Published:Updated:

பியூஷ் கோயலின் கண்ணாமூச்சி ஆட்டம்! தனியார்மயமாகுமா ரயில்வே?

ரயில்வேயின் கதவுகளைத் தனியாருக்குத் திறந்துவிட '100 நாள் செயல்திட்டம்' போட்டுவிட்டு, இப்போது ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என்று கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யில்வே துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தூக்கிக்கொடுத்துவிட வேண்டுமென்பது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட நம் ஆட்சியாளர்களின் திட்டம். அது, காங்கிரஸாக இருந்தாலும், பி.ஜே.பி-யாக இருந்தாலும் இதுதான் அவர்களின் கொள்கை நிலைப்பாடு. அதற்குப் பல தடைகள் இருப்பதால், அது பெரியளவுக்கு இன்னும் சாத்தியமாகவில்லை.

ரயில்வே துறை குறித்து ஆய்வுசெய்த பிபேக் தேப்ராய் தலைமையிலான கமிட்டி, ஒட்டுமொத்த ரயில்வேயையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான பல பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது. அதை அமல்படுத்த முந்தைய பி.ஜே.பி அரசு அதீத ஆர்வம் காட்டியது.

ரயில்
ரயில்

ரயில்வே என்பது அடிப்படையில், ஒரு சேவைத் துறை. அதைக் கருத்தில்கொள்ளாமல், தனியார்மயத்தை நோக்கிப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரயில்வே தொழிலாளர்களுக்கான மருத்துவமனைகள், ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிகள், ஐ.டி.ஐ-கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. அவற்றை இழுத்துமூடுவதற்கு முந்தைய பி.ஜே.பி ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக, அரசு பின்வாங்கியது.

தனியார்மயம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும்கூட, அதற்கு எழுந்திருக்கும் எதிர்ப்பின் காரணமாக, ‘ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது’ என்று முந்தைய பி.ஜே.பி ஆட்சியில் ரயில்வே அமைச்சர்களாக இருந்த சுரேஷ் பிரபுவும், பியூஷ் கோயலும் கூறினார்கள். ஆனாலும், மீண்டும் மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ரயில்வேயைத் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ‘100 நாள் செயல்திட்டம்’ என்ற பெயரில் தனியார்மய நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டது.

ரயில்
ரயில்

``நெரிசல் இல்லா வழித்தடங்களிலும், சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள வழித்தடங்களிலும் தனியார் ரயில்கள் அனுமதிக்கப்பட உள்ளன. பிறகு, தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - ஹவுரா, ஹவுரா-சென்னை ஆகிய வழித்தடங்களிலும் தனியார் ரயில்களை அனுமதிக்கத் திட்டம் உள்ளது. ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரீமியம் கட்டண ரயில்களைத் தனியார் இயக்குவதற்கு விரைவில் ஒப்புந்தப்புள்ளிகள் கோரப்படும்” என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ரயில் டிக்கெட், ரயில்வே கால அட்டவணை போன்றவற்றை அச்சிடவும், ரயில்வே துறைக்குத் தேவையான எழுதுபொருள்களைத் தயாரித்துக்கொடுக்கவும் இயங்கிவந்த பல ரயில்வே அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகம் மூடப்பட உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. பயணச்சீட்டு வழங்கும் பணியைத் தற்போது ரயில்வே செய்துவருகிறது. அதைத் தனியாரிடம் கொடுக்கப்போகிறார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், ரயில்வே தனியார்மயம் குறித்து பல்வேறு விவாதங்களும் நடைபெறுகின்றன. ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படுவதை ஆதரிப்பவர்கள், “ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது முக்கியம். வேகத்தை அதிகரித்தால் வேளாண் பொருள்களை மிக விரைவாக நகரங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும். அதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும். தற்போது ரயில்களின் வேகம் 120 கி.மீ என அளவுக்கு இருக்கிறது. இதை 160 கி.மீ-லிருந்து 180 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

வேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை, தனியாரை அனுமதித்தால்தான் முடியும். அதற்கு முதலீடு செய்ய அரசிடம் பணபலம் இல்லாததால், தனியாரே அதைச் செய்ய முடியும். ரயில்வேயிடம் நிறைய அசையாத சொத்துகள் உள்ளன. அந்தச் சொத்துகளைத் தனியாருக்கு வாடகைக்குவிட்டு அந்தப் பணத்தை முதலீடு செய்தால் நிறைய பொருளாதார மாற்றங்களை ரயில்வே மூலமாக நாட்டுக்குக் கொடுக்க முடியும்” என்கிறார்கள்.

ஆனால், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ரயில்வே தொழிற்சங்கங்களும் தனியார்மய நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். “தனியார் ரயில்கள் வந்தால், பயணக்கட்டணமும், சரக்குக்கட்டணங்களும் கடுமையாக உயரும். அதனால், சாமான்ய மக்களுக்கு ரயில் பயணம் என்பது பகல்கனவாக மாறிவிடும்” என்று எச்சரிக்கிறார்கள்.

ரயில்
ரயில்

மேலும் அவர்கள், ``ரயில்வே என்பது ஒரு சேவைத்துறை. ஆனால், தனியாரை அனுமதித்தால் லாபத்தை மட்டுமே நோக்கமாகச் செயல்படுவார்கள். மக்களின் சேவையைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ரயில்வே துறையின் ஆதாரங்களைச் சுரண்டுவதும், அதிகபட்ச லாபம் சம்பாதிப்பதுமே அவர்களின் நோக்கமாக இருக்கும். ரயில் பாதைகளை அமைப்பது போன்ற அதிக முதலீடுகள் தேவைப்படுகிற திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு ஆர்வம் கிடையாது. தற்போது மானியம் வழங்கப்படுவதால் ரயில் கட்டணம் குறைவாக இருக்கிறது. தனியார் வந்துவிட்டால், மானியங்களை ரத்துசெய்துவிடுவார்கள். அதனால், ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும்” என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் எழுத்துமூலமாகப் பதிலளித்தார். அதில் ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களையோ, ரயில்வே துறை சார்ந்த அமைப்புகளையோ தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயில்
ரயில்

தனியார்மயம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதை அமல்படுத்துவதற்கு ஆர்வம்காட்டும் அமைச்சர் பியூஷ் கோயல், தனியார்மய நடவடிக்கைக்கு எழுந்துள்ள எதிர்ப்பால் அதை அமல்படுத்த முடியாமலும், சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தவித்துவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு