யப்பட்டு, ஒன்றிய-மாநில உறவுகள் விவாதிக்கப்பட வேண்டும். அதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும்!